பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
புகுந்து நின்றான் வெளியாய் இருள் ஆகிப் புகுந்து நின்றான் புகழ் வாய் இகழ்வாகிப் புகுந்து நின்றான் உடலாய் உயிராகிப் புகுந்து நின்றான் புந்தி மன்னி நின்றானே.
தானே திசையொடு தேவருமாய் நிற்கும் தானே உடல் உயிர் தத்துவமாய் நிற்கும் தானே கடல் மலை ஆதியும் ஆய் நிற்கும் தானே உலகில் தலைவனும் ஆமே.
உடலாய் உயிராய் உலகம் அது ஆகிக் கடலாய்க் கார் முகில் நீர் பொழிவானாய் இடையாய் உலப்பு இலி எங்கும் தான் ஆகி அடையார் பெருவழி அண்ணல் நின்றானே.
தான் ஒரு காலம் தனிச் சுடராய் நிற்கும் தான் ஒரு கால் சண்ட மாருதமாய் நிற்கும் தான் ஒரு காலம் தண் மழையாய் நிற்கும் தான் ஒரு காலம் தண் மாயனும் ஆமே.
அன்பும் அறிவும் அடக்கமுமாய் நிற்கும் இன்பமும் இன்பக் கலவியு மாய் நிற்கும் முன்புறு காலமும் ஊழியுமாய் நிற்கும் அன்புற ஐந்தில் அமர்ந்து நின்றானே.
உற்று வனைவான் அவனே உலகினைப் பெற்று வனைவான் அவனே பிறவியைச் சுற்றிய சாலும் குடமும் சிறுதூதை மற்றும் அவனே வனைய வல்லானே.
உள் உயிர்ப்பாய் உடல் ஆகி நின்றான் நந்தி வெள் உயிராகும் வெளியாய் நிலம் கொளி உள் உயிர்க்கும் உணர்வே உடல் உள் பரந்து தள் உயிரா வண்ணம் தாங்கி நின்றானே.
தாங்கரும் தன்மையும் தான் அவை பல் உயிர் வாங்கிய காலத்து மற்றோர் பிறிது இல்லை ஓங்கி எழுமைக்கும் யோகாந்தம் அவ்வழி தாங்கி நின்றானும் அத் தாரணி தானே.
அணுகினும் சேயவன் அங்கியில் கூடி நணுகினும் ஞானக் கொழுந்து ஒன்று நல்கும் பணிகினும் பார்மிசைப் பல் உயிராகித் தணிகினும் மண்ணுடல் அண்ணல் செய்வானே.