பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருமங்கலக்குடி
வ.எண் பாடல்
1

தங்கு அலப்பிய தக்கன் பெரு வேள்வி
அங்கு அலக்கழித்து ஆர் அருள் செய்தவன்
கொங்கு அலர்க் குழல் கொம்பு அனையாளொடு
மங்கலக்குடி மேய மணாளனே.

2

காவிரி(ய்)யின் வடகரைக் காண்தகு
மா விரி(ய்)யும் பொழில் மங்கலக்குடித்
தே அரி(ய்)யும் பிரமனும் தேட ஒணாத்
தூ எரிச்சுடர்ச் சோதியுள் சோதியே!

3

மங்கலக்குடி ஈசனை மாகாளி,
வெங்கதிர்ச் செல்வன், விண்ணொடு மண் உளோர்,
சங்கு சக்கரதாரி, சதுமுகன்,
அங்கு அகத்தியனும்(ம்), அர்ச்சித்தார் அன்றே.

4

மஞ்சன், வார்கடல் சூழ் மங்கலக்குடி,
நஞ்சம் ஆர் அமுது ஆக நயந்து கொண்டு,
அஞ்சும் ஆடல் அமர்ந்து, அடியேன் உடை
நெஞ்சம் ஆலயமாக் கொண்டு நின்றதே!

5

செல்வம் மல்கு திரு மங்கலக்குடி-
செல்வம் மல்கு சிவநியமத்தராய்,
செல்வம் மல்கு செழு மறையோர் தொழ,
செல்வன் தேவியொடும் திகழ் கோயிலே.

6

மன்னு சீர் மங்கலக்குடி மன்னிய
பின்னுவார் சடைப் பிஞ்ஞகன் தன் பெயர்
உன்னுவாரும் உரைக்க வல்லார்களும்
துன்னுவார், நன்நெறி தொடர்வு எய்தவே.

7

மாதரார் மருவும் மங்கலக்குடி
ஆதி நாயகன், அண்டர்கள் நாயகன்,
வேதநாயகன், வேதியர் நாயகன
பூதநாயகன், புண்ணியமூர்த்தியே.

8

வண்டு சேர் பொழில் சூழ் மங்கலக்குடி,
விண்ட தாதையைத் தாள் அற வீசிய
சண்ட நாயகனுக்கு அருள்செய்தவன்
துண்ட மாமதி சூடிய சோதியே.

9

கூசுவார் அலர், குண்டர், குணம் இலர்,
நேசம் ஏதும் இலாதவர், நீசர்கள்,
மாசர்பால்- மங்கலக்குடி மேவிய
ஈசன் வேறுபடுக்க-உய்ந்தேன் அன்றே!

10

மங்கலக்குடியான் கயிலை(ம்) மலை
அங்கு அலைத்து எடுக்குற்ற அரக்கர்கோன்,
தன் கரத்தொடு தாள்தலைதோள் தகர்ந்து,
அங்கு அலைத்து, அழுது, உய்ந்தனன் தான் அன்றே!