பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

மூன்றாம் தந்திரம் / வாரசரம்
வ.எண் பாடல்
1

வெள்ளி வெண் திங்கள் விளங்கும் புதனிடம்
ஒள்ளிய மந்தன் இரவி செவ்வாய் வலம்
வள்ளிய பொன்னே வளரும் பிறை இடம்
தெள்ளிய தேய் பிறை தான் வலம் ஆமே.

2

வெள்ளி வெண் திங்கள் விளங்கும் புதன் மூன்றும்
தள்ளி இடத்தே தயங்குமே யாம் ஆகில்
ஒள்ளிய காயத்துக்கு ஊனம் இலை என்று
வள்ளல் நமக்கு மகிழ்ந்து உரைத்தானே.

3

செவ்வாய் வியாழன் சனி ஞாயிறு என்னும்
இவ்வாறு அறிகின்ற யோகி இறைவனே
ஒவ்வாத வாயு வலத்துப் புரிய விட்டு
அவ்வாறு அறிவார்க்கு அவ் ஆனந்தம் ஆமே.

4

மாறி வரும் இருபான் மதி வெய்யவன்
ஏறி இழியும் இடைபிங்கலை இடை
ஊறும் உயிர் நடுவே உயிர் இருக்கு இரந்து
ஏறி அறிமின் தெரிந்து தெளிந்தே.

5

உதித்து வலத்து இடம் போகின்ற போது
அதிர்த்து அஞ்சி ஓடுதல் ஆம் அகன்றாரும்
உதித்தது வே மிக ஓடிடும் ஆகில்
உதித்த இவ் ராசி உணர்ந்து கொள் உற்றே.

6

நடுவு நில்லாமல் இடம் வலம் ஓடி
அடுகின்ற வாயுவை அந்தணன் கூடி
இடுகின்ற வாறு சென்றின் பணி சேர
முடிகின்ற தீபத்தின் முன் உண்டு என்றானே.

7

ஆயும் பொருளும் அணி மலர் மேல் அது
வாயு விதமும் பதினாறு உள வலி
போய மனத்தைப் பொருகின்ற ஆதாரம்
ஆயுவும் நாளும் முகூர்த்தமும் ஆமே.