பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
நித்தலும் நியமம் செய்து, நீர்மலர் தூவி, சித்தம் ஒன்ற வல்லார்க்கு அருளும் சிவன் கோயில் மத்தயானையின் கோடும் வண் பீலியும் வாரி, தத்து நீர்ப் பொன்னி, சாகரம் மேவு சாய்க்காடே.
பண் தலைக்கொண்டு பூதங்கள் பாட நின்று ஆடும், வெண்தலைக் கருங்காடு உறை, வேதியன் கோயில் கொண்டலைத் திகழ் பேரி முழங்க, குலாவித் தண்டலைத்தடம் மா மயில் ஆடு சாய்க்காடே.
நாறு கூவிளம், நாகுஇளவெண்மதியத்தோடு ஆறு, சூடும் அமரர்பிரான் உறை கோயில் ஊறு தேங்கனி மாங்கனி ஓங்கிய சோலை, தாறு தண் கதலிப் புதல், மேவு சாய்க்காடே.
வரங்கள் வண்புகழ் மன்னிய எந்தை, மருவார் புரங்கள்மூன்றும் பொடிபட எய்தவன், கோயில் இரங்கல் ஓசையும் ஈட்டிய சரக்கொடும் ஈண்டி, தரங்கம் நீள்கழித் தண் கரை வைகு சாய்க்காடே.
ஏழைமார் கடைதோறும், இடு பலிக்கு என்று, கூழைவாள்_அரவு ஆட்டும் பிரான் உறை கோயில் மாழை_ஒண்கண் வளைக்கை நுளைச்சியர், வண் பூந் தாழை வெண்மடல் கொய்து, கொண்டாடு சாய்க்காடே.
துங்க வானவர் சூழ் கடல் தாம் கடைபோதில், அங்கு ஒர் நீழல் அளித்த எம்மான் உறை கோயில் வங்கம் அங்கு ஒளிர் இப்பியும் முத்தும் மணியும் சங்கும் வாரி, தடங்கடல் உந்து சாய்க்காடே.
வேத நாவினர், வெண்பளிங்கின் குழைக் காதர், ஓத_நஞ்சு அணி கண்டர், உகந்து உறை கோயில் மாதர் வண்டு, தன் காதல்வண்டு ஆடிய புன்னைத் தாது கண்டு, பொழில் மறைந்து, ஊடு சாய்க்காடே.
இருக்கும் நீள்வரை பற்றி அடர்த்து, அன்று எடுத்த அரக்கன் ஆகம் நெரித்து, அருள்செய்தவன் கோயில் மருக் குலாவிய மல்லிகை, சண்பகம் வண் பூந் தரு, குலாவிய தண்பொழில் நீடு சாய்க்காடே.
மாலினோடு அயன் காண்டற்கு அரியவர், வாய்ந்த வேலை ஆர் விடம் உண்டவர், மேவிய கோயில் சேலின் நேர் விழியார் மயில்_ஆல, செருந்தி காலையே கனகம்மலர்கின்ற சாய்க்காடே.
ஊத்தைவாய்ச் சமண்கையர்கள் சாக்கியர்க்கு என்றும் ஆத்தம்_ஆக அறிவு அரிது_ஆயவன் கோயில் வாய்த்த மாளிகை சூழ்தரு வண் புகார் மாடே, பூத்த வாவிகள் சூழ்ந்து, பொலிந்த சாய்க்காடே.
ஏனையோர் புகழ்ந்து ஏத்திய எந்தை சாய்க்காட்டை, ஞானசம்பந்தன் காழியர்கோன் நவில் பத்தும் ஊனம் இன்றி உரைசெய வல்லவர்தாம், போய், வானநாடு இனிது ஆள்வர், இம் மாநிலத்தோரே.
மண் புகார், வான்புகுவர்; மனம் இளையார்; பசியாலும் கண் புகார்; பிணி அறியார்; கற்றாரும் கேட்டாரும் விண் புகார் என வேண்டா வெண் மாட நெடுவீதித் தண் புகார்ச் சாய்க்காட்டு எம் தலைவன் தாள் சார்ந்தாரே.
போய்க் காடே மறைந்து உறைதல் புரிந்தானும், பூம் புகார்ச் சாய்க்காடே பதி ஆக உடையானும், விடையானும், வாய்க் காடு முதுமரமே இடம் ஆக வந்து அடைந்த பேய்க்கு ஆடல் புரிந்தானும், பெரியோர்கள் பெருமானே.
நீ நாளும், நன்நெஞ்சே, நினைகண்டாய்! ஆர் அறிவார், சாநாளும் வாழ்நாளும்? சாய்க்காட்டு எம்பெருமாற்கே பூ நாளும் தலை சுமப்ப, புகழ் நாமம் செவி கேட்ப, நா நாளும் நவின்று ஏத்த, பெறல் ஆமே, நல்வினையே.
கட்டு அலர்த்த மலர் தூழிக் கைதொழுமின் பொன் இயன்ற தட்டு அலர்த்த பூஞ்செருத்தி கோங்கு அமரும் தாழ்பொழில்வாய், மொட்டு அலர்த்த தடந்தாழை முருகு உயிர்க்கும் காவிரிப்பூம் பட்டினத்துச் சாய்க்காட்டு எம் பரமேட்டி பாதமே!
கோங்கு அன்ன குவிமுலையாள், கொழும் பணைத்தோள் கொடியிடையைப் பாங்கு என்ன வைத்து உகந்தான், படர்சடைமேல் பால்மதியம் தாங்கினான் பூம் புகார்ச் சாய்க்காட்டான்; தாள் நிழல் கீழ் ஓங்கினார், ஓங்கினார் என உரைக்கும், உலகமே.
சாந்து ஆக நீறு அணிந்தான், சாய்க்காட்டான், காமனை முன் தீந்து ஆகம் எரி கொளுவச் செற்று உகந்தான், திருமுடிமேல் ஓய்ந்து ஆர மதி சூடி, ஒளி திகழும் மலைமகள் தோள் தோய்ந்து ஆகம் பாகமா உடையானும், விடையானே.
மங்குல் தோய் மணி மாடம் மதி தவழும் நெடுவீதி, சங்கு எலாம் கரை பொருது திரை புலம்பும் சாய்க்காட்டான் கொங்கு உலா வரிவண்டு இன் இசை பாடும் அலர்க்கொன்றைத் தொங்கலான் அடியார்க்குச் சுவர்க்கங்கள் பொருள் அலவே.
தொடல் அரியது ஒரு கணையால் புரம் மூன்றும் எரியுண்ண, பட அரவத்து எழில் ஆரம் பூண்டான், பண்டு அரக்கனையும் தடவரையால் தடவரைத்தோள் ஊன்றினான், சாய்க்காட்டை இட வகையா அடைவோம் என்று எண்ணுவார்க்கு இடர் இலையே.
வையம் நீர் ஏற்றானும், மலர் உறையும் நான்முகனும், ஐயன்மார் இருவர்க்கும் அளப்பு அரிதால், அவன் பெருமை; தையலார் பாட்டு ஓவாச் சாய்க்காட்டு எம்பெருமானைத் தெய்வமாப் பேணாதார் தெளிவு உடைமை தேறோமே.
குறங்கு ஆட்டும் நால்விரல் கோவணத்துக்கு உலோவிப் போய் அறம் காட்டும் சமணரும், சாக்கியரும், அலர் தூற்றும் திறம் காட்டல் கேளாதே, தெளிவு உடையீர்! சென்று அடைமின், புறங்காட்டில் ஆடலான் பூம் புகார்ச் சாய்க்காடே!
நொய்ம் பந்து புடைத்து ஒல்கு நூபுரம் சேர் மெல் அடியார் அம் பந்தும் வரிக் கழலும் அரவம் செய் பூங் காழிச் சம்பந்தன் தமிழ் பகர்ந்த சாய்க்காட்டுப் பத்தினையும் "எம் பந்தம்" எனக் கருதி, ஏத்துவார்க்கு இடர் கெடுமே.