பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருப்பழையாறை வடதளி
வ.எண் பாடல்
1

தலை எலாம் பறிக்கும் சமண்கையர் உள்-
நிலையினால் மறைத்தால் மறைக்க ஒண்ணுமே?
அலையின் ஆர் பொழில் ஆறை வடதளி
நிலையினான் அடியே நினைந்து உய்ம்மினே!

2

மூக்கினால் முரன்று ஓதி அக் குண்டிகை
தூக்கினார் குலம் தூர் அறுத்தே தனக்கு
ஆக்கினான் அணி ஆறை வடதளி
நோக்கினார்க்கு இல்லையால், அருநோய்களே.

3

குண்டரை, குணம் இல்லரை, கூறை இல்
மிண்டரை, துரந்த(வ்) விமலன் தனை;
அண்டரை; பழையாறை வடதளிக்
கண்டரை; தொழுது உய்ந்தன, கைகளே.

4

முடையரை, தலை முண்டிக்கும் மொட்டரை,
கடையரை, கடிந்தார்; கனல் வெண்மழுப்-
படையரை; பழையாறை வடதளி
உடையரை; குளிர்ந்து உள்கும், என் உள்ளமே.

5

ஒள் அரிக்கணார் முன் அமண் நின்று உணும்
கள்ளரைக் கடிந்த(க்) கருப்பு ஊறலை,
அள்ளல் அம் புனல் ஆறை வடதளி
வள்ளலை, புகழத் துயர் வாடுமே.

6

நீதியைக் கெட நின்று அமணே உணும்
சாதியைக் கெடுமா செய்த சங்கரன்,
ஆதியை, பழையாறை வடதளிச்
சோதியை, தொழுவார் துயர் தீருமே.

7

திரட்டு இரைக்கவளம் திணிக்கும் சமண்-
பிரட்டரைப் பிரித்த(ப்) பெருமான் தனை,
அருள்-திறத்து அணி ஆறை வடதளித்
தெருட்டரை, தொழத் தீவினை தீருமே.

8

ஓது இனத்து எழுத்து அஞ்சு உணராச் சமண்
வேதனைப் படுத்தானை, வெங் கூற்று உதை
பாதனை, பழையாறை வடதளி
நாதனை, தொழ நம் வினை நாசமே.

9

வாய் இருந்தமிழே படித்து, ஆள் உறா
ஆயிரம்சமணும் அழிவு ஆக்கினான்
பாய் இரும் புனல் ஆறை வடதளி
மேயவன்(ன்) என வல்வினை வீடுமே.

10

செருத்தனைச் செயும் சேண் அரக்கன்(ன்) உடல்,
எருத்து, இற(வ்) விரலால் இறை ஊன்றிய
அருத்தனை; பழையாறை வடதளித்
திருத்தனை; தொழுவார் வினை தேயுமே.