பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
அறு சமயத் தலைவராய் நின்றவருக்கு அன்பராய் மறு சமயச் சாக்கியர்தம் வடிவினால் வரும் தொண்டர் உறுதிவரச் சிவலிங்கம் கண்டு உவந்து கல் எறிந்து மறுவில் சரண் பெற்ற திறம் அறிந்தபடி வழுத்துவாம்.
தாளாளர்; திருச்சங்க மங்கையினில் தகவு உடைய வேளாளர் குலத்து உதித்தார்; மிக்க பொருள் தெரிந்து உணர்ந்து கேள் ஆகிப் பல் உயிர்க்கும் அருள் உடையார் ஆய்க் கெழுமி நீளாது பிறந்து இறக்கும் நிலை ஒழிவேன் என நிற்பார்.
அந் நாளில் எயில் காஞ்சி அணிநகரம் சென்று அடைந்து நல்ஞானம் அடைவதற்குப் பலவழியும் நாடுவார் முன் ஆகச் சாக்கியர் தாம் மொழி அறத்தின் வழிச் சார்ந்து மன்னாத பிறப்பு அறுக்கும் தத்துவத்தின் வழி உணர்வார்.
அந் நிலைமைச் சாக்கியர்தம் அரும் கலை நூல் ஓதி அது தன் நிலையும் புறச் சமயச் சார்வுகளும் பொருள் அல்ல என்னும் அது தெளிந்து ஈசர் அருள் கூட ஈறு இல் சிவ நல் நெறியே பொருள் ஆவது என உணர்வு நாட்டுவார்.
செய்வினையும் செய்வானும் அதன் பயனும் கொடுப்பானும் மெய் வகையால் நான்கு ஆகும் விதித்த பொருள் எனக் கொண்டே இவ் இயல்பு சைவநெறி அல்ல வற்றுக்கு இல்லை என உய்வகையால் பொருள் சிவன் என்று அருளாலே உணர்ந்து அறிந்தார்.
எந் நிலையில் நின்றாலும் எக் கோலம் கொண்டாலும் மன்னிய சீர்ச் சங்கரன் தாள் மறவாமை பொருள் என்றே துன்னிய வேடம் தன்னைத் துறவாதே தூய சிவம் தன்னை மிகும் அன்பினால் மறவாமை தலை நிற்பார்
எல்லாம் உடைய ஈசனே இறைவன் என்ன அறியாதார் பொல்லா வேடச் சாக்கியரே ஆகிப் புல்லர் ஆகுவார் அல்லார் கண்டர் தமக்கு இந்த அகிலம் எல்லாம் ஆள் என்ன வல்லார் இவர் அவ் வேடத்தை மாற்றாது அன்பின் வழிநிற்பார்.
காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய் நீள் நாகம் அணிந்தார்க்கு நிகழ் குறி ஆம் சிவலிங்கம் நாணாது நேடிய மால் நான் முகனும் காண நடுச் சேண் ஆரும் தழல் பிழம்பாய்த் தோன்றியது தெளிந்தார் ஆய்.
நாள் தோறும் சிவலிங்கம் கண்டு உண்ணும் அது நயந்து மாடு ஓர் வெள் இடை மன்னும் சிவலிங்கம் கண்டு மனம் நீடு ஓடு களி உவகை நிலைமை வரச் செயல் அறியார் பாடு ஓர் கல் கண்டு அதனைப் பதைப்போடும் எடுத்து எறிந்தார்.
அகம் நிறைந்த பேர் உவகை அடங்காத ஆதரவால் மகவு மகிழ்ந்து உவப்பார்கள் வன்மை புரிசெயலினால் இகழ்வனவே செய்தாலும் இளம், புதல்வர்க்கு இன்பமே நிகழும் அது போல் அதற்கு நீள் சடையார் தாம் மகிழ்வார்.
அன்றுபோய்ப் பிற்றைநாள் அந்நியதிக்கு அனையுங்கால் கொன்றை முடியார் மேல் தாம் கல் எறிந்த குறிப்புஅதனை நின்று உணர்வார் எனக்கு அப்போது இது நிகழ்ந்தது அவர் அருளே என்று அதுவே தொண்டு ஆக என்றும் அது செய நினைந்தார்.
தொடங்கிய நாள் அருளிய அத்தொழில் ஒழியா வழிதொடரும் கடன் புரிவார் அது கண்டு கல் எறிவார் துவர் ஆடைப் படம் புனை வேடம் தவிரார் பசுபதியார் தம் செயலே அடங்கலும் என்பது தெளிந்தார் ஆதலினால் மாதவர்தாம்.
இந் நியதி பரிவோடும் வழுவாமல் இவர் செய்ய முன்னும் திருத்தொண்டர் நிலை முடிந்தபடி தான் மொழியில் துன்னிய மெய் அன்புடனே எழுந்தவினை தூயவர்க்கு மன்னு மிகு பூசனை ஆம் அன்பு நெறி வழக்கினால்.
கல்லாலே எறிந்த அதுவும் அன்பு ஆன படி காணில் வில்வேடர் செருப்பு அடியும் திருமுடியில் மேவிற்று ஆல் நல்லார் மற்று அவர் செய்கை அன்பாலே நயந்து அதனை அல்லாதார் கல் என்பார் அரனார்க்கு அஃது அலர் ஆமால்.
அங்கு ஒரு நாள் அருளாலே அயர்ந்து உண்ணப் புகுகின்றார் எங்கள் பிரான் தனை எறியாது அயர்ந்தேன் யான் என எழுந்து, பொங்கியது ஓர் காதலுடன் மிகவிரைந்து புறப்பட்டு, வெங் கறியின் உரி புனைந்தார் திருமுன்பு மேவினார்.
கொண்டது ஒருகல் எடுத்துக் குறிகூடும் வகை எறிய உண்டி வினை ஒழித்து அஞ்சி ஓடி வரும் வேட்கை யொடும் கண்டு அருளும் கண்நுதலார் கருணை பொழி திருநோக்கால் தொண்டர் எதிர் நெடும் விசும்பில் துணைவி யொடும் தோன்றினார்.
மழ விடைமேல் எழுந்து அருளி வந்த ஒரு செயலாலே கழல் அடைந்த திருத்தொண்டர் கண்டு கரம் குவித்து இறைஞ்சி, விழ, அருள் நோக்கு அளித்து அருளிமிக்க சிவலோகத்தில் பழ அடிமைப் பாங்கு அருளிப் பரமர் எழுந்து அருளினார்.
ஆதியார் தம்மை நாளும் கல் எறிந்து அணுகப் பெற்ற கோது இல் சீர்த் தொண்டர் கொண்ட குறிப்பினை அவர்க்கு நல்கும் சோதியார் அறிதல் அன்றித் துணிவது என் அவர்தாள் சூடித் தீதினை நீக்கல் உற்றேன்; சிறப்புலியாரைச் செப்பி.