பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருத்துருத்தி - திருவிராகம்
வ.எண் பாடல்
1

வரைத்தலைப் பசும் பொனோடு அருங் கலங்கள் உந்தி
வந்து
இரைத்து, அலைச் சுமந்து கொண்டு எறிந்து, இலங்கு
காவிரிக்
கரைத்தலைத் துருத்தி புக்கு இருப்பதே கருத்தினாய்!
உரைத்தலைப் பொலிந்த உனக்கு உணர்த்தும் ஆறு
வல்லமே?

2

அடுத்து அடுத்து அகத்தியோடு, வன்னி, கொன்றை,
கூவிளம்,
தொடுத்து உடன் சடைப் பெய்தாய்! துருத்தியாய்! ஓர்
காலனைக்
கடுத்து, அடிப்புறத்தினால் நிறத்து உதைத்த காரணம்
எடுத்து எடுத்து உரைக்கும் ஆறு வல்லம் ஆகில், நல்லமே.

3

கங்குல் கொண்ட திங்களோடு கங்கை தங்கு செஞ்சடைச்
சங்கு இலங்கு வெண்குழை சரிந்து இலங்கு காதினாய்!
பொங்கு இலங்கு பூண நூல் உருத்திரா! துருத்தி புக்கு,
எங்கும் நின் இடங்களா அடங்கி வாழ்வது என்கொ

4

கருத்தினால் ஒர் காணி இல்; விருத்தி இல்லை; தொண்டர்
தம்
அருத்தியால், தம்(ம்) அல்லல் சொல்லி, ஐயம் ஏற்பது
அன்றியும்,
ஒருத்திபால் பொருத்தி வைத்து, உடம்பு விட்டு யோகியாய்
இருத்தி நீ, துருத்தி புக்கு; இது என்ன மாயம் என்பதே!

5

துறக்குமா சொலப்படாய்! துருத்தியாய்! திருந்து அடி
மறக்கும் ஆறு இலாத என்னை மையல் செய்து, இம்
மண்ணின்மேல்
பிறக்கும் ஆறு காட்டினாய்! பிணிப்படும் உடம்பு விட்டு
இறக்கும் ஆறு காட்டினாய்க்கு இழுக்குகின்றது என்னையே?

6

வெயிற்கு எதிர்ந்து இடம் கொடாது அகம் குளிர்ந்த பைம்
பொழில்
துயிற்கு எதிர்ந்த புள் இனங்கள் மல்கு தண் துருத்தியாய்!
மயிற்கு எதிர்ந்து அணங்கு சாயல் மாது ஒர்பாகம் ஆக மூ
எயிற்கு எதிர்ந்து ஒர் அம்பினால் எரித்த வில்லி
அல்லையே?

7

கணிச்சி அம்படைச் செல்வா! கழிந்தவர்க்கு ஒழிந்த சீர்
துணிச் சிரக் கிரந்தையாய்! கரந்தையாய்! துருத்தியாய்!
அணிப்படும் தனிப் பிறைப் பனிக் கதிர்க்கு அவாவும் நல்
மணிப் படும் பைநாகம் நீ மகிழ்ந்த அண்ணல் அல்லையே?

8

சுடப் பொடிந்து உடம்பு இழந்து அநங்கன் ஆய மன்மதன்
இடர்ப்படக் கடந்து, இடம் துருத்தி ஆக எண்ணினாய்!
கடல் படை உடைய அக் கடல் இலங்கை மன்னனை,
அடல் பட, அடுக்கலில் அடர்த்த அண்ணல் அல்லையே?

9

களம் குளிர்ந்து இலங்கு போது காதலானும், மாலும் ஆய்,
வளம் கிளர் பொன் அம் கழல் வணங்கி வந்து காண்கிலார்;
துளங்கு இளம்பிறைச் செனித் துருத்தியாய்! திருந்து அடி,
உளம் குளிர்ந்த போது எலாம், உகந்து உகந்து உரைப்பனே.

10

புத்தர், தத்துவம் இலாச் சமண், உரைத்த பொய்தனை
உத்தமம் எனக் கொளாது, உகந்து எழுந்து, வண்டு இனம்
துத்தம் நின்று பண் செயும் சூழ் பொழில் துருத்தி எம்
பித்தர் பித்தனைத் தொழ, பிறப்பு அறுத்தல் பெற்றியே.

11

கற்று முற்றினார் தொழும் கழுமலத்து அருந்தமிழ்
சுற்றும் முற்றும் ஆயினான் அவன் பகர்ந்த சொற்களால்,
பெற்றம் ஒன்று உயர்த்தவன் பெருந் துருத்தி பேணவே,
குற்றம் முற்றும் இன்மையின், குணங்கள் வந்து கூடுமே.