பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
விண்ணவர் மகுடகோடி மிடைந்த சேவடியர் போலும்; பெண் ஒருபாகர் போலும்; பேடு அலி ஆணர் போலும்; வண்ண மால் அயனும் காணா மால்வரை எரியர் போலும்; எண் உரு அநேகர் போலும்-இன்னம்பர் ஈசனாரே.
பன்னிய மறையர் போலும்; பாம்பு அரை உடையர் போலும்; துன்னிய சடையர் போலும்; தூ மதி மத்தர் போலும்; மன்னிய மழுவர் போலும்; மாது இடம் மகிழ்வர் போலும்; என்னையும் உடையர் போலும்-இன்னம்பர் ஈசனாரே.
மறி ஒரு கையர் போலும்; மாது உமை உடையர் போலும்; பறி தலைப் பிறவி நீக்கிப் பணி கொள வல்லர் போலும்; செறிவு உடை அங்கமாலை சேர் திரு உருவர் போலும்; எறிபுனல் சடையர் போலும்-இன்னம்பர் ஈசனாரே.
விடம் மலி கண்டர் போலும்; வேள்வியை அழிப்பர் போலும்; கடவு நல் விடையர் போலும்; காலனைக் காய்வர் போலும்; படம் மலி அரவர் போலும்; பாய் புலித் தோலர் போலும்; இடர் களைந்து அருள்வர் போலும் இன்னம்பர் ஈசனாரே.
அளி மலர்க் கொன்றை துன்றும் அவிர்சடை உடையர் போலும்; களி மயில் சாயலோடும் காமனை விழிப்பர் போலும்; வெளி வளர் உருவர் போலும்; வெண் பொடி அணிவர் போலும்; எளியவர், அடியர்க்கு என்றும்;-இன்னம்பர் ஈசனாரே.
கணை அமர் சிலையர் போலும்; கரி உரி உடையர் போலும்; துணை அமர் பெண்ணர் போலும்; தூ மணிக் குன்றர் போலும்; அணை உடை அடியர் கூடி அன்பொடு மலர்கள் தூவும் இணை அடி உடையர் போலும்-இன்னம்பர் ஈசனாரே.
பொருப்பு அமர் புயத்தர் போலும்; புனல் அணி சடையர் போலும்; மருப்பு இள ஆமை தாங்கு மார்பில் வெண் நூலர் போலும்; உருத்திரமூர்த்தி போலும்; உணர்வு இலார் புரங்கள் மூன்றும் எரித்திடு சிலையர் போலும்-இன்னம்பர் ஈசனாரே.
காடு இடம் உடையர் போலும்; கடிகுரல் விளியர் போலும்; வேடு உரு உடையர் போலும்; வெண்மதிக் கொழுந்தர் போலும்; கோடு அலர் வன்னி, தும்பை, கொக்கு இறகு, அலர்ந்த கொன்றை ஏடு, அமர் சடையர் போலும்-இன்னம்பர் ஈசனாரே.
காறிடு விடத்தை உண்ட கண்டர்; எண் தோளர் போலும்; நீறு உடை உருவர் போலும்; நினைப்பினை அரியர் போலும்; பாறு உடைத் தலை கை ஏந்திப் பலி திரிந்து உண்பர் போலும்; ஏறு உடைக் கொடியர் போலும்-இன்னம்பர் ஈசனாரே.
ஆர்த்து எழும் இலங்கைக் கோனை அருவரை அடர்ப்பர் போலும்; பார்த்தனோடு அமர் பொரூது படை கொடுத்து அருள்வர் போலும்; தீர்த்தம் ஆம் கங்கை தன்னைத் திருச்சடை வைப்பர் போலும்; ஏத்த ஏழ் உலகும் வைத்தார்-இன்னம்பர் ஈசனாரே.
மன்னும் மலைமகள் கையால் வருடின; மாமறைகள் சொன்ன துறைதொறும் தூப் பொருள் ஆயின; தூக் கமலத்து அன்ன வடிவின; அன்பு உடைத் தொண்டர்க்கு அமுது அருத்தி இன்னல் களைவன - இன்னம்பரான்தன் இணை அடியே.
பைதல்பிணக்குழைக் காளி வெங்கோபம் பங்கப்படுப்பான் செய்தற்கு அரிய திருநடம் செய்தன; சீர் மறையோன் உய்தல் பொருட்டு வெங் கூற்றை உதைத்தன; உம்பர்க்கு எல்லாம் எய்தற்கு அரியன-இன்னம்பரான்தன் இணை அடியே.
சுணங்கு நின்று ஆர் கொங்கையாள் உமை சூடின; தூ மலரால் வணங்கி நின்று உம்பர்கள் வாழ்த்தின; மன்னும் மறைகள் தம்மில் பிணங்கி நின்று இன்ன(அ)அளவு என்று அறியாதன; பேய்க்கணத்தோடு இணங்கி நின்று ஆடின-இன்னம்பரான்தன் இணை அடியே.
ஆறு ஒன்றிய சமயங்களின் அவ் அவர்க்கு அப் பொருள்கள் வேறு ஒன்று இலாதன; விண்ணோர் மதிப்பன; மிக்கு உவமன் மாறு ஒன்று இலாதன; மண்ணொடு விண்ணகம் மாய்ந்திடினும் ஈறு ஒன்று இலாதன-இன்னம்பரான்தன் இணை அடியே.
அரக்கர் தம் முப்புரம் அம்பு ஒன்றினால் அடல் அங்கியின் வாய்க் கரக்க முன் வைதிகத் தேர்மிசை நின்றன; கட்டு உருவம் பரக்க வெங்கான் இடை வேடு உரு ஆயின; பல்பதிதோறு இரக்க நடந்தன-இன்னம்பரான்தன் இணை அடியே.
கீண்டும் கிளர்ந்தும் பொன் கேழல் முன் தேடின; கேடு படா ஆண்டும் பலபலஊழியும் ஆயின; ஆரணத்தின் வேண்டும் பொருள்கள் விளங்க நின்று ஆடின; மேவு சிலம்பு ஈண்டும் கழலின-இன்னம்பரான்தன் இணை அடியே.
போற்றும் தகையன; பொல்லா முயலகன் கோபப் புன்மை ஆற்றும் தகையன; ஆறுசமயத்தவர் அவரைத் தேற்றும் தகையன; தேறிய தொண்டரைச் செந்நெறிக்கே ஏற்றும் தகையன-இன்னம்பரான்தன் இணை அடியே.
பயம், புன்மை, சேர்தரு பாவம், தவிர்ப்பன; பார்ப்பதிதன் குயம் பொன்மை மா மலர் ஆகக் குலாவின; “கூட ஒண்ணாச் சயம்பு” என்றே, “தகு தாணு” என்றே, சதுர்வேதங்கள் நின்று இயம்பும் கழலின-இன்னம்பரான்தன் இணைஅடியே.
அயன், நெடுமால், இந்திரன், சந்திராதித்தர், அமரர் எல்லாம் “சய சய” என்று முப்போதும் பணிவன; தண்கடல் சூழ் வியல் நிலம் முற்றுக்கும் விண்ணுக்கும் நாகர் வியல் நகர்க்கும் இயபரம் ஆவன இன்னம்பரான்தன் இணைஅடியே.
தருக்கிய தக்கன்தன் வேள்வி தகர்த்தன; தாமரைப்போது, உருக்கிய செம்பொன், உவமன் இலாதன; ஒண் கயிலை நெருக்கிய வாள் அரக்கன் தலைபத்தும் நெரித்து, அவன்தன் இருக்கு இயல்பு ஆயின-இன்னம்பரான்தன் இணை அடியே.