பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
சாந்தம் வெண்நீறு எனப் பூசி, வெள்ளம் சடை வைத்தவர், காந்தள் ஆரும் விரல் ஏழையொடு ஆடிய காரணம் ஆய்ந்து கொண்டு, ஆங்கு அறிய(ந்) நிறைந்தார் அவர் ஆர்கொலோ? வேந்தன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் மெய்ம்மையே.
வெண்தலை ஓர் கலனாப் பலி தேர்ந்து, விரிசடைக் கொண்டல் ஆரும் புனல் சேர்த்து, உமையாளொடும் கூட்டமா, விண்டவர்தம் மதில் எய்த பின், வேனில்வேள் வெந்து எழக் கண்டவர் மூக்கீச்சுரத்து எம் அடிகள் செயும் கன்மமே.
மருவலார்தம் மதில் எய்ததுவும், மால் மதலையை உருவில் ஆர(வ்) எரியூட்டியதும், உலகு உண்டதால், செரு வில், ஆரும் புலி, செங்கயல் ஆணையினான் செய்த பொரு இல் மூக்கீச்சுரத்து எம் அடிகள் செயும் பூசலே.
அன்னம் அன்ன(ந்) நடைச் சாயலாளோடு, அழகு எய்தவே மின்னை அன்ன சடைக் கங்கையாள் மேவிய காரணம் தென்னன், கோழி எழில் வஞ்சியும் ஓங்கு செங்கோலினான், மன்னன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் மாயமே!
விடம் முன் ஆர் அவ் அழல் வாயது ஓர் பாம்பு அரை வீக்கியே. நடம் முன் ஆர் அவ் அழல் ஆடுவர், பேயொடு நள் இருள வட மன் நீடு புகழ்ப் பூழியன், தென்னவன், கோழிமன், அடல் மன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் அச்சமே!
வெந்த நீறு மெய்யில் பூசுவர்; ஆடுவர், வீங்கு இருள வந்து, என் ஆர் அவ் வளை கொள்வதும் இங்கு ஒரு மாயம் ஆம் அம் தண் மா மானதன், நேரியன், செம்பியன் ஆக்கிய எந்தை மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் ஏதமே.
அரையில் ஆரும் கலை இல்லவன்; ஆணொடு பெண்ணும் ஆம் உரையில் ஆர் அவ் அழல் ஆடுவர்; ஒன்று அலர்; காண்மினோ விரவலார்தம் மதில் மூன்று உடன் வெவ் அழல் ஆக்கினான், அரையன் மூக்கீச்சுரத்து அடிகள், செய்கின்றது ஓர் அச்சமே!
ஈர்க்கும் நீர் செஞ்சடைக்கு ஏற்றதும், கூற்றை உதைத்ததும், கூர்க்கும் நல் மூஇலைவேல் வலன் ஏந்திய கொள்கையும், ஆர்க்கும் வாயான் அரக்கன்(ன்) உரத்தை(ந்) நெரித்து, அவ் அடல் மூர்க்கன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்யா நின்ற மொய்ம்பு அதே.
நீருள் ஆரும் மலர்மேல் உறைவான், நெடுமாலும் ஆய், சீருள் ஆரும் கழல் தேட, மெய்த் தீத்திரள் ஆயினான் சீரினால் அங்கு ஒளிர் தென்னவன், செம்பியன், வில்லவன், சேரும் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் செம்மையே.
வெண் புலால் மார்பு இடு துகிலினர், வெற்று அரை உழல்பவர், உண் பினாலே உரைப்பார் மொழி ஊனம் அது ஆக்கினான் ஒண் புலால் வேல் மிக வல்லவன், ஓங்கு எழில் கிள்ளி சேர் பண்பின் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் பச்சையே.
மல்லை ஆர் மும் முடிமன்னர் மூக்கீச்சுரத்து அடிகளைச் செல்வர் ஆக நினையும் படி சேர்த்திய செந்தமிழ், நல்லவராய் வாழ்பவர் காழியுள் ஞானசம்பந்தன் சொல்ல வல்லார் அவர், வான் உலகு ஆளவும் வல்லரே.