பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
அலை, வளர் தண்மதியோடு அயலே அடக்கி, உமை முலை வளர் பாகம் முயங்க வல்ல முதல்வன்; முனி; இலை வளர் தாழைகள் விம்மு கானல் இராமேச்சுரம், தலை வளர் கோல நல் மாலையன்தான் இருந்து ஆட்சியே.
தேவியை வவ்விய தென் இலங்கைத் தசமாமுகன் பூ இயலும் முடி பொன்றுவித்த பழி போய் அற, ஏ இயலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம் மேவிய சிந்தையினார்கள் தம்மேல் வினை வீடுமே.
மான் அன நோக்கி வைதேவி தன்னை ஒரு மாயையால் கான் அதில் வவ்விய கார் அரக்கன் உயிர் செற்றவன், ஈனம் இலாப் புகழ் அண்ணல், செய்த இராமேச்சுரம் ஞானமும் நன் பொருள் ஆகி நின்றது ஒரு நன்மையே.
உரை உணராதவன், காமம் என்னும்(ம்) உறு வேட்கையான், வரை பொரு தோள் இறச் செற்ற வில்லி மகிழ்ந்து ஏத்திய விரை மருவும் கடல் ஓதம் மல்கும் இராமேச்சுரத்து அரை அரவு ஆட நின்று, ஆடல் பேணும் அம்மான் அல்லனே!
ஊறு உடை வெண் தலை கையில் ஏந்தி, பல ஊர்தொறும், வீறு உடை மங்கையர் ஐயம் பெய்ய, விறல் ஆர்ந்தது ஓர் ஏறு உடை வெல் கொடி எந்தை மேய இராமேச்சுரம் பேறு உடையான் பெயர் ஏத்தும் மாந்தர் பிணி பேருமே.
அணை அலை சூழ் கடல் அன்று அடைத்து வழி செய்தவன், பணை இலங்கும் முடிபத்து இறுத்த, பழி போக்கிய இணை இலி என்றும் இருந்த கோயில் இராமேச்சுரம், துணை இலி தூ மலர்ப்பாதம் ஏத்த, துயர் நீங்குமே.
சனி, புதன், ஞாயிறு, வெள்ளி, திங்கள், பலதீயன, முனிவது செய்து உகந்தானை வென்று, அவ் வினை மூடிட, “இனி அருள் நல்கிடு!” என்று அண்ணல் செய்த இராமேச்சுரம், பனி மதி சூடி நின்று ஆட வல்ல பரமேட்டியே!
பெரு வரை அன்று எடுத்து ஏந்தினான் தன் பெயர் சாய் கெட, அரு வரையால் அடர்த்து, அன்று நல்கி, அயன் மால் எனும் இருவரும் நாடி நின்று ஏத்து கோயில் இராமேச்சுரத்து ஒருவனுமே பல ஆகி நின்றது ஒரு வண்ணமே!
* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.
சாக்கியர், வன் சமண்கையர், மெய்யில்-தடுமாற்றத்தார் வாக்கு இயலும்(ம்) உரை பற்று விட்டு, மதி ஒண்மையால், ஏக்கு இயலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம் ஆக்கிய செல்வனை ஏத்தி வாழ்மின்(ன்), அருள் ஆகவே!
பகலவன் மீது இயங்காமைக் காத்த பதியோன்தனை இகல் அழிவித்தவன் ஏத்து கோயில் இராமேச்சுரம், புகலியுள் ஞானசம்பந்தன் சொன்ன தமிழ், புந்தியால், அகலிடம் எங்கும் நின்று, ஏத்த வல்லார்க்கு இல்லை, அல்லலே.
திரிதரு மா மணி நாகம் ஆடத் திளைத்து, ஒரு தீ-அழல்வாய், நரி கதிக்க, எரி ஏந்தி ஆடும் நலமே தெரிந்து உணர்வார் எரி கதிர் முத்தம் இலங்கு கானல் இராமேச்சுரம் மேய, விரி கதிர் வெண்பிறை மல்கு சென்னி, விமலர்; செயும் செயலே!
பொறி கிளர் பாம்பு அரை ஆர்த்து, அயலே புரிவோடு உமை பாட, தெறி கிளரப் பெயர்ந்து, எல்லி ஆடும் திறமே தெரிந்து உணர்வார் எறி கிளர் வெண்திரை வந்து பேரும் இராமேச்சுரம் மேய, மறி கிளர் மான் மழுப் புல்கு கை, எம் மணாளர்; செயும் செயலே!
அலை வளர் தண் புனல் வார் சடைமேல் அடக்கி, ஒரு பாகம் மலை வளர் காதலி பாட, ஆடி மயக்கா வரு மாட்சி இலை வளர் தாழை முகிழ் விரியும் இராமேச்சுரம் மேயார் தலை வளர் கோல நல் மாலை சூடும் தலைவர், செயும் செயலே!
மா தன நேர் இழை ஏர் தடங்கண் மலையான் மகள் பாட, தேது எரி அங்கையில் ஏந்தி ஆடும் திறமே தெரிந்து உணர்வார் ஏதம் இலார் தொழுது ஏத்தி வாழ்த்தும் இராமேச்சுரம் மேயார் போது வெண்திங்கள் பைங்கொன்றை சூடும் புனிதர் செயும் செயலே!
சூலமோடு ஒண்மழு நின்று இலங்க, சுடுகாடு இடம் ஆக, கோல நல் மாது உடன்பாட, ஆடும் குணமே குறித்து உணர்வார் ஏல நறும் பொழில் வண்டு பாடும் இராமேச்சுரம் மேய, நீலம் ஆர் கண்டம் உடைய, எங்கள் நிமலர்; செயும் செயலே!
கணை பிணை வெஞ்சிலை கையில் ஏந்தி; காமனைக் காய்ந்தவர் தாம் இணை பிணை நோக்கி நல்லாளொடு ஆடும் இயல்பினர் ஆகி, நல்ல இணை மலர் மேல் அனம் வைகு கானல் இராமேச்சுரம் மேயார் அணை பிணை புல்கு கரந்தை சூடும் அடிகள் செயும் செயலே!
நீரின் ஆர் புன்சடை பின்பு தாழ, நெடு வெண்மதி சூடி, ஊரினார் துஞ்சு இருள் பாடி ஆடும் உவகை தெரிந்து உணர்வார் ஏரின் ஆர் பைம்பொழில் வண்டு பாடும் இராமேச்சுரம் மேய, காரின் ஆர் கொன்றை வெண்திங்கள் சூடும், கடவுள்; செயும் செயலே!
பொன் திகழ் சுண்ண வெண்நீறு பூசி, புலித்தோல் உடை ஆக, மின் திகழ் சோதியர், பாடல் ஆடல் மிக்கார், வரு மாட்சி என்றும் நல்லோர்கள் பரவி ஏத்தும் இராமேச்சுரம் மேயார் குன்றினால் அன்று அரக்கன் தடந்தோள் அடர்த்தார், கொளும் கொள்கையே!
கோவலன் நான்முகன் நோக்க ஒணாத குழகன், அழகு ஆய மேவலன், ஒள் எரி ஏந்தி ஆடும் இமையோர் இறை, மெய்ம்மை ஏ வலனார் புகழ்ந்து ஏத்தி வாழ்த்தும் இராமேச்சுரம் மேய சே வல வெல் கொடி ஏந்து கொள்கை எம் இறைவர், செயும் செயலே!
பின்னொடு முன் இடு தட்டைச் சாத்திப் பிரட்டே திரிவாரும், பொன் நெடுஞ் சீவரப் போர்வையார்கள், புறம் கூறல் கேளாதே, இன் நெடுஞ் சோலை வண்டு யாழ்முரலும் இராமேச்சுரம் மேய, பல்-நெடு வெண்தலை கொண்டு உழலும், பரமர் செயும் செயலே!
தேவியை வவ்விய தென் இலங்கை அரையன் திறல் வாட்டி ஏ இயல் வெஞ்சிலை அண்ணல் நண்ணும் இராமேச்சுரத்தாரை, நா இயல் ஞானசம்பந்தன் நல்ல மொழியால் நவின்று ஏத்தும் பா இயல் மாலை வல்லார் அவர் தம் வினை ஆயின பற்று அறுமே.