பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

ஏழாம் தந்திரம் / ஞானலிங்கம்
வ.எண் பாடல்
1

உருவும் அருவும் உருவோடு அருவும்
மருவு பரசிவன் மன் பல் உயிர்க்கும்
குருவும் என நிற்கும் கொள்கையன் ஆகும்
தரு என நல்கும் சதா சிவன் தானே.

2

நால் ஆன கீழ் அது உருவ நடு நிற்க
மேல் ஆன நான்கும் மருவு மிக நாப்பண்
நால் ஆன ஒன்று மரு உரு நண்ணல் ஆல்
பால் ஆம் இவை ஆம் பர சிவன் தானே.

3

தேவர் பிரானைத் திசை முக நாதனை
நால்வர் பிரானை நடு உற்ற நந்தியை
ஏவர் பிரான் என்று இறைஞ்சுவர் அவ்வழி
யாவர் பிரான் அடி அண்ணலும் ஆமே.

4

வேண்டி நின்றே தொழுதேன் வினை போய் அற
ஆண்டு ஒரு திங்களும் நாளும் அளக்கின்ற
காண் தகையானொடும் கன்னி உணரினும்
மூண்ட கை மாறினும் ஒன்று அது ஆமே.

5

ஆதி பரம் தெய்வம் அண்டத்து நல் தெய்வம்
சோதி அடியார் தொடரும் பெரும் தெய்வம்
நீதியுள் மா தெய்வம் நின் மலன் எம் இறை
பாதியுள் மன்னும் பராசத்தி ஆமே.

6

சத்திக்கு மேலே பரா சத்தி தன் உள்ளே
சுத்த சிவ பதம் தோயாத தூ ஒளி
அத்தன் திருவடிக்கு அப்பாலைக்கு அப்பால் ஆம்
ஒத்தவும் ஆம் ஈசன் தான் ஆன உண்மையே.

7

கொழுந்தினைக் காணில் குவலயம் தோன்றும்
எழுந்து இடம் காணில் இருக்கலும் ஆகும்
பரந்து இடம் காணில் பார்ப்பதி மேலே
திரண்டு எழக் கண்டவன் சிந்தை உளானே.

8

எந்தை பரமனும் என் அம்மை கூட்டமும்
முந்த உரைத்து முறை சொல்லின் ஞானம் ஆம்
சந்தித்து இருந்த இடம் பெரும் கண்ணியை
உந்தியின் மேல் வைத்து உகந்து இருந்தானே.

9

சத்தி சிவன் விளையாட்டாகும் உயிராகி
ஒத்த இருமாயா கூட்டத்து இடை ஊட்டிச்
சுத்தம் அது ஆகும் துரியம் பிறவித்துச்
சித்தம் புகுந்து சிவம் அகம் ஆக்குமே.