பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
சடையானை, சந்திரனோடு செங்கண் அரா உடையானை, உடைதலையில் பலி கொண்டு ஊரும் விடையானை, விண்ணவர்தாம் தொழும் வெண்ணியை உடையானை, அல்லது உள்காது, எனது உள்ளமே.
சோதியை, சுண்ணவெண்நீறு அணிந்திட்ட எம் ஆதியை, ஆதியும் அந்தமும் இல்லாத வேதியை, வேதியர்தாம் தொழும் வெண்ணியில் நீதியை, நினைய வல்லார் வினை நில்லாவே.
கனிதனை, கனிந்தவரைக் கலந்து ஆட்கொள்ளும் முனிதனை, மூஉலகுக்கு ஒரு மூர்த்தியை, நனிதனை, நல்லவர்தாம் தொழும் வெண்ணியில் இனிதனை, ஏத்துவர் ஏதம் இலாதாரே.
மூத்தானை, மூஉலகுக்கு ஒரு மூர்த்திஆய்க் காத்தானை, கனிந்தவரைக் கலந்து ஆள் ஆக ஆர்த்தானை, அழகு அமர் வெண்ணி அம்மான்தன்னை, ஏத்தாதார் என் செய்வார்? ஏழை, அப் பேய்களே
நீரானை, நிறை புனல் சூழ்தரு நீள் கொன்றைத் தாரானை, தையல் ஓர்பாகம் உடையானை, சீரானை, திகழ்தரு வெண்ணி அமர்ந்து உறை ஊரானை, உள்க வல்லார் வினை ஓயுமே.
முத்தினை, முழுவயிரத்திரள் மாணிக்கத் தொத்தினை, துளக்கம் இலாத விளக்குஆய வித்தினை, விண்ணவர்தாம் தொழும் வெண்ணியில் அத்தனை, அடைய வல்லார்க்கு இல்லை, அல்லலே.
காய்ந்தானைக் காமனையும், செறு காலனைப் பாய்ந்தானை, பரிய கைம்மாஉரித் தோல் மெய்யில் மேய்ந்தானை, விண்ணவர்தாம் தொழும் வெண்ணியில் நீந்தானை, நினைய வல்லார் வினை நில்லாவே.
மறுத்தானை, மாமலையை மதியாது ஓடிச் செறுத்தானைத் தேசு அழியத் திகழ் தோள் இறுத்தானை, "எழில் அமர் வெண்ணி எம்மான்!" எனப் பொறுத்தானை, போற்றுவார் ஆற்றல் உடையாரே.
மண்ணினை, வானவரோடு மனிதர்க்கும் கண்ணினை, கண்ணனும் நான்முகனும் காணா விண்ணினை, விண்ணவர்தாம் தொழும் வெண்ணியில் அண்ணலை, அடைய வல்லார்க்கு இல்லை, அல்லலே.
குண்டரும் குணம் இலாத சமண்சாக்கிய மிண்டர்கள் மிண்டுஅவை கேட்டு வெகுளன்மின்! விண்டவர்தம் புரம் எய்தவன் வெண்ணியில் தொண்டராய் ஏத்த வல்லார் துயர் தோன்றாவே.
மரு ஆரும் மல்கு காழித் திகழ் சம்பந்தன், திரு ஆரும் திகழ்தரு வெண்ணி அமர்ந்தானை, உரு ஆரும் ஒண்தமிழ்மாலைஇவை வல்லார் பொருஆகப் புக்கு இருப்பார், புவலோகத்தே.