பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
திருநறையூர்ச் சித்தீச்சுரம்
வ.எண் பாடல்
1

நீரும் மலரும் நிலவும் சடைமேல்
ஊரும் அரவம் உடையான் இடம் ஆம்-
வாரும் அருவி மணி, பொன், கொழித்துச்
சேரும்-நறையூர்ச் சித்தீச்சுரமே.

2

அளைப் பைஅரவு ஏர் இடையாள் அஞ்ச,
துளைக்கைக்கரித் தோல் உரித்தான் இடம் ஆம்-
வளைக்கைம் மடவார் மடுவில்-தடநீர்த்
திளைக்கும்-நறையூர்ச் சித்தீச்சுரமே.

3

இகழும் தகையோர் எயில் மூன்றும் எரித்த
பகழியொடு வில் உடையான் பதிதான்
முகிழ்மென் முலையார் முகமே கமலம்-
திகழும்-நறையூர்ச் சித்தீச்சுரமே.

4

மறக் கொள் அரக்கன் வரைதோள் வரையால்
இறக் கொள் விரல் கோன் இருக்கும் இடம் ஆம்-
நறக் கொள் கமலம் நளி பள்ளி எழத்
திறக்கும்-நறையூர்ச் சித்தீச்சுரமே.

5

முழுநீறு அணி மேனியன், மொய்குழலார்
எழு நீர்மை கொள்வான், அமரும் இடம் ஆம்-
கழுநீர் கமழக் கயல், சேல், உகளும்
செழுநீர்-நறையூர்ச் சித்தீச்சுரமே.

6

ஊன் ஆர் உடை வெண்தலை உண் பலி கொண்டு,
ஆன் ஆர் அடல் ஏறு அமர்வான் இடம் ஆம்-
வான் ஆர் மதியம் பதி வண்பொழில்வாய்த்
தேன் ஆர்-நறையூர்ச் சித்தீச்சுரமே.

7

கார் ஊர் கடலில் விடம் உண்டு அருள்செய்
நீர் ஊர் சடையன் நிலவும் இடம் ஆம்-
வார் ஊர் முலையார் மருவும் மறுகில்
தேர் ஊர்-நறையூர்ச் சித்தீச்சுரமே.

8

கரியின் உரியும், கலைமான்மறியும்,
எரியும் மழுவும், உடையான் இடம் ஆம்-
புரியும் மறையோர் நிறை சொல்பொருள்கள்
தெரியும்-நறையூர்ச் சித்தீச்சுரமே.

9

பேணா முனிவன் பெரு வேள்வி எலாம்
மாணாமை செய்தான் மருவும், இடம் ஆம்-
பாண் ஆர் குழலும், முழவும், விழவில்,
சேண் ஆர்-நறையூர்ச் சித்தீச்சுரமே.

10

குறியில் வழுவாக் கொடுங்கூற்று உதைத்த
எறியும் மழுவாள் படையான் இடம் ஆம்-
நெறியில் வழுவா நியமத்தவர்கள்
செறியும்-நறையூர்ச் சித்தீச்சுரமே.

11

போர் ஆர் புரம் எய் புனிதன் அமரும்
சீர் ஆர் நறையூர்ச் சித்தீச்சுரத்தை
ஆரூரன் சொல் இவை வல்லவர்கள்,
ஏர் ஆர் இமையோர் உலகு எய்துவரே.