பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
வெய்ய வினை இரண்டும் வெந்து அகல, மெய் உருகி, பொய்யும் பொடி ஆகாது; என் செய்கேன்? செய்ய திரு ஆர் பெருந்துறையான் தேன் உந்து செம் தீ மருவாது இருந்தேன் மனத்து.
ஆர்க்கோ? அரற்றுகோ? ஆடுகோ? பாடுகோ? பார்க்கோ? பரம்பரனே, என் செய்கேன்? தீர்ப்பு அரிய ஆனந்த மால் ஏற்றும் அத்தன், பெருந்துறையான் தான் என்பார் ஆர் ஒருவர் தாழ்ந்து?
செய்த பிழை அறியேன்; சேவடியே, கை தொழுதே, உய்யும் வகையின் உயிர்ப்பு அறியேன் வையத்து இருந்து, உறையுள் வேல் மடுத்து, என் சிந்தனைக்கே கோத்தான் பெருந்துறையில் மேய பிரான்.
முன்னை வினை இரண்டும் வேர் அறுத்து, முன் நின்றான் பின்னைப் பிறப்பு அறுக்கும் பேராளன்; தென்னன்; பெருந்துறையில் மேய பெரும் கருணையாளன்; வரும் துயரம் தீர்க்கும் மருந்து.
அறையோ, அறிவார்க்கு? அனைத்து உலகும் ஈன்ற மறையோனும், மாலும், மால் கொள்ளும் இறையோன்; பெருந்துறையுள் மேய பெருமான்; பிரியாது இருந்து உறையும், என் நெஞ்சத்து இன்று.
பித்து என்னை ஏற்றும்; பிறப்பு அறுக்கும்; பேச்சு அரிது ஆம்; மத்தமே ஆக்கும், வந்து, என் மனத்தை; அத்தன், பெருந்துறையான், ஆட்கொண்டு பேர் அருளால் நோக்கும் மருந்து, இறவாப் பேரின்பம், வந்து.
வாரா வழி அருளி வந்து, எனக்கு மாறு இன்றி, ஆரா அமுதாய் அமைந்தன்றே சீர் ஆர் திருத்தன், பெருந்துறையான், என் சிந்தை மேய ஒருத்தன், பெருக்கும் ஒளி.
யாவர்க்கும் மேல் ஆம் அளவு இலாச் சீர் உடையான், யாவர்க்கும் கீழ் ஆம் அடியேனை, யாவரும் பெற்று அறியா இன்பத்துள் வைத்தாய்க்கு, என் எம்பெருமான்! மற்று அறியேன் செய்யும் வகை.
மூவரும், முப்பத்து மூவரும், மற்று ஒழிந்த தேவரும், காணாச் சிவபெருமான் மா ஏறி, வையகத்தே வந்திழிந்த வார் கழல்கள் வந்திக்க, மெய்யகத்தே இன்பம் மிகும்.
இருந்து என்னை ஆண்டான் இணை அடியே சிந்தித்து இருந்து, இரந்துகொள், நெஞ்சே! எல்லாம் தரும் காண் பெருந்துறையில் மேய பெரும் கருணையாளன், மருந்து உருவாய், என் மனத்தே, வந்து.
இன்பம் பெருக்கி, இருள் அகற்றி, எஞ்ஞான்றும் துன்பம் தொடர்வு அறுத்து, சோதி ஆய், அன்பு அமைத்து, சீர் ஆர் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே ஊர் ஆகக் கொண்டான், உவந்து.