பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
பரகதி உண்டு என இல்லை என்போர்கள் நரகதி செல்வது ஞாலம் அறியும் இரகதி செய்திடுவார் கடை தோறும் துரகதி உண்ணத் தொடங்குவர் தாமே.
புறப்பட்டுப் போகும் புகுதும் என் நெஞ்சில் திறப்பட்ட சிந்தையைத் தெய்வம் என்று எண்ணி அறப்பட்ட மற்றப் பதி என்று அழைத்தேன் இறப் பற்றினேன் இங்கு இது என் என்கின்றானே.
திடர் இடை நில்லாத நீர் போல ஆங்கே உடல் இடை நில்லா உறு பொருள் காட்டிக் கடல் இடை நில்லாக் கலம் சேருமாப் போல் அடல் எரி வண்ணனும் அங்கு நின்றானே.
தாமரை நூல் போல் தடுப்பார் பரத்தொடும் போம் வழி வேண்டிப் புறமே உழிதர்வர் காண் வழி காட்டக் கண் காணா கலதிகள் தீ நெறி செல்வான் திரிகின்ற வாறே.
மூடுதல் இன்றி முடியும் மனிதர்கள் கூடுவர் நந்தி அவனைக் குறித்து உடன் காடும் மலையும் கழனி கடந்தோறும் ஊடும் உருவினை உன்ன கிலாரே.
ஆவது தெற்கும் வடக்கும் அமரர்கள் போவர் குடக்கும் குணக்கும் குறி வழி நாவின் இன் மந்திரம் என்று நடு அங்கி வேவது செய்து விளங்கிடுவீரே.
மயக்கு உற நோக்கினும் மா தவம் செய்யார் தமக்கு உறப் பேசின தாரணை கொள்ளார் சிணக்கு உறப் பேசின தீவினை யாளர் தமக்கு உறவல் வினை தாங்கி நின்றாரே.
விட்ட இலக்கணை தான் போம் வியோ மத்துத் தொட்டு விடாத துப சாந்தத்தே தொகும் விட்டு விடாதது மேவும் சத்து ஆதியில் சுட்டும் இலக்கண ஆதீதம் சொரூபமே.