பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருக்கலிக்காமூர்
வ.எண் பாடல்
1

மடல் வரை இல் மது விம்மு சோலை வயல் சூழ்ந்து, அழகு
ஆரும்,
கடல் வரை ஓதம் கலந்து முத்தம் சொரியும் கலிக்காமூர்,
உடல் வரையின் உயிர் வாழ்க்கை ஆய ஒருவன் கழல் ஏத்த,
இடர் தொடரா; வினை ஆன சிந்தும்; இறைவன்(ன்) அருள்
ஆமே.

2

மைவரை போல்-திரையோடு கூடிப் புடையே மலிந்து ஓதம்
கை வரையால் வளர் சங்கம் எங்கும் மிகுக்கும் கலிக்காமூர்,
மெய் வரையான் மகள் பாகன் தன்னை விரும்ப, உடல்
வாழும்
ஐவரை ஆசு அறுத்து ஆளும் என்பர்; அதுவும் சரதமே.

3

தூவிய நீர் மலர் ஏந்தி வையத்தவர்கள் தொழுது ஏத்த,
காவியின் நேர் விழி மாதர் என்றும் கவின் ஆர் கலிக்காமூர்
மேவிய ஈசனை, எம்பிரானை, விரும்பி வழிபட்டால்,
ஆவியுள் நீங்கலன்-ஆதிமூர்த்தி, அமரர் பெருமானே.

4

குன்றுகள் போல்-திரை உந்தி, அம் தண் மணி ஆர்தர,
மேதி
கன்று உடன் புல்கி, ஆயம் மனை சூழ் கவின் ஆர்
கலிக்காமூர்,
என்று உணர் ஊழியும் வாழும் எந்தை பெருமான் அடி ஏத்தி
நின்று உணர்வாரை நினையகில்லார், நீசர் நமன் தமரே.

5

வான் இடை வாள்மதி மாடம் தீண்ட, மருங்கே கடல் ஓதம்
கான் இடை நீழலில் கண்டல் வாழும் கழி சூழ் கலிக்காமூர்,
ஆன் இடை ஐந்து உகந்து ஆடினானை அமரர் தொழுது
ஏத்த,
நான் அடைவு ஆம் வணம் அன்பு தந்த நலமே
நினைவோமே.

6

துறை வளர் கேதகை மீது வாசம் சூழ்வான் மலி தென்றல்
கறை வளரும் கடல் ஓதம் என்றும் கலிக்கும் கலிக்காமூர்,
மறை வளரும் பொருள் ஆயினானை மனத்தால் நினைந்து
ஏத்த,
நிறை வளரும் புகழ் எய்தும்; வாதை நினையா; வினை
போமே.

7

கோல நல் மேனியின் மாதர் மைந்தர் கொணர் மங்கலியத்தில்,
காலமும் பொய்க்கினும், தாம் வழுவாது இயற்றும் கலிக்காமூர்,
ஞாலமும், தீ, வளி, ஞாயிறு, ஆய நம்பன் கழல் ஏத்தி,
ஓலம் இடாதவர் ஊழி என்றும் உணர்வைத் துறந்தாரே.

8

ஊர் அரவம் தலை நீள் முடியான் ஒலி நீர் உலகு ஆண்டு
கார் அரவக்கடல் சூழ வாழும் பதி ஆம் கலிக்காமூர்,
தேர் அரவு அல்குல் அம் பேதை அஞ்சத் திருந்து வரை
பேர்த்தான்
ஆர் அரவம் பட வைத்த பாதம் உடையான் இடம் ஆமே.

9

அரு வரை ஏந்திய மாலும், மற்றை அலர்மேல் உறைவானும்,
இருவரும் அஞ்ச, எரி உரு ஆய் எழுந்தான் கலிக்காமூர்,
ஒரு வரையான் மகள் பாகன் தன்னை உணர்வால்-தொழுது
ஏத்த,
திரு மருவும்; சிதைவு இல்லை; செம்மைத் தேசு உண்டு,
அவர்பாலே.

10

மாசு பிறக்கிய மேனியாரும், மருவும் துவர் ஆடை
மீசு பிறக்கிய மெய்யினாரும், அறியார், அவர் தோற்றம்;
காசினி நீர்த்திரள் மண்டி, எங்கும் வளம் ஆர் கலிக்காமூர்
ஈசனை எந்தைபிரானை ஏத்தி, நினைவார் வினை போமே.

11

ஆழியுள் நஞ்சு அமுது ஆர உண்டு, அன்று அமரர்க்கு
அமுது உண்ண
ஊழிதொறும்(ம்) உளரா அளித்தான், உலகத்து உயர்கின்ற
காழியுள் ஞானசம்பந்தன் சொன்ன தமிழால், கலிக்காமூர்
வாழி எம்மானை வணங்கி ஏத்த, மருவா, பிணிதானே.