மாணிக்கவாசகர் - தேவாரம் இயற்றிய சைவ கவிஞர்

மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க இவர் பாடிய நூல்களாவன: திருவாசகமும், திருக்கோவையாருமாகும். இவர் 9 ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலையமைச்சராக பணியாற்றினார். மாணிக்கவாசகர், சிறந்த சிவபக்தரான இரண்டாம் வரகுணன் (863-911) காலத்தில் வாழ்ந்தவர்.[1]

இவர் பாடிய பாடல்கள் "திருவாசகம்" என அழைக்கப்படுகின்றன. பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றது. தமிழ் கற்ற மாணவனான ஜி.யூ.போப் இதற்கு தக்க சான்றாகும். "சிறை பெறா நீர் போல் சின்தை வாய்ப் பாயும் திருப்பெருந்துறையுறை சிவனே" என்பதாலும், "இமைப் பொழுதும் என் னெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க." எனும் அடிகளால் தமிழின் அருட் திறத்தையும், வாதவூரரிற்கும் இறைவனுக்குமான நெருக்கத்தையும் உணரலாம். "நரியைக் குதிரைசெய்" எனும் திருநாவுக்கரசர் பாடல் மூலம் இவர் காலத்தால் அப்பருக்கு முந்தியவர் என கருதப்படுகிறது.

ஞான நெறியைப் பின்பற்றிய இவர் 32 ஆண்டுகளே வாழ்ந்து ஆனி மகத்தில் சிதம்பரத்தில் சாயுச்சிய முக்கியடைந்தார் (சிவனடி சேர்ந்தார்). இவருக்கு அருள்வாசகர், மாணிக்கவாசகர், திருவாதவூரடிகள், தென்னவன் பிரமராயன் என்ற பெயர்களும் உண்டு.

தல புராணத்திலிருந்து திரட்டிய தகவல்களாக அபிதான சிந்தாமணி கூறுவது: "திருவாதவூரார் பாண்டிய நாட்டில் சம்புபாத சரிதருக்கும், சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தார். இவர் கல்வி கேள்விகளில் சிறந்து, மன்னன் அரிமர்த்தன பாண்டியனுக்கு அமைச்சராகப் பதவி அமர்ந்தார் அரிமர்த்தன பாண்டியன் மதுரையை இருப்பிடமாகக் கொண்டு ஆண்டுவந்தான். தன் புலமையால் "தென்னவன் பிரம ராயன்" எனும் பட்டத்தையும் பெற்றார். உயர்ந்த பதவி, செல்வம், செல்வாக்கு எல்லாம் இருந்தபோதும் இவை வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை உணர்ந்த திருவாதவூரார் சைவசித்தாந்தத்தை ஆராய்ந்து சிவ வழிபாடு மேற்கொண்டு ஒழுகி வரலானார்.