பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
திருக்கடவூர்வீரட்டம்
வ.எண் பாடல்
1

பொடி ஆர் மேனியனே! புரி நூல் ஒருபால் பொருந்த,
வடி ஆர் மூ இலை வேல், வளர் கங்கை இன் மங்கையொடும்,
கடி ஆர் கொன்றையனே! கடவூர் தனுள் வீரட்டத்து எம்
அடிகேள்! என் அமுதே! எனக்கு ஆர் துணை, நீ அலதே? .

2

பிறை ஆரும் சடையாய்! பிரமன் தலையில் பலி கொள்
மறை ஆர் வானவனே! மறையின் பொருள் ஆனவனே!
கறை ஆரும் மிடற்றாய்! கடவூர் தனுள் வீரட்டத்து எம்
இறைவா! என் அமுதே! எனக்கு ஆர் துணை, நீ அலதே? .

3

அன்று ஆலின்(ன்) நிழல் கீழ் அறம் நால்வர்க்கு அருள் புரிந்து,
கொன்றாய், காலன்; உயிர் கொடுத்தாய், மறையோனுக்கு; மான்
கன்று ஆரும் கரவா! கடவூர்த் திரு வீரட்டத்துள்
என் தாதை! பெருமான்! எனக்கு ஆர் துணை, நீ அலதே? .

4

போர் ஆரும் கரியின்(ன்) உரி போர்த்துப் பொன் மேனியின் மேல்,
வார் ஆரும் முலையாள் ஒருபாகம் மகிழ்ந்தவனே!
கார் ஆரும் மிடற்றாய்! கடவூர் தனுள் வீரட்டானத்து
ஆரா என் அமுதே! எனக்கு ஆர் துணை, நீ அலதே? .

5

மை ஆர் கண்டத்தினாய்! மதமா உரி போர்த்தவனே!
பொய்யாது என் உயிருள் புகுந்தாய்! இன்னம் போந்து அறியாய்!
கை ஆர் ஆடு அரவா! கடவூர் தனுள் வீரட்டத்து எம்
ஐயா! என் அமுதே! எனக்கு ஆர் துணை, நீ அலதே? .

6

மண், நீர், தீ, வெளி, கால், வரு பூதங்கள் ஆகி, மற்றும்
பெண்ணோடு ஆண் அலியாய், பிறவா உரு ஆனவனே!
கண் ஆரும் மணியே! கடவூர் தனுள் வீரட்டத்து எம்
அண்ணா! என் அமுதே! எனக்கு ஆர் துணை, நீ அலதே? .

7

எரி ஆர் புன்சடை மேல் இள நாகம் அணிந்தவனே!
நரி ஆரும் சுடலை நகு வெண் தலை கொண்டவனே!
கரி ஆர் ஈர் உரியாய்! கடவூர் தனுள் வீரட்டத்து எம்
அரியாய்! என் அமுதே! எனக்கு ஆர் துணை, நீ அலதே? .

8

வேறா உன் அடியேன், விளங்கும் குழைக் காது உடையாய்!
தேறேன், உன்னை அல்லால்; சிவனே! என் செழுஞ்சுடரே!
காறு ஆர் வெண்மருப்பா! கடவூர்த் திரு வீரட்டத்துள்
ஆறு ஆர் செஞ்சடையாய்! எனக்கு ஆர் துணை, நீ அலதே? .

9

அயனோடு அன்று அரியும்(ம்) அடியும் முடி காண்பு அரிய
பயனே! எம் பரனே! பரம் ஆய பரஞ்சுடரே!
கயம் ஆரும் சடையாய்! கடவூர்த் திரு வீரட்டத்துள்
அயனே! என் அமுதே! எனக்கு ஆர் துணை, நீ அலதே? .

10

கார் ஆரும் பொழில் சூழ் கடவூர்த் திரு வீரட்டத்துள்
ஏர் ஆரும்(ம்) இறையைத் துணையா எழில் நாவலர்கோன்-
ஆரூரன்(ன்) அடியான், அடித்தொண்டன்-உரைத்த தமிழ்
பாரோர் ஏத்த வல்லார் பரலோகத்து இருப்பாரே .