பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
இலிங்கம் அது ஆவது யாரும் அறியார் இலிங்கம் அது ஆவது எண் திசை எல்லாம் இலிங்கம் அது ஆவது எண் எண் கலையும் இலிங்கம் அது ஆக எடுத்தது உலகே.
உலகில் எடுத்தது சத்தி முதலா உலகில் எடுத்தது சத்தி வடிவாய் உலகில் எடுத்தது சத்தி குணமாய் உலகம் எடுத்த சதாசிவன் தானே.
போகமும் முத்தியும் புத்தியும் சித்தியும் ஆகமும் ஆறு ஆறு தத்துவத்து அப்பால் ஆம் ஏகமும் நல்கி இருக்கும் சாதா சிவம் ஆகம துத்துவா ஆறும் சிவமே.
ஏத்தினர் எண் இலி தேவர் எம் ஈசனை வாழ்த்தினர் வாசப் பசும் தென்றல் வள்ளல் என்று ஆர்த்தனர் அண்டம் கடந்தப் புறநின்று காத்தனர் என்னும் கருத்து அறியாரே.
ஒண் சுடரோன் அயன் மால் பிரசா பதி ஒண் சுடர் ஆன இரவியோடு இந்திரன் கண் சுடர் ஆகிக் கலந்து எங்கும் தேவர்கள் தண் சுடராய் எங்கும் தற்பரம் ஆமே.
தாபரத்து உள் நின்று அருள வல்லான் சிவன் மாபரத்து உண்மை வழி படுவார் இல்லை மாபரத்து உண்மை வழிபடுவாளர்க்கும் பூவகத்து உள்நின்ற பொன் கொடி ஆகுமே.
தூய விமானமும் தூலம் அது ஆகும் ஆல் ஆய சதா சிவம் ஆகும் நல் சூக்குமம் பாய பலி பீடம் பத்திர லிங்கம் ஆம் ஆய அரன் நிலை ஆய்ந்து கொள்வார் கட்கே.
முத்துடன் மாணிக்கம் மொய்த்த பவளமும் கொத்தும் அக் கொம்பு சிலை நீறு கோமளம் அத்தன் தன் ஆகமம் அன்னம் அரிசி ஆம் உய்த்த தின் சாதனம் பூமண லிங்கமே.
துன்றும் தயிர் நெய் பால் துய்ய மெழுகுடன் கன்றிய செம்பு கனல் இரதம் சலம் வன்திறல் செங்கல் வடிவு உடை வில்லம் பொன் தென்றி அம் கொன்றை தெளி சிவ லிங்கமே.
அது உணர்ந்தோன் ஒரு தன்மையை நாடி எது உணரா வகை நின்றனன் ஈசன் புது உணர்வான புவனங்கள் எட்டும் இது உணர்ந்து என் உடல் கோயில் கொண்டானே.
அகல் இடமாய் அறியாமல் அடங்கும் உகல் இடமாய் நின்ற ஊன் அதன் உள்ளே பகல் இடம் ஆம் முனம் பாவ வினாசன் புகல் இடம் ஆய் நின்ற புண்ணியன் தானே.
போது புனை கழல் பூமி அது ஆவது மாது புனை முடி வானகம் ஆவது நீதியுள் ஈசன் உடல் விசும்பாய் நிற்கும் ஆதி உற நின்றது அப்பரிசு ஆமே.
தரை உற்ற சத்தி தனி லிங்கம் விண்ணாம் திரை பொரு நீர் அது மஞ்சன சாலை வரை தவழ் மஞ்சுநீர் வானுடு மாலை கரை அற்ற நந்தி கலை உந்திக்கு ஆமே.