கலவமாமயில் ஆர் இயலாள்,கரும்பு அன்ன மென்மொழியாள்,
கதிர் வாள்நுதல்
குலவு பூங்குழலாள் உமை கூறனை, வேறு உரையால்
அலவை சொல்லுவார் தேர் அமண் ஆதர்கள்
ஆக்கினான்தனை, நண்ணலும் நல்கும் நன்
புலவர்தாம் புகழ் பொன் பதி பூந்தராய் போற்றுதுமே.