பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
திருக்கிளர் சீர் மாடங்கள் திருந்து பெரும் குடி நெருங்கிப் பெருக்கு வட வெள் ஆற்றுத் தென் கரைப்பால் பிறங்கு பொழில் வருக்கை நெடும் சுளை பொழிதேன் மடு நிறைத்து வயல் விளைக்கும் இருக்கு வேளூர் என்பது இவ் உலகில் விளங்கும் பதி.
அப்பதியில் குடி முதல்வர்க்கு அதிபராய் அளவு இறந்த எப்பொருளும் முடிவு அறியா எய்து பெரும் செல்வத்தார்; ஒப்பு இல் பெரும் குணத்தினால் உலகில் மேம்பட நிகழ்ந்தார்; மெய்ப் பொருள் ஆவன ஈசர் கழல் என்னும் விருப்பு உடையார்.
தாவாத பெரும் செல்வம் தலை நின்ற பயன் இது என்று ஓவாத ஒளிவிளக்குச் சிவன் கோயில் உள் எரித்து, நா ஆரப் பரவுவார்; நல்குரவு வந்து எய்தத் தேவாதி தேவர்பிரான் திருத்தில்லை சென்று அடைந்தார்.
தில்லை நகர் மணி மன்றுள் ஆடுகின்ற சேவடிகள் அல்கிய அன்புடன் இறைஞ்சி அமர்கின்றார் புரம் எரித்த வில்லியார் திருப் புலீச் சரத்தின் கண் விளக்கு எரிக்க இல் இடை உள்ளன மாறி எரித்துவரும் அந்நாளில்.
ஆய செயல் மாண்ட அதன்பின் அயல் அவர் பால் இரப்புஅஞ்சிக் காய முயற்சியில் அரிந்த கணம் புல்லுக் கொடு வந்து, மேய விலைக்குக் கொடுத்து, விலைப் பொருளால் நெய்மாறித் தூயதிரு விளக்கு எரித்தார்; துளக்குஅறு மெய்த் தொண்டனார்.
இவ்வகையால் திருந்து விளக்கு எரித்து வர அங்கு ஒரு நாள் மெய் வருந்தி அரிந்து எடுத்துக் கொடுவந்து விற்கும்புல் எவ்விடத்தும் விலை போகாது ஒழியவும் இப்பணி ஒழியார்; அவ் அரிபுல் லினைமாட்டி அணி விளக்கு ஆய்இட எரிப்பார்.
முன்பு திருவிளக்கு எரிக்கும் முறையாமம் குறையாமல் மென் புல்லும் விளக்கு எரிக்கப் போதாமை, மெய்யான அன்பு புரிவார் அடுத்த விளக்குத் தம் திருமுடியை என்பு உருக மடுத்து எரித்தார்; இருவினையின் தொடக்கு எரித்தார்.
தங்கள் பிரான் திரு உள்ளம் செய்து தலைத் திருவிளக்குப் பொங்கிய அன்புடன் எரித்த பொருவில் திருத்தொண்டருக்கு மங்கலம் ஆம் பெரும் கருணை வைத்து அருளச் சிவலோகத்து எங்கள் பிரான் கணம் புல்லர் இனிது இறைஞ்சி அமர்ந்துஇருந்தார்
மூரியார் கலி உலகின் முடி இட்ட திருவிளக்குப் பேரி ஆறு அணிந்தாருக்கு எரித்தார் தம் கழல் பேணி வேரியார் மலர்ச் சோலை விளங்கு திருக்கடவூரில் காரியார் தாம் செய்த திருத்தொண்டு கட்டு உரைப்பாம்.