பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
“எட்டு ஆம் திசைக்கும் இரு திசைக்கும்(ம்) இறைவா, முறை!” என்று இட்டார் அமரர் வெம் பூசல் எனக் கேட்டு, எரிவிழியா, ஒட்டாக் கயவர் திரி புரம் மூன்றையும் ஓர் அம்பினால் அட்டான் அடி நிழல் கீழது அன்றோ, என் தன் ஆர் உயிரே!
பேழ்வாய் அரவின் அரைக்கு அமர்ந்து ஏறிப் பிறங்கு-இலங்கு தேய் வாய் இளம்பிறை செஞ்சடை மேல் வைத்த தேவர் பிரான், மூவான், இளகான், முழு உலகோடு மண் விண்ணும் மற்றும் ஆவான், அடி நிழல் கீழது அன்றோ, என் தன் ஆர் உயிரே!
தரியா வெகுளியனாய்த் தக்கன் வேள்வி தகர்த்து உகந்த எரி ஆர் இலங்கிய சூலத்தினான், இமையாத முக்கண் பெரியான், பெரியார் பிறப்பு அறுப்பான், என்றும் தன் பிறப்பை அரியான், அடி நிழல் கீழது அன்றோ, என் தன் ஆர் உயிரே!
வடிவு உடை வாள் நெடுங்கண் உமையாளை ஓர்பால் மகிழ்ந்து வெடிகொள் அரவொடு வேங்கை அதள் கொண்டு மேல் மருவி, பொடி கொள் அகலத்துப் பொன் பிதிர்ந்தன்ன பைங்கொன்றை அம்தார் அடிகள் அடி நிழல் கீழது அன்றோ, என் தன் ஆர் உயிரே!
பொறுத்தான், அமரர்க்கு அமுது அருளி(ந்); நஞ்சம் உண்டு கண்டம் கறுத்தான்; கறுப்பு அழகா உடையான்; கங்கை செஞ்சடை மேல் செறுத்தான்; தனஞ்சயன் சேண் ஆர் அகலம் கணை ஒன்றினால் அறுத்தான்; அடி நிழல் கீழது அன்றோ, என் தன் ஆர் உயிரே!
காய்ந்தான், செறற்கு அரியான் என்று, காலனைக் கால் ஒன்றினால் பாய்ந்தான்; பணை மதில் மூன்றும் கணை என்னும் ஒள் அழலால் மேய்ந்தான்; வியன் உலகு ஏழும் விளங்க விழுமிய நூல் ஆய்ந்தான்; அடி நிழல் கீழது அன்றோ, என் தன் ஆர் உயிரே!
உளைந்தான், செறுத்தற்கு அரியான் தலையை உகிர் ஒன்றினால் களைந்தான், அதனை நிறைய நெடுமால் கண் ஆர் குருதி வளைந்தான், ஒரு விரலி(ந்)னொடு வீழ் வித்துச் சாம்பர் வெண் நீறு அளைந்தான், அடி நிழல் கீழது அன்றோ, என் தன் ஆர் உயிரே!
முந்து இவ் வட்டத்து இடைப் பட்டது எல்லாம் முடி வேந்தர் தங்கள் பந்தி வட்டத்து இடைப்பட்டு அலைப் புண்பதற்கு அஞ்சிக் கொல்லோ, நந்தி வட்டம் நறு மா மலர்க் கொன்றையும் நக்க சென்னி அந்தி வட்டத்து ஒளியான் அடிச் சேர்ந்தது, என் ஆர் உயிரே!
மிகத் தான் பெரியது ஓர் வேங்கை அதள் கொண்டு மெய்ம் மருவி, அகத்தான் வெருவ நல்லாளை நடுக்கு உறுப்பான்; வரும் பொன் முகத்தால் குளிர்ந்திருந்து, உள்ளத்தினால் உகப்பான் இசைந்த அகத்தான்; அடி நிழல் கீழது அன்றோ, என் தன் ஆர் உயிரே!
பைம் மாண் அரவு அல்குல் பங்கயச் சீறடியாள் வெருவக் கைம்மா, வரிசிலைக் காமனை, அட்ட கடவுள்; “முக்கண் எம்மான் இவன்” என்று இருவரும் ஏத்த எரி நிமிர்ந்த அம்மான்; அடி நிழல் கீழது அன்றோ, என் தன் ஆர் உயிரே!
பழக ஒர் ஊர்தி அரன், பைங்கண் பாரிடம் பாணி செய்யக் குழலும் முழவொடு மா நடம் ஆடி, உயர் இலங்கைக் கிழவன் இருபது தோளும் ஒரு விரலால் இறுத்த அழகன், அடி நிழல் கீழது அன்றோ, என் தன் ஆர் உயிரே!