பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

கூற்றுவ நாயனார் புராணம்
வ.எண் பாடல்
1

துன்னார் முனைகள் தோள் வலியால் வென்று சூலப் படையார் தம்
நல்நாமம் தம் திரு நாவில் நாளும் நவிலும் நலம் மிக்கார்
பல் நாள் ஈசர் அடியார்தம் பாதம் பரவிப் பணிந்து ஏத்தி
முன் ஆகிய நல் திருத் தொண்டின் முயன்றார் களந்தை முதல்வனார்.

2

அருளின் வலியால் அரசு ஒதுங்க அவனி எல்லாம் அடிப் படுப்பார்
பொருளின் முடிவும் காண்பு அரிய வகையால் பொலிவித்து இகல் சிறக்க
மருளும் களிறு பாய் புரவி மணித்தேர் படைஞர் முதல் மாற்றார்
வெருளும் கருவி நான்கு நிறை வீரச் செருக்கின் மேலானர்.

3

வென்றி வினையின் மீக்கூர வேந்தர் முனைகள் பல முருக்கிச்
சென்று தும்பைத் துறை முடித்தும் செருவில் வாகைத் திறம் கெழுமி
மன்றல் மாலை மிலைந்துஅவர் தம் வள நாடு எல்லாம் கவர்ந்து முடி
ஒன்றும் ஒழிய அரசர் திரு எல்லாம் உடையர் ஆயினார்.

4

மல்லல் ஞாலம் புரக்கின்றார் மணி மா மவுலி புனைவதற்குத்
தில்லை வாழ் அந்தணர் தம்மை வேண்ட அவரும் செம்பியர் தம்
தொல்லை நீடும் குல முதலோர்க்கு அன்றிச் சூட்டோம் முடி என்று
நல்கார் ஆகிச் சேரலன் தன் மலை நாடு அணைய நண்ணுவார்.

5

ஒருமை உரிமைத் தில்லை வாழ் அந்தணர்கள் தம்மில் ஒரு குடியைப்
பெருமை முடியை அருமை புரி காவல் பேணும் படி இருத்தி
இருமை மரபும் தூயவர் தாம் சேரர் நாட்டில் எய்தியபின்
வரும் ஐ யுறவால் மனம் தளர்ந்து மன்றுள் ஆடும் கழல் பணிவார்.

6

அற்றை நாளில் இரவின் கண் அடியேன் தனக்கு முடி ஆகப்
பெற்ற பேறு மலர்ப் பாதம் பெறவே வேண்டும் எனப் பரவும்
பற்று விடாது துயில் வோர்க்குக் கனவில் பாத மலர் அளிக்க
உற்ற அருளால் அவை தாங்கி உலகம் எல்லாம் தனிப் புரந்தார்.

7

அம் பொன் நீடும் அம்பலத்துள் ஆரா அமுதத் திரு நடம் செய்
தம்பிரானார் புவியில் மகிழ் கோயில் எல்லாம் தனித் தனியே
இம்பர் ஞாலம் களி கூர எய்தும் பெரும் பூசனை இயற்றி
உம்பர் மகிழ அரசு அளித்தே உமையாள் கணவன் அடிசேர்ந்தார்.

8

காதல் பெருமைத் தொண்டின் நிலைக் கடல் சூழ் வையம் காத்து அளித்துக்
கோது அங்கு அகல முயல் களந்தைக் கூற்றனார் தம் கழல் வணங்கி
நாத மறை தந்து அளித்தாரை நடைநூல் பாவில் நவின்று ஏத்தும்
போதம் மருவிப் பொய் அடிமை இல்லாப் புலவர் செயல் புகல்வாம்.

9

சுந்தர மூர்த்தி சுவாமிகள் துதி
தேனும் குழலும் பிழைத்த திரு மொழியாள் புலவி தீர்க்க மதி
தானும் பணியும் பகை தீர்க்கும் சடையார் தூது தரும் திருநாள்
கூனும் குருடும் தீர்த்து ஏவல் கொள்வார் குலவு மலர்ப் பாதம்
யானும் பரவித் தீர்க்கின்றேன் ஏழு பிறப்பின் முடங்கு கூன்.