சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) - தேவாரம் இயற்றிய சைவ கவிஞர்

சுந்தரமூர்த்தி நாயனார் என்பவர் சைவசமயத்தில் போற்றப்படும் சமயக்குரவர் நால்வரில் ஒருவரும், அறுபத்து மூன்று நாயன்மாரில் ஒருவரும் ஆவார்.[1] இவர் புத்தூரில் சடங்கவி சிவாச்சாரியாரின் மகளைத் திருமணம் செய்துகொள்ள இருந்தபோது சிவபெருமான் கிழவனாக சென்று தடுத்தார்.[2] பின்பு சுந்தரரின் பிறவி நோக்கம் சிவபெருமானை புகழ்ந்து பாடுவது என புரியவைத்தார். இதனை தடுத்தாட்கொள்ளுதல் என சைவர்கள் கூறுகிறார்கள். இவர் இறைவன் மீது பல தலங்களுக்குச் சென்று பாடியுள்ளார். இப்பாடல்களை திருப்பாட்டு என்று அழைக்கின்றனர்.[2] திருப்பாட்டினை சுந்தரர் தேவாரம் என்றும் அழைப்பர். [2] திருமணத்தினை தடுத்து சுந்தரரை அழைத்துவந்த சிவபெருமானே பரவையார், சங்கிலியார் என்ற பெண்களை திருமணம் செய்துவைத்தார்.[2]

இவர் வாழ்ந்தது கி. பி. எட்டாம் நூற்றாண்டளவிலாகும்.[1] இவர் பாடிய தேவாரங்கள் 7 ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன. [1] இவர் இயற்றிய திருத்தொண்டத் தொகை என்னும் நூலில் 60 சிவனடியார்கள் பற்றியும், 9 தொகை அடியார்கள் பற்றியும் குறிப்புகள் உள்ளன. இந்நூலின் துணை கொண்டே சேக்கிழார் பெரியபுராணம் எனும் நூலை இயற்றினார். அதில் சுந்தர மூர்த்தி நாயனாரையும், அவரது பெற்றோரான சடையனார், இசை ஞானியார் ஆகிய மூவரையும் இணைத்து சிவதொண்டர்களின் எண்ணிக்கையை 63 என கையாண்டார்.

சுந்தரமூர்த்தி நாயானார் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூர் எனும் ஊரில் சடையனார் - இசைஞானியார் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவர் ஆதி சைவர் எனும் குலத்தினை சேர்ந்தவர். [2] இவரது இயற்பெயர் நம்பியாரூரன் என்பதாகும்.[2] நம்பியாரூரன் என்பதை ஆரூரன் என்று சுருக்கி அழைப்பர். இவருடைய அழகினைக் கண்டு சிவபெருமானே சுந்தரர் என்று அழைத்தமையால், அப்பெயரிலேயே அறியப்படுகிறார். [1]

சுந்தரர் சிறுவயதில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திருமுனைப்பாடி அரசர் நரசிங்கமுனையரையர் கண்டார். சிறுவன் சுந்தரனை அரண்மனைக்கு அழைத்துச் சென்று இளவரசனைப் போல அனைத்துக் கலைகளையும் கற்றுத் தந்தார். [1]