பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
நீங்காச் சிவ ஆனந்த ஞேயத்தே நின்றிடப் பாங்கு ஆன பாசம் படரா படரினும் ஆங்காரம் நீங்கி அதன் நிலை நிற்கவே நீங்கா அமுதம் நிலை பெறல் ஆமே.
ஞேயத்தே நின்றோர்க்கு ஞான ஆதி நின்றிடும் ஞேயத்தின் ஞாதுரு ஞேயத்தில் வீடு ஆகும் ஞேயத்தின் ஞேயத்தை ஞேயத்தை உற்றவர் ஆயத்தில் நின்ற அறிவு அறிவாறே.
தான் என்று அவன் என்று இரண்டு ஆகும் தத்துவம் தான் என்று அவன் என்று இரண்டும் தனில் கண்டு தான் என்ற பூவை அவன் அடி சாத்தினால் நான் என்று அவன் என்கை நல்லது ஒன்று அன்றே.
வைச்சன வாறு ஆறு மாற்றி எனை வைத்து மெச்சப் பரன்தன் வியாத்துவம் மேல் இட்டு நிச்சயம் ஆக்கிச் சிவம் ஆக்கி ஞேயத்தால் அச்சம் கெடுத்து என்னை ஆண்டனள் நந்தியே.
முன்னை அறிவு அறியாத அம் மூடர் போல் பின்னை அறிவு அறியாமையைப் பேதித்தான் தன்னை அறியப் பரன் ஆக்கித் தன்சிவத்து என்னை அறிவித்து இருந்தனன் நந்தியே.
காணாத கண்ணுடன் கேளாத கேள்வியும் கோணாத போகமும் கூடாத கூட்டமும் நாணாத நாணமும் நாத அந்தப் போதமும் காணாய் என வந்து காட்டினன் நந்தியே.
மோனம் கை வந்தோர்க்கு முத்தியும் கை கூடும் மோனம் கை வந்தோர்க்குச் சித்தியும் முன் நிற்கும் மோனம் கை வந்து ஊமையாம் மொழி முற்றும் காண் மோனம் கை வந்து ஐங் கருமமும் முன்னுமே.
முத்திரை மூன்றின் முடிந்தது மூன்றின் பால் வைத்த கலை கால் நான் மடங்கான் மாற்றி உய்த் தவத்து ஆனந்தத்து ஒண் குரு பாதத்தே பெத்தம் அறுத்தோர் பிறந்து இறவாரே.
மேலைச் சொரூபங்கள் மூன்று மிகு சத்தி பாலித்த முத்திரை பற்றும் பரஞானி ஆலித்த நட்டமே ஞேயம் புகுந்து அற்ற மூலச் சொரூபன் மொழிஞா துருவனே.