திருநாவுக்கரசர் (அப்பர்) - தேவாரம் இயற்றிய சைவ கவிஞர்

அப்பர் திருநாவுக்கரசு நாயனார் கி.பி ஏழாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவரும், 63 நாயன்மார்களில் ஒருவரும் ஆவார். இவரை தேவார மூவருள் இரண்டாமவர் என்றும், இறைவனிடம் பக்தி செலுத்துதலில் தொண்டை அடிப்படையாகக் கொண்டவர் என்றும் புகழ்கின்றனர். [1]

இவர் திருஞானசம்பந்தர் அப்பர் (தந்தை) என்று அழைத்தமையால்,. அப்பர் என்றும், நாவுக்கரசர் என்றும் அறியப்படுகிறார். இவர் தாண்டகம் எனும் விருத்த வகையை பாடியமையால் இவரை தாண்டகவேந்தர் என்றும் அழைக்கின்றனர். [2] திருநாவுக்கரசர் கடலூர் மாவட்டத்தில் உள்ள திருவாமூர் எனும் ஊரில் வெள்ளாளர் குலத்தில் புகழனார் மற்றும் மாதினி இணையாருக்குப் பிறந்தவர்.[3] இவருடைய இயற்பெயர் மருணீக்கியார் ஆகும். [3]இளமையில் சைவசமயத்தினை விட்டு சமண சமயத்தவரானார். சமண நூல்களைக் கற்று அம்மத தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார். அப்போது தருமசேனர் என்று அழைக்கப்பட்டார்.[3]

தருமசேனரின் தமக்கையார் திலகவதியார். இவர் சிவபக்தராக இருந்தார். அதனால் சமண சமயத்தில் தன்னுடைய தம்பி இணைந்ததை எண்ணி வருந்தி இறைவனிடம் முறையிட்டார். அதனால் தருமசேனருக்கு கடுமையான சூலை நோய் (வயிற்று வலி) [3] ஏற்பட்டது. சமண மடத்தில் செய்யப்பட்ட சிகிச்சைகள் பலனளிக்காமல் போகவும், திலகவதியாரின் ஆலோசனைப்படி தருமசேனர் "கூற்றாயினவாறு விலக்ககலீர்" எனத் தொடங்கும் பாடலைப் பாடினார்.[3] இப்பாடலால் நோய் தீர்ந்தது. அதன் பிறகு சைவ சமயத்தவராகி நாவுக்கரசர் என்று அழைக்கப்பட்டார். [3] பல்வேறு சிவாலயங்களுக்குச் சென்று தேவாரப் பதிகங்களைப் பாடினார். அத்துடன் சிவாலயங்களை தூய்மை செய்யும் பணியையும் செய்தார். இதனை உழவாரப் பணியென்று சைவர்கள் அழைக்கின்றனர். பல்வேறு சிவாலயங்களில் உழவாரப் பணிச் செய்து முன்னோடியாக இருந்தமையால், "உழவாரத் தொண்டர்" என அழைக்கப்பட்டார். இன்றும் சைவர்கள் உழவாரப் பணியின் தலைவராக நாவுக்கரசரையே கொள்கின்றனர். இவர் இறைவனை தொண்டு வழியில் வழிபட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.