பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருஏசறவு
வ.எண் பாடல்
1

இரும்பு தரு மனத்தேனை, ஈர்த்து, ஈர்த்து, என் என்பு உருக்கி,
கரும்பு தரு சுவை எனக்குக் காட்டினை உன் கழல் இணைகள்;
ஒருங்கு திரை உலவு சடை உடையானே! நரிகள் எல்லாம்
பெரும் குதிரை ஆக்கிய ஆறு அன்றே, உன் பேர் அருளே!

2

பண் ஆர்ந்த மொழி மங்கை பங்கா! நின் ஆள் ஆனார்க்கு
உண் ஆர்ந்த ஆர் அமுதே! உடையானே! அடியேனை
மண் ஆர்ந்த பிறப்பு அறுத்திட்டு ஆள்வாய், நீ வா என்ன;
கண் ஆர உய்ந்த ஆறு அன்றே, உன் கழல் கண்டே!

3

ஆதம் இலி யான், பிறப்பு, இறப்பு, என்னும் அரு நரகில்,
ஆர் தமரும் இன்றியே, அழுந்துவேற்கு, ஆ! ஆ! என்று,
ஓதம் மலி நஞ்சு உண்ட உடையானே! அடியேற்கு உன்
பாத மலர் காட்டிய ஆறு அன்றே, எம் பரம் பரனே!

4

பச்சைத் தாள் அரவு ஆட்டீ! படர் சடையாய்! பாத மலர்
உச்சத்தார் பெருமானே! அடியேனை உய்யக்கொண்டு,
எச்சத்து ஆர் சிறு தெய்வம் ஏத்தாதே, அச்சோ! என்
சித்தத்து ஆறு உய்ந்த ஆறு அன்றே, உன் திறம் நினைந்தே!

5

கற்று அறியேன் கலை ஞானம்; கசிந்து உருகேன்; ஆயிடினும்,
மற்று அறியேன் பிற தெய்வம்; வாக்கு இயலால், வார் கழல் வந்து
உற்று, இறுமாந்து இருந்தேன்; எம்பெருமானே! அடியேற்குப்
பொன் தவிசு நாய்க்கு இடும் ஆறு அன்றே, நின் பொன் அருளே!

6

பஞ்சு ஆய அடி மடவார் கடைக் கண்ணால், இடர்ப்பட்டு,
நஞ்சு ஆய துயர் கூர, நடுங்குவேன்; நின் அருளால்
உய்ஞ்சேன்; எம்பெருமானே! உடையானே! அடியேனை,
அஞ்சேல், என்று ஆண்ட ஆறு அன்றே, அம்பலத்து அமுதே!

7

என்பாலைப் பிறப்பு அறுத்து, இங்கு, இமையவர்க்கும் அறிய ஒண்ணா,
தென்பாலைத் திருப்பெருந்துறை உறையும் சிவபெருமான்,
அன்பால், நீ அகம் நெகவே புகுந்தருளி, ஆட்கொண்டது,
என்பாலே நோக்கிய ஆறு அன்றே, எம்பெருமானே!

8

மூத்தானே, மூவாத முதலானே, முடிவு இல்லா
ஒத்தானே, பொருளானே! உண்மையும் ஆய், இன்மையும் ஆய்,
பூத்தானே! புகுந்து இங்குப் புரள்வேனை, கருணையினால்
பேர்த்தே, நீ ஆண்ட ஆறு அன்றே, எம்பெருமானே!

9

மருவு இனிய மலர்ப் பாதம், மனத்தில் வளர்ந்து உள் உருக,
தெருவுதொறும் மிக அலறி, சிவபெருமான் என்று ஏத்தி,
பருகிய நின் பரம் கருணைத் தடம் கடலில் படிவு ஆம் ஆறு,
அருள் எனக்கு, இங்கு இடைமருதே இடம் கொண்ட அம்மானே!

10

நானேயோ தவம் செய்தேன்? சிவாய நம எனப் பெற்றேன்?
தேன் ஆய், இன் அமுதமும் ஆய், தித்திக்கும் சிவபெருமான்
தானே வந்து, எனது உள்ளம் புகுந்து, அடியேற்கு அருள் செய்தான்
ஊன் ஆரும் உயிர் வாழ்க்கை ஒறுத்து அன்றே, வெறுத்திடவே!