பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
பண் நிலாவிய மொழி உமை பங்கன், எம்பெருமான், விண்ணில் வானவர்கோன், விமலன், விடை ஊர்தி தெண் நிலா மதி தவழ் தரு மாளிகைத் தேவூர் அண்ணல்; சேவடி அடைந்தனம், அல்லல் ஒன்று இலமே
ஓதி மண் தலத்தோர் முழுது உய்ய, வெற்பு ஏறு சோதி வானவன் துதிசெய, மகிழ்ந்தவன் தூ நீர்த் தீது இல் பங்கயம் தெரிவையர் முகம்மலர் தேவூர் ஆதி; சேவடி அடைந்தனம், அல்லல் ஒன்று இலமே.
மறைகளால் மிக வழிபடு மாணியைக் கொல்வான் கறுவு கொண்ட அக் காலனைக் காய்ந்த எம் கடவுள செறுவில் வாளைகள் சேல் அவை பொரு வயல் தேவூர் அறவன்; சேவடி அடைந்தனம், அல்லல் ஒன்று இலமே.
முத்தன், சில் பலிக்கு ஊர்தொறும் முறை முறை திரியும் பித்தன், செஞ்சடைப் பிஞ்ஞகன், தன் அடியார்கள் சித்தன் மாளிகை செழு மதி தவழ் பொழில் தேவூர் அத்தன்; சேவடி அடைந்தனம், அல்லல் ஒன்று இலமே.
பாடுவார் இசை, பல்பொருள் பயன் உகந்து அன்பால் கூடுவார், துணைக்கொண்ட தம் பற்று அறப் பற்றித் தேடுவார், பொருள் ஆனவன் செறி பொழில் தேவூர் ஆடுவான்; அடி அடைந்தனம், அல்லல் ஒன்று இலமே.
பொங்கு பூண் முலைப் புரிகுழல் வரிவளைப் பொருப்பின் மங்கை பங்கினன், கங்கையை வளர்சடை வைத்தான், திங்கள் சூடிய தீ நிறக் கடவுள், தென் தேவூர் அங்கணன் தனை அடைந்தனம்; அல்லல் ஒன்று இலமே.
வன் புயத்த அத் தானவர் புரங்களை எரியத் தன் புயத்து உறத் தடவரை வளைத்தவன் தக்க தென்தமிழ்க் கலை தெரிந்தவர் பொருந்திய தேவூர் அன்பன்; சேவடி அடைந்தனம்; அல்லல் ஒன்று இலமே.
தரு உயர்ந்த வெற்பு எடுத்த அத் தசமுகன் நெரிந்து வெருவும் ஊன்றிய திருவிரல் நெகிழ்ந்து, வாள் பணித்தான் தெருவு தோறும் நல் தென்றல் வந்து உலவிய தேவூர் அரவு சூடியை அடைந்தனம்; அல்லல் ஒன்று இலமே.
முந்திக் கண்ணனும் நான்முகனும்(ம்) அவர் காணா எந்தை, திண் திறல் இருங்களிறு உரித்த எம்பெருமான், செந்து இனத்து இசை அறுபதம் முரல் திருத் தேவூர் அந்தி வண்ணனை அடைந்தனம்; அல்லல் ஒன்று இலமே.
பாறு புத்தரும், தவம் அணி சமணரும், பலநாள கூறி வைத்தது ஒர் குறியினைப் பிழை எனக் கொண்டு தேறி, மிக்க நம் செஞ்சடைக் கடவுள் தென் தேவூர் ஆறு சூடியை அடைந்தனம்; அல்லல் ஒன்று இலமே.
அல்லல் இன்றி விண் ஆள்வர்கள் காழியர்க்கு அதிபன், நல்ல செந்தமிழ் வல்லவன், ஞானசம்பந்தன், எல்லை இல் புகழ் மல்கிய எழில் வளர் தேவூர்த் தொல்லை நம்பனைச் சொல்லிய பத்தும் வல்லாரே.