பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

பாயிரம் / அறம் செய்வான் திறம்
வ.எண் பாடல்
1

ஆர்க்கும் இடுமின் அவர் இவர் என்னன் மின்
பார்த்து இருந்து உண்மின் பழம்பொருள் போற்றன் மின்
வேட்கை உடையீர் விரைந்து ஒல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்து உண்ணும் காலம் அறிமினே.

2

தாம் அறிவார் அண்ணல் தாள் பணிவார் அவர்
தாம் அறிவார் அறம் தாங்கி நின்றார் அவர்
தாம் அறிவார் சில தத்துவர் ஆவர்கள்
தாம் அறிவார்க்குத் தமர்பரன் ஆமே.

3

யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாய் உறை
யாவர்க்கும் ஆம் உண்ணும் போது ஒரு கைப்பிடி
யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரைதானே.

4

அற்று நின்றார் உண்ணும் ஊணே அறன் என்னும்
கற்றன போதம் கமழ்பவர் மானிடர்
உற்றுநின்று ஆங்கு ஒரு கூவல் குளத்தினில்
பற்றி வந்து உண்ணும் பயன் அறியாரே.

5

அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர்
தழுக்கிய நாளில் தருமமும் செய்யீர்
விழித்து இருந்து என் செய்வீர் வெம்மை பரந்து
விழக் கவன்று என் செய்வீர் ஏழை நெஞ்சீரே.

6

தன்னை அறியாது தான் அல என்னாது இங்கு
இன்மை அறியாது இளையர் என்று ஓராது
வன்மையில் வந்திடும் கூற்றம் வரு முன்னம்
தன்மையின் நல்ல தவம் செய்யும் நீரே.

7

துறந்தான் வழிமுதல் சுற்றமும் இல்லை
இறந்தான் வழிமுதல் இன்பமும் இல்லை
மறந்தான் வழிமுதல் வந்திலன் ஈசன்
அறிந்தான் அறியும் அளவு அறிவாரே.

8

தான் தவம் செய்வதாம் செய் தவத்து அவ்வழி
மான் தெய்வம் ஆக மதிக்கும் மனிதர் காள்
ஊன் தெய்வம் ஆக உயிர்க்கின்ற பல் உயிர்
நான் தெய்வம் என்று நமன் வருவானே.

9

திளைக்கும் வினைக் கடல் தீருறு தோணி
இளைப்பினை நீக்கும் இரு வழி உண்டு
கிளைக்கும் தனக்கும் அக்கேடு இல் புகழோன்
விளைக்கும் தவம் அறம் மேல் துணை ஆமே.

10

பற்று அதுவாய் நின்ற பற்றினைப் பார்மிசை
அற்றம் உரையான் அற நெறிக்கு அல்லது
உற்று உங்களால் ஒன்றும் ஈந்த அதுவே துணை
மற்று அண்ணல் வைத்த வழி கொள்ளும் ஆறே.