பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
பூசுவன எல்லாம் பூசிப் புலர்த்திய வாச நறும் குழல் மாலையும் சாத்திக் காயக் குழலி கலவியொடும் கலந்து தூசி துளை உறத் தூங்காது போகமே.
போகத்தை உன்னவே போகாது வாயுவும் மோகத்தை வெள்ளியும் மீளும் வியாழத்தில் சூது ஒத்த மென் முலையாளும் நல் சூதனும் தாதில் குழைந்து தலை கண்ட வாறே.
கண்டனும் கண்டியும் காதல் செய் யோகத்து மண்டலம் கொண்டு இருபாலும் வெளிநிற்கும் வண்டியை மேற் கொண்டு வான் நீர் உருட்டிடத் தண்டு ஒரு காலும் தளராது அங்கமே.
அங்கப் புணர்ச்சியும் ஆகின்ற தத்துவம் அங்கத்தில் விந்து வருகின்ற போகத்துப் பங்கப் படாமல் பரிகரித்துத் தம்மைத் தங்கிக் கொடுக்கத் தலைவனும் ஆமே.
தலைவனும் ஆயிடும் தன் வழி ஞானம் தலைவனும் ஆயிடும் தன்வழி போகம் தலைவனும் ஆயிடும் தன்வழி உள்ளே தலைவனும் ஆயிடும் தன்வழி அஞ்சே.
அஞ்சு கடிகை மேல் ஆறாம் கடிகையில் துஞ்சுவது ஒன்றத் துணைவி துணைவன்பால் நெஞ்சு நிறைந்தது வாய் கொளாது என்றது பஞ்ச கடிகை பரியங்க யோகமே.
பரி அங்க யோகத்துப் பஞ்ச கடிகை அரிய இவ் வியோகம் அடைந்தவர்க்கு அல்லது சரிவளை முன் கைச்சி சந்தனக் கொங்கை உருவித் தழுவ ஒருவற்கு ஒண்ணாதே.
ஒண்ணாத யோகத்தை உற்றவர் ஆர் என்னில் விண் ஆர்ந்த கங்கை விரிசடை வைத்தவன் பண்ணார் அமுதினைப் பஞ்ச கடிகையில் எண்ணாம் என எண்ணி இருந்தான் இருந்ததே.
ஏய்ந்த பிராயம் இருபது முப்பதும் வாய்ந்த குழலிக்கு மன்னர்க்கும் ஆனந்தம் வாய்ந்த குழலியோடு அடைந்து மலர்ந்திடச் சோர்ந்தன சித்தமும் சோர்வு இல்லை வெள்ளிக்கே.
வெள்ளி உருகிப் பொன்வழி ஓடாமே கள்ளத் தட்டானார் கரி இட்டு மூடினார் கொள்ளி பறியக் குழல் வழியே சென்று வள்ளி உள் நாவில் அடக்கி வைத்தாரே.
வைத்த இருவரும் தம்மின் மகிழ்ந்து உடன் சித்தம் கலங்காது செய்கின்ற ஆனந்தம் பத்து வகைக்கும் பதின் எண் கணத்துக்கும் வித்தகன் ஆய் நிற்கும் வெம் கதிரோனே.
வெம் கதிருக்கும் சனிக்கும் இடைநின்ற நங்கையைப் புல்லிய நம்பிக்கு ஓர் ஆனந்தம் தங்களில் பொன் இடை வெள்ளி தாழா முனம் திங்களில் செவ்வாய் புதைந்து இருந்தாரே.
திருத்திப் புதனைத் திருத்தல் செய்வார்க்குக் கருத்து அழகாலே கலந்து அங்கு இருக்கில் வருத்தமும் இல்லை ஆம் மங்கை பங்கற்கும் துருத்தி உள் வெள்ளியும் சோராது எழுமே.
எழுகின்ற தீயை முன்னே கொண்டு சென்று இட்டால் மெழுகு உருகும் பரி செய்திடும் மெய்யே உழுகின்றது இல்லை ஒளியை அறிந்தபின் விழுகின்ற தில்லை வெளி அறிவார்க்கே.
வெளியை அறிந்து வெளியின் நடுவே ஒளியை அறியின் உளி முறி ஆம் ஏ தெளிவை அறிந்து செழும் நந்தியாலே வெளியை அறிந்தனன் மேல் அறியேனே.
மேல் ஆம் தலத்தில் விரிந்தவர் ஆர் எனின் மால் ஆம் திசைமுகன் மா நந்தியாய் அவர் நாலா நிலத்தின் நடு ஆன அப்பொருள் மேலா உரைத்தனர் மின் இடை யாளுக்கே.
மின் இடையாளும் மின்னாளனும் கூட்டத்துப் பொன் இடை வட்டத்தின் உள்ளே புகப் பெய்து தன்னொடு தன்னைத் தலைப் பெய்ய வல்லார் ஏன் மண் இடைப் பல் ஊழி வாழலும் ஆமே.
வாங்கல் இறுதலை வாங்கலில் வாங்கிய வீங்க வலிக்கும் விரகு அறிவார் இல்லை வீங்க வலிக்கும் விரகு அறிவாளரும் ஓங்கிய தன்னை உதம் பண்ணினாரே.
உதம் அறிந்து அங்கே ஒரு சுழிப் பட்டால் கதம் அறிந்து அங்கே கபாலம் கறுக்கும் இதம் அறிந்து என்றும் இருப்பாள் ஒருத்தி பதம் அறிந்து உம் உளே பார்க் கடிந்தாளே.
பார் இல்லை நீர் இல்லை பங்கயம் ஒன்று உண்டு தார் இல்லை வேர் இல்லை தாமரை பூத்தது ஊர் இல்லை காணும் ஒளி அது ஒன்று உண்டு கீழ் இல்லை மேல் இல்லை கேள்வி இல் பூவே.