பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
ஆடுகின்றிலை; கூத்துஉடையான் கழற்கு அன்பு இலை; என்பு உருகிப பாடுகின்றிலை; பதைப்பதும் செய்கிலை; பணிகிலை; பாத மலர் சூடுகின்றிலை; சூட்டுகின்றதும் இலை; துணை இலி பிண நெஞ்சே! தேடுகின்றிலை; தெருவுதோறு அலறிலை; செய்வது ஒன்று அறியேனே.
அறிவு இலாத எனை, புகுந்து ஆண்டுகொண்டு அறிவதை அருளி, மெய்ந் நெறி எலாம் புலம் ஆக்கிய எந்தையை, பந்தனை அறுப்பானை, பிறிவு இலாத இன் அருள்கள் பெற்றிருந்தும், மாறு ஆடுதி; பிண நெஞ்சே! கிறி எலாம் மிகக் கீழ்ப்படுத்தாய்; கெடுத்தாய் என்னைக் கெடுமாறே.
மாறி நின்று எனைக் கெடக் கிடந்தனையை, எம் மதி இலி மட நெஞ்சே! தேறுகின்றிலம் இனி உனை; சிக்கெனச் சிவன் அவன் திரள் தோள்மேல் நீறு நின்றது கண்டனை; ஆயினும், நெக்கிலை; இக் காயம் கீறுகின்றிலை; கெடுவது உன் பரிசு இது; கேட்கவும் கில்லேனே.
கிற்ற வா, மனமே! கெடுவாய்; உடையான் அடி நாயேனை விற்று எலாம் மிக ஆள்வதற்கு உரியவன் விரை மலர்த் திருப்பாதம் முற்று இலா இளம் தளிர் பிரிந்து இருந்து நீ உண்டன எல்லாம் முன் அற்ற ஆறும் நின் அறிவும் நின் பெருமையும் அளவு அறுக்கில்லேனே.
அளவு அறுப்பதற்கு அரியவன் இமையவர்க்கு அடியவர்க்கு எளியான் நம் களவு அறுத்து நின்று ஆண்டமை கருத்தினுள் கசிந்து உணர்ந்து இருந்தேயும் உள கறுத்து உனை நினைந்து உளம் பெருங்களன் செய்த்தும் இலை நெஞ்சே பளகு அறுத்து உடையான் கழல் பணிந்திலை பரகதி புகுவானே.
புகுவது ஆவதும்; போதரவு இல்லதும்; பொன் நகர் புகப் போதற்கு உகுவது ஆவதும்; எந்தை, எம்பிரான், என்னை ஆண்டவன் கழற்கு அன்பு நெகுவது ஆவதும்; நித்தலும் அமுதொடு, தேனொடு, பால், கட்டி, மிகுவது ஆவதும்; இன்று எனின், மற்று இதற்கு என் செய்கேன் வினையேனே?
வினை என்போல் உடையார் பிறர் ஆர்? உடையான், அடி நாயேனைத் தினையின் பாகமும் பிரிவது திருக்குறிப்பு அன்று; மற்று அதனாலே, முனைவன் பாத நல் மலர் பிரிந்திருந்தும், நான் முட்டிலேன், தலை கீறேன்; இனையன் பாவனை, இரும்பு; கல், மனம்; செவி, இன்னது என்று அறியேனே.
ஏனை யாவரும் எய்திடல் உற்று, மற்று இன்னது என்று அறியாத தேனை, ஆன் நெயை, கரும்பின் இன் தேறலை, சிவனை, என் சிவலோகக் கோனை, மான் அன நோக்கி தன் கூறனை, குறுகிலேன்; நெடும் காலம், ஊனை, யான் இருந்து ஓம்புகின்றேன்; கெடுவேன் உயிர் ஓயாதே.
ஓய்வு இலாதன; உவமனில் இறந்தன; ஒள் மலர்த் தாள் தந்து, நாயில் ஆகிய குலத்தினும் கடைப்படும் என்னை, நல் நெறி காட்டி, தாயில் ஆகிய இன் அருள் புரிந்த, என் தலைவனை நனி காணேன்; தீயில் வீழ்கிலேன்; திண் வரை உருள்கிலேன்: செழும் கடல் புகுவேனே?
வேனில் வேள் கணை கிழித்திட, மதி சுடும்; அது தனை நினையாதே, மான் நிலாவிய நோக்கியர் படிறிடை மத்து இடு தயிர் ஆகி, தேன் நிலாவிய திருஅருள் புரிந்த, என் சிவன் நகர் புகப் போகேன்; ஊனில் ஆவியை ஓம்புதல் பொருட்டு, இனும் உண்டு உடுத்து இருந்தேனே.