பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
ஓங்கி மேல் உழிதரும் ஒலி புனல் கங்கையை ஒரு சடைமேல் தாங்கினார், இடு பலி தலை கலனாக் கொண்ட தம் அடிகள், பாங்கினால் உமையொடும் பகல் இடம் புகல் இடம், பைம்பொழில் சூழ் வீங்கு நீர்த் துருத்தியார்; இரவு இடத்து உறைவர், வேள்விக்குடியே.
தூறு சேர் சுடலையில் சுடர் எரி ஆடுவர், துளங்கு ஒளி சேர் நீறு சாந்து என உகந்து அணிவர், வெண்பிறை மல்கு சடைமுடியார் நாறு சாந்து இளமுலை அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான், வீறு சேர் துருத்தியார்; இரவு இடத்து உறைவர், வேள்விக்குடியே.
மழை வளர் இளமதி மலரொடு தலை புல்கு வார்சடை மேல் கழை வளர் புனல் புகக் கண்ட எம் கண்ணுதல், கபாலியார் தாம், இழை வளர் துகில் அல்குல் அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான், விழை வளர் துருத்தியார்; இரவு இடத்து உறைவர், வேள்விக்குடியே.
கரும்பு அன வரிசிலைப் பெருந்தகைக் காமனைக் கவின் அழித்த சுரும்பொடு தேன் மல்கு தூ மலர்க்கொன்றை அம் சுடர்ச் சடையார் அரும்பு அன வனமுலை அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான், விரும்பு இடம் துருத்தியார்; இரவு இடத்து உறைவர், வேள்விக்குடியே.
வளம் கிளர் மதியமும் பொன்மலர்க் கொன்றையும் வாள் அரவும் களம் கொளச் சடை இடை வைத்த எம் கண்ணுதல், கபாலியார்தாம், துளங்கு நூல் மார்பினர், அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான், விளங்கு நீர்த் துருத்தியார்; இரவு இடத்து உறைவர், வேள்விக்குடியே.
பொறி உலாம் அடு புலி உரிவையர், வரி அராப் பூண்டு இலங்கும் நெறி உலாம் பலி கொளும் நீர்மையர், சீர்மையை நினைப்பு அரியார் மறி உலாம் கையினர், மங்கையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான், வெறி உலாம் துருத்தியார்; இரவு இடத்து உறைவர், வேள்விக்குடியே.
புரிதரு சடையினர், புலிஉரி அரையினர், பொடி அணிந்து திரிதரும் இயல்பினர், திரி புரம் மூன்றையும் தீ வளைத்தார் வரி தரு வனமுலை மங்கையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான், விரிதரு துருத்தியார்; இரவு இடத்து உறைவர், வேள்விக்குடியே.
நீண்டு இலங்கு-அவிர் ஒளி நெடு முடி அரக்கன்-”இந் நீள்வரையைக் கீண்டு இடந்திடுவன்” என்று எழுந்தவன்-ஆள்வினை கீழ்ப்படுத்தார் பூண்ட நூல் மார்பினர், அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான், வேண்டு இடம் துருத்தியார்; இரவு இடத்து உறைவர், வேள்விக்குடியே.
கரைகடல் அரவு அணைக் கடவுளும், தாமரை நான்முகனும், குரை கழல் அடி தொழ, கூர் எரி என நிறம் கொண்ட பிரான், வரை கெழு மகளொடும் பகல் இடம் புகல் இடம், வண்பொழில் சூழ் விரை கமழ் துருத்தியார்; இரவு இடத்து உறைவர், வேள்விக்குடியே.
அயம் முகம் வெயில் நிலை அமணரும், குண்டரும், சாக்கியரும், நயம் முக உரையினர்; நகுவன சரிதைகள் செய்து உழல்வார் கயல் அன வரி நெடுங்கண்ணியோடு ஒரு பகல் அமர்ந்த பிரான், வியல் நகர்த் துருத்தியார்; இரவு இடத்து உறைவர், வேள்விக்குடியே.
விண் உலாம் விரி பொழில் விரை மணல்-துருத்தி, வேள்விக்குடியும், ஒண் உலாம் ஒலிகழல் ஆடுவார் அரிவையோடு உறை பதியை நண் உலாம் புகலியுள் அருமறை ஞானசம்பந்தன் சொன்ன பண் உலாம் அருந்தமிழ் பாடுவார் ஆடுவார்; பழி இலரே.