பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

எட்டாம் தந்திரம் / எட்டிதழ்க் கமல முக்குண அவத்தை
வ.எண் பாடல்
1

ஒருங்கிய பூவும் ஓர் எட்டு இதழ் ஆகும்
மருங்கிய மாயா புரி அதன் உள்ளே
சுருங்கிய தண்டின் சுழுனையின் ஊடே
ஒருங்கிய சோதியை ஓர்ந்து எழும் உய்ந்தே.

2

மொட்டு அலர் தாமரை மூன்று உள மூன்றினும்
விட்டு அலர் கின்றனன் சோதி விரி சுடர்
எட்டு அலர் உள்ளே இரண்டு அலர் உள் உறில்
பட்டு அலர் கின்றது ஓர் பண்டு அங்ஙண் ஆமே.

3

ஆறே அருவி அகம் குளம் ஒன்று உண்டு
நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும்
கூறே குவி முலைக் கொம்பு அனையாளொடும்
வேறே இருக்கும் விழுப் பொருள் தானே.

4

திகை எட்டும் தேர் எட்டும் தேவதை எட்டும்
வகை எட்டும் ஆய் நின்ற ஆதிப் பிரானை
வகை எட்டு நான்கும் மற்று ஆங்கே நிறைந்து
முகை எட்டும் உள் நின்று உதிக்கின்ற வாறே.

5

ஏழும் சகளம் இயம்பும் கடந்து எட்டில்
வாழும் பரம் என்றது கடந்து ஒன்பதில்
ஊழி பரா பரம் ஓங்கிய பத்தினில்
தாழ்வு அது ஆன தனித் தன்மை தானே.

6

பல் ஊழி பண்பன் பகலோன் இறையவன்
நல் ஊழி ஐந்தின் உள்ளே நின்ற ஊழிகள்
செல் ஊழி அண்டத்துச் சென்ற அவ் வூழியுள்
அவ்வூழி உச்சியுள் ஒன்றில் பகவனே.

7

புரியம் உலகினில் பூண்ட எட்டானை
திரியும் களிற்றொடு தேவர் குழாமும்
எரியும் மழையும் இயங்கும் வெளியும்
பரியும் ஆகாசத்தில் பற்றது தானே.

8

ஊறும் அருவி உயர் வரை உச்சி மேல்
ஆறு இன்றிப் பாயும் அரும் குளம் ஒன்று உண்டு
சேறு இன்றிப் பூத்த செழும் கொடித் தாமரைப்
பூ இன்றிச் சூடான் புரி சடையோனே.

9

ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து
நின்றும் இருந்தும் நிலம் பல பேசினும்
வென்றும் இருந்தும் விகிர்தனை நாடுவர்
சென்றும் இருந்தும் திரு உடையோரே.

10

தொல் பத விசுவன்றை சதன் பிராஞ்ஞன்
நல் பத விராட்டன் பொன் கர்ப்பன் அவ் யாகிர்தன்
பிற் பதம் சொலிதையன் பிரசா பத்தியன்
பொன் புவி சாந்தன் பொரு அபிமானியே.