திருஞானசம்பந்தர் - தேவாரம் இயற்றிய சைவ கவிஞர்

திருஞானசம்பந்தர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில், சீர்காழி என்னும் ஊரில், அந்தணர் மரபிலே, கவுணியர் குடும்பத்திற் பிறந்தார். இவரது தந்தையார் சிவபாதவிருதயர், தாயார் பகவதி அம்மையார். இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது, தந்தையாருடன் கோயிலுக்குச் சென்றதாகவும், அங்கே குழந்தையைக் கரையில் அமரவிட்டுக் குளிக்கச் சென்ற தந்தையார், சிறிது நேரம் நீருள் மூழ்கியிருந்த சமயம், தந்தையைக் காணாத குழந்தை அம்மையே அப்பா என்று கூவி அழுததாகவும், அப்போது உமாதேவியார், சிவபெருமானுடன் இவர் முன் காட்சி கொடுத்து ஞானப்பாலூட்டியதாகவும் சொல்லப்படுகிறது. குளித்துவிட்டு வெளியே வந்த தந்தையார், பிள்ளையின் வாயிலிருந்து பால் வடிவதைக் கவனித்து, அது குறித்துக் கேட்கவே கோயிலிலுள்ள இறைவனைச் சுட்டிக்காட்டித் "தோடுடைய செவியன்" என்று தொடங்கும் தனது முதல் தேவாரத்தைத் திருஞானசம்பந்தர் பாடினார் என்பது தொன்நம்பிக்கை.

சம்பந்தமூர்த்தி சுவாமிகள் பாடிய தலங்களுள் முக்கியமான தலம் மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் ஆகும். இக் கோயிலை அவர் கரக்கோயில் எனப் பாடியுள்ளார். தமிழ்நாட்டில் கரக்கோயில் எனப்படும் ஒரே கோயில் மேலக்கடம்பூர் மட்டுமே.

ஆச்சாள்புரக் கல்வெட்டுத் தகவல்படி, திருஞானசம்பந்தரின் மனைவி பெயர் சொக்கியார். [1]

ஞானசம்பந்தப் பிள்ளையார் மூன்றாண்டு நிறையப் பெற்ற பின்னர் ஒரு நாள் காலை தந்தையாருடன் சீர்காழி திருகோயிலின் திருக்குளத்திற்குச் சென்றார். சிவபாத இருதயர் மைந்தனைக் கரையில் அமரச்செய்து நீருள் முழ்கி அகமருடஜெபம் செய்தார்.

தந்தையைக் காணாமையாலும், முன்னைத்தவம் தலைக்கூடியதாலும் திருத்தோணிச்சிகரம் பார்த்து “அம்மே! அப்பா!” என்று அழைத்தருளி அழுதருளினார். அப்பொழுது, திருத்தோணிபுரபெருமான் உமா தேவியாரோடும் விடைமிதமர்ந்து காட்சி கொடுத்தார். உவமையிலாக் கலை ஞானமும் உணர்வரிய மெய்ஞானமும் கலந்த திருமுலைப்பால் ஊட்டுவாயாக எனப்பெருமான் பணித்தார். அப்படியே பெருமாட்டியும் எண்ணரிய சிவஞானத்து இன்னமுதம் குழைத்தருளி உண் அடிசில் என ஊட்டினார். ஞானம் உண்ட பிள்ளையார் சிவஞானச்செல்வராய்த் திகழ்ந்தார்.