பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

ஏழாம் தந்திரம் / சிவ லிங்கம்
வ.எண் பாடல்
1

குரைக்கின்ற வாரிக் குவலய நீரும்
பரக்கின்ற காற்றுப் பயில் கின்ற தீயும்
நிரைக்கின்ற வாறு இவை நீண்டு அகன்றானை
வரைத்து வலம் செயும் ஆறு அறியேனே.

2

வரைத்து வலம் செய்யும் ஆறு இங்கு ஒன்று உண்டு
நிரைத்து வருகங்கை நீர் மலர் ஏந்தி
உரைத்தவன் நாமம் உணர வல்லார்க்குப்
புரைத்து எங்கும் போகான் புரிசடையோனே.

3

ஒன்று எனக் கண்டே எம் ஈசன் ஒருவனை
நன்று என்று அடி இணை நான் அவனைத் தொழ
வென்று ஐம் புலனும் மிகக் கிடந்து இன்பு உற
அன்று என் அருள் செய்யும் ஆதிப் பிரானே.

4

மலர்ந்த அயன் மால் உருத்திரன் மகேசன்
பலம் தரும் ஐம் முகன் பரவிந்து நாதம்
நலம் தரும் சத்தி சிவன் வடிவு ஆகிப்
பலம் தரும் லிங்கம் பரா நந்தி ஆமே.

5

மேவி எழுகின்ற செஞ் சுடர் ஊடு சென்று
ஆவி எழும் அளவு அன்றே உடல் உற
மேவப் படுவதும் விட்டு நிகழ்வதும்
பாவித்து அடக்கில் பரகதி தானே.