பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
பந்து சேர் விரலாள், பவளத்துவர் வாயினாள், பனி மா மதி போல் முகத்து அந்தம் இல் புகழாள், மலைமாதொடும் ஆதிப்பிரான் வந்து சேர்வு இடம் வானவர் எத்திசையும் நிறைந்து, வலம்செய்து, மாமலர் புந்தி செய்து இறைஞ்சிப் பொழி பூந்தராய் போற்றுதுமே.
காவி அம் கருங்கண்ணினாள், கனித்தொண்டைவாய்,கதிர் முத்த நல்வெண் நகை, தூவி அம் பெடை அன்னம் நடை, சுரி மென்குழலாள், தேவியும் திருமேனி ஓர்பாகம் ஆய், ஒன்று இரண்டு ஒரு மூன்றொடு சேர் பதி, பூவில் அந்தணன் ஒப்பவர், பூந்தராய் போற்றுதுமே.
பை அரா வரும் அல்குல், மெல் இயல்,பஞ்சின் நேர் அடி, வஞ்சி கொள் நுண் இடை, தையலாள் ஒருபால் உடை எம் இறை சாரும் இடம் செய் எலாம் கழுநீர் கமலம்மலர்த் தேறல் ஊறலின், சேறு உலராத, நல் பொய் இலா மறையோர் பயில் பூந்தராய் போற்றுதுமே
முள்ளி நாள்முகை, மொட்டு இயல் கோங்கின் அரும்பு, தென் கொள் குரும்பை, மூவாமருந்து உள் இயன்ற பைம்பொன் கலசத்து இயல் ஒத்த முலை, வெள்ளிமால்வரை அன்னது ஓர் மேனியில் மேவினார் பதி வீ மரு தண்பொழில் புள் இனம் துயில் மல்கிய பூந்தராய் போற்றுதுமே.
பண் இயன்று எழு மென்மொழியாள், பகர் கோதை, ஏர் திகழ் பைந்தளிர்மேனி, ஓர் பெண் இயன்ற மொய்ம்பின் பெருமாற்கு இடம் பெய்வளையார் கண் இயன்று எழு காவி, செழுங் கருநீலம், மல்கிய காமரு வாவி, நல் புண்ணியர் உறையும் பதி பூந்தராய் போற்றுதுமே.
வாள் நிலாமதி போல் நுதலாள்,மடமாழை ஒண்கணாள், வண் தரள(ந்) நகை, பாண் நிலாவிய இன் இசை ஆர் மொழிப் பாவையொடும், சேண் நிலாத் திகழ் செஞ்சடை எம் அண்ணல் சேர்வது சிகரப் பெருங்கோயில் சூழ் போழ் நிலா நுழையும் பொழில் பூந்தராய் போற்றுதுமே.
கார் உலாவிய வார்குழலாள், கயல்கண்ணினாள், புயல் கால் ஒளிமின் இடை, வார் உலாவிய மென்முலையாள், மலைமாது உடன் ஆய், நீர் உலாவிய சென்னியன் மன்னி,நிகரும் நாமம் முந்நான்கும் நிகழ் பதி போர் உலாவு எயில் சூழ் பொழில் பூந்தராய் போற்றுதுமே.
காசை சேர் குழலாள், கயல் ஏர் தடங்கண்ணி, காம்பு அன தோள், கதிர் மென்முலை, தேசு சேர் மலைமாது அமரும் திருமார்பு அகலத்து ஈசன் மேவும் இருங்கயிலை எடுத்தானை அன்று அடர்த்தான் இணைச்சேவடி பூசை செய்பவர் சேர் பொழில் பூந்தராய் போற்றுதுமே.
கொங்கு சேர் குழலாள், நிழல் வெண் நகை, கொவ்வை வாய், கொடி ஏர் இடையாள் உமை பங்கு சேர் திருமார்பு உடையார்; படர் தீ உரு ஆய், மங்குல் வண்ணனும் மா மலரோனும் மயங்க நீண்டவர்; வான்மிசை வந்து எழு பொங்கு நீரில் மிதந்த நன் பூந்தராய் போற்றுதுமே.
கலவமாமயில் ஆர் இயலாள்,கரும்பு அன்ன மென்மொழியாள், கதிர் வாள்நுதல் குலவு பூங்குழலாள் உமை கூறனை, வேறு உரையால் அலவை சொல்லுவார் தேர் அமண் ஆதர்கள் ஆக்கினான்தனை, நண்ணலும் நல்கும் நன் புலவர்தாம் புகழ் பொன் பதி பூந்தராய் போற்றுதுமே.
தேம்பல் நுண் இடையாள் செழுஞ் சேல் அன கண்ணியோடு அண்ணல் சேர்வு இடம், தேன் அமர் பூம்பொழில் திகழ், பொன் பதி பூந்தராய் போற்றுதும்!” என்று ஓம்பு தன்மையன்-முத்தமிழ் நால்மறை ஞானசம்பந்தன்-ஒண் தமிழ்மாலை கொண்டு ஆம் படி இவை ஏத்த வல்லார்க்கு அடையா, வினையே.
இயல் இசை எனும் பொருளின் திறம் ஆம் புயல் அன மிடறு உடைப் புண்ணியனே! கயல் அன வரி நெடுங்கண்ணியொடும் அயல் உலகு அடி தொழ அமர்ந்தவனே! கலன் ஆவது வெண்தலை; கடிபொழில் புகலி தன்னுள், நிலன் நாள்தொறும் இன்பு உற, நிறை மதி அருளினனே.
நிலை உறும் இடர் நிலையாத வண்ணம் இலை உறு மலர்கள் கொண்டு ஏத்துதும், யாம்; மலையினில் அரிவையை வெருவ, வன் தோல் அலைவரு மதகரி உரித்தவனே! இமையோர்கள் நின் தாள் தொழ, எழில் திகழ் பொழில் புகலி உமையாளொடு மன்னினை உயர் திருவடி இணையே.
பாடினை, அருமறை வரல்முறையால்; ஆடினை, காண முன் அருவனத்தில்; சாடினை, காலனை; தயங்கு ஒளி சேர் நீடு வெண்பிறை முடி நின்மலனே! நினையே அடியார் தொழ, நெடுமதில் புகலி(ந்)நகர்- தனையே இடம் மேவினை; தவநெறி அருள், எமக்கே!
நிழல் திகழ் மழுவினை! யானையின் தோல் அழல் திகழ் மேனியில் அணிந்தவனே! கழல் திகழ் சிலம்பு ஒலி அலம்ப, நல்ல முழவொடும் அருநடம் முயற்றினனே! முடிமேல் மதி சூடினை! முருகு அமர் பொழில் புகலி அடியார் அவர் ஏத்து உற, அழகொடும் இருந்தவனே
கருமையின் ஒளிர் கடல் நஞ்சம் உண்ட உரிமையின், உலகு உயிர் அளித்த நின்தன் பெருமையை நிலத்தவர் பேசின் அல்லால், அருமையில் அளப்பு அரிது ஆயவனே! அரவு ஏர் இடையாளொடும், அலைகடல் மலி புகலி, பொருள் சேர்தர நாள்தொறும் புவிமிசைப் பொலிந்தவனே!
அடை அரிமாவொடு, வேங்கையின் தோல், புடை பட அரைமிசைப் புனைந்தவனே! படை உடை நெடுமதில் பரிசு அழித்த, விடை உடைக் கொடி மல்கு, வேதியனே! விகிர்தா! பரமா! நின்னை விண்ணவர் தொழ, புகலித் தகுவாய், மடமாதொடும், தாள் பணிந்தவர் தமக்கே.
அடியவர் தொழுது எழ, அமரர் ஏத்த, செடிய வல்வினை பல தீர்ப்பவனே! துடி இடை அகல் அல்குல்-தூமொழியைப் பொடி அணி மார்பு உறப் புல்கினனே! புண்ணியா! புனிதா! புகர் ஏற்றினை! புகலிந்நகர் நண்ணினாய்! கழல் ஏத்திட, நண்ணகிலா, வினையே.
இரவொடு, பகல் அது, ஆம் எம்மான்! உன்னைப் பரவுதல் ஒழிகிலேன், வழி அடியேன்; குர, விரி நறுங்கொன்றை, கொண்டு அணிந்த அர விரிசடை முடி ஆண்டகையே! அனமென் நடையாளொடும், அதிர்கடல் இலங்கை மன்னை இனம் ஆர்தரு தோள் அடர்த்து, இருந்தனை, புகலியுளே.
உருகிட உவகை தந்து உடலினுள்ளால், பருகிடும் அமுது அன பண்பினனே! பொரு கடல் வண்ணனனும் பூ உளானும் பெருகிடும் மருள் எனப் பிறங்கு எரி ஆய் உயர்ந்தாய்! இனி, நீ எனை ஒண்மலர் அடி இணைக்கீழ் வயந்து ஆங்கு உற நல்கிடு, வளர்மதில் புகலி மனே!
கையினில் உண்பவர், கணிகநோன்பர், செய்வன தவம் அலாச் செதுமதியார், பொய்யவர் உரைகளைப் பொருள் எனாத மெய்யவர் அடி தொழ விரும்பினனே! வியந்தாய், வெள் ஏற்றினை விண்ணவர் தொழு புகலி உயர்ந்து ஆர் பெருங்கோயிலுள் ஒருங்கு உடன் இருந்தவனே!
புண்ணியர் தொழுது எழு புகலி(ந்) நகர், விண்ணவர் அடி தொழ விளங்கினானை, நண்ணிய ஞானசம்பந்தன் வாய்மை பண்ணிய அருந்தமிழ் பத்தும் வல்லார், நடலை அவை இன்றிப் போய் நண்ணுவர், சிவன் உலகம்; இடர் ஆயின இன்றித் தாம் எய்துவர், தவநெறியே.
தக்கன் வேள்வி தகர்த்தவன், பூந்தராய மிக்க செம்மை விமலன், வியன் கழல் சென்று சிந்தையில் வைக்க, மெய்க்கதி நன்று அது ஆகிய நம்பன்தானே.
புள் இனம் புகழ் போற்றிய பூந்தராய் வெள்ளம் தாங்கு விகிர்தன் அடி தொழ, ஞாலத்தில் உயர்வார், உள்கும் நன்நெறி மூலம் ஆய முதலவன் தானே.
வேந்தராய் உலகு ஆள விருப்பு உறின், பூந்தராய் நகர் மேயவன் பொன் கழல் நீதியால் நினைந்து ஏத்தி உள்கிட, சாதியா, வினை ஆனதானே.
பூசுரர் தொழுது ஏத்திய பூந்தராய் ஈசன் சேவடி ஏத்தி இறைஞ்சிட, சிந்தை நோய் அவை தீர நல்கிடும் இந்து வார்சடை எம் இறையே
பொலிந்த என்பு அணி மேனியன்-பூந்தராய் மலிந்த புந்தியர் ஆகி வணங்கிட, நும்தம் மேல்வினை ஓட, வீடுசெய் எந்தை ஆய எம் ஈசன்தானே.
பூதம் சூழப் பொலிந்தவன், பூந்தராய் நாதன், சேவடி நாளும் நவின்றிட, நல்கும், நாள்தொறும் இன்பம் நளிர்புனல் பில்கு வார்சடைப் பிஞ்ஞகனே.
புற்றின் நாகம் அணிந்தவன், பூந்தராய் பற்றி வாழும் பரமனைப் பாடிட, பாவம் ஆயின தீரப் பணித்திடும் சே அது ஏறிய செல்வன் தானே
போதகத்து உரி போர்த்தவன், பூந்தராய் காதலித்தான்-கழல் விரல் ஒன்றினால், அரக்கன் ஆற்றல் அழித்து, அவனுக்கு அருள் பெருக்கி நின்ற எம் பிஞ்ஞகனே.
மத்தம் ஆன இருவர் மருவு ஒணா அத்தன் ஆனவன் மேவிய பூந்தராய், ஆள் அது ஆக, அடைந்து உய்ம்மின்! நும் வினை மாளும் ஆறு அருள்செய்யும், தானே.
பொருத்தம் இல் சமண் சாக்கியர் பொய் கடிந்து, இருத்தல் செய்த பிரான்-இமையோர் தொழ, பூந்தராய் நகர் கோயில் கொண்டு, கை ஏந்தும் மான்மறி எம் இறையே.
புந்தியால் மிக நல்லவர் பூந்தராய் அந்தம் இல் எம் அடிகளை, ஞானசம் பந்தன் மாலை கொண்டு ஏத்தி வாழும்! நும் பந்தம் ஆர் வினை பாறிடுமே.
கண் நுதலானும், வெண் நீற்றினானும், கழல் ஆர்க்கவே பண் இசை பாட நின்று ஆடினானும், பரஞ்சோதியும் புண்ணிய நால்மறையோர்கள் ஏத்தும் புகலி(ந்) நகர், பெண்ணின் நல்லாளொடும் வீற்றிருந்த பெருமான் அன்றே!
சாம்பலோடும் தழல் ஆடினானும், சடையின் மிசைப் பாம்பினோடும் மதி சூடினானும், பசு ஏறியும் பூம் படுகல்(ல்) இள வாளை பாயும் புகலி(ந்) நகர், காம்பு அன தோளியோடும்(ம்) இருந்த கடவுள் அன்றே!
கருப்பு நல் வார் சிலைக் காமன் வேவக் கடைக்கண்டானும், மருப்பு நல் ஆனையின் ஈர் உரி போர்த்த மணாளனும் பொருப்பு அன மா மணி மாடம் ஓங்கும் புகலி(ந்) நகர், விருப்பின் நல்லாளொடும் வீற்றிருந்த விமலன் அன்றே!
அங்கை இலங்கு அழல் ஏந்தினானும், அழகு ஆகவே கங்கையைச் செஞ்சடை சூடினானும், கடலின்(ன்) இடைப் பொங்கிய நஞ்சு அமுது உண்டவனும் புகலி(ந்) நகர் மங்கை நல்லாளொடும் வீற்றிருந்த மணவாளனே.
சாம நல்வேதனும், தக்கன் தன் வேள்வி தகர்த்தானும், நாமம் நூறு-ஆயிரம் சொல்லி வானோர் தொழும் நாதனும் பூ மல்கு தண்பொழில் மன்னும் அம் தண் புகலி(ந்)நகர், கோமளமாதொடும் வீற்றிருந்த குழகன் அன்றே!
இரவு இடை ஒள் எரி ஆடினானும், இமையோர் தொழச் செரு இடை முப்புரம் தீ எரித்த சிவலோகனும், பொரு விடை ஒன்று உகந்து ஏறினானும் புகலி(ந்)நகர், அரவு இடை மாதொடும் வீற்றிருந்த அழகன் அன்றே!
சேர்ப்பது திண் சிலை மேவினானும், திகழ் பாலன்மேல் வேர்ப்பது செய்த வெங்கூற்று உதைத்தானும் வேள்விப்புகை போர்ப்பது செய்து அணி மாடம் ஓங்கும் புகலி(ந்) நகர், பார்ப்பதியோடு உடன் வீற்றிருந்த பரமன் அன்றே!
கல்-நெடுமால் வரைக்கீழ் அரக்கன்(ன்) இடர் கண்டானும், வில் நெடும் போர் விறல் வேடன் ஆகி விசயற்கு ஒரு பொன் நெடுங்கோல் கொடுத்தானும் தண் புகலி(ந்)நகர், அன்னம் அன்ன(ந்) நடை மங்கையொடும் அமர்ந்தான் அன்றே!
பொன்நிற நான்முகன், பச்சையான், என்று இவர் புக்குழித் தன்னை இன்னான் எனக் காண்பு அரிய தழல்சோதியும் புன்னை பொன்தாது உதிர் மல்கும் அம் தண் புகலி(ந்) நகர், மின் இடை மாதொடும் வீற்றிருந்த விமலன் அன்றே!
பிண்டியும் போதியும் பேணுவார் பேணைப் பேணாதது ஓர், தொண்டரும் காதல்செய், சோதி ஆய சுடர்ச்சோதியான்- புண்டரீகம் மலர்ப் பொய்கை சூழ்ந்த புகலி(ந்) நகர், வண்டு அமர் கோதையொடும்(ம்) இருந்த மணவாளனே.
பூங் கமழ் கோதையொடும்(ம்) இருந்தான், புகலி(ந்) நகர்ப் பாங்கனை, ஞானசம்பந்தன் சொன்ன தமிழ் பத்து இவை, ஆங்கு அமர்வு எய்திய ஆதி ஆக, இசை வல்லவர், ஓங்கு அமராவதியோர் தொழச் செல்வதும் உண்மையே.
மின் அன எயிறு உடை விரவலோர்கள் தம் துன்னிய புரம் உகச் சுளிந்த தொன்மையர் புன்னை அம்பொழில் அணி பூந்தராய் நகர் அன்ன அன்ன(ந்) நடை அரிவை பங்கரே.
மூதணி முப்புரத்து எண்ணிலோர்களை வேது அணி சரத்தினால், வீட்டினார் அவர் போது அணி பொழில் அமர் பூந்தராய் நகர் தாது அணி குழல் உமை தலைவர்; காண்மினே!
தருக்கிய திரிபுரத்தவர்கள் தாம் உக, பெருக்கிய சிலைதனைப் பிடித்த பெற்றியர் பொரு(க்) கடல் புடை தரு பூந்தராய் நகர் கரு(க்)கிய குழல் உமை கணவர்; காண்மினே!
நாகமும் வரையுமே நாணும் வில்லுமா, மாகம் ஆர் புரங்களை மறித்த மாண்பினர் பூகம் ஆர் பொழில் அணி பூந்தராய் நகர் பாகு அமர் பொழி உமை பங்கர்; காண்மினே!
வெள் எயிறு உடைய அவ் விரவலார்கள் ஊர் ஒள் எரியூட்டிய ஒருவனார் ஒளிர் புள் அணி புறவினில் பூந்தராய் நகர் கள் அணி குழல் உமை கணவர்; காண்மினே!
துங்கு இயல் தானவர் தோற்றம் மா நகர் அங்கியில் வீழ்தர ஆய்ந்த அம்பினர் பொங்கிய கடல் அணி பூந்தராய் நகர் அம் கயல் அன கணி அரிவை பங்கரே.
அண்டர்கள் உய்ந்திட, அவுணர் மாய்தரக் கண்டவர்; கடல்விடம் உண்ட கண்டனார் புண்டரீக(வ்) வயல் பூந்தராய் நகர் வண்டு அமர் குழலிதன் மணாளர்; காண்மினே!
மா சின அரக்கனை வரையின் வாட்டிய, காய் சின எயில்களைக் கறுத்த கண்டனார் பூசுரர் பொலி தரு பூந்தராய் நகர் காசை செய் குழல் உமை கணவர்; காண்மினே!
தாம் முகம் ஆக்கிய அசுரர்தம் பதி வேம் முகம் ஆக்கிய விகிர்தர் கண்ணனும், பூமகன், அறிகிலா பூந்தராய் நகர்க் கோமகன், எழில் பெறும் அரிவை கூறரே
முத்தர அசுரர்கள் மொய்த்த முப்புரம் அத் தகும் அழல் இடை வீட்டினார் அமண் புத்தரும் அறிவு ஒணாப் பூந்தராய் நகர் கொத்து அணி குழல் உமை கூறர்; காண்மினே!
புரம் எரி செய்தவர், பூந்தராய் நகர்ப் பரம் மலி குழல் உமை நங்கை பங்கரைப் பரவிய பந்தன் மெய்ப் பாடல் வல்லவர் சிரம் மலி சிவகதி சேர்தல் திண்ணமே.
மண்ணின் நல்ல வண்ணம் வாழல் ஆம், வைகலும்; எண்ணின் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவு இலை கண்ணின் நல்ல(ஃ)து உறும் கழுமல வள நகர் பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே!
போதை ஆர் பொன் கிண்ணத்து அடிசில் பொல்லாது எனத் தாதையார் முனிவு உற, தான் எனை ஆண்டவன்; காதை ஆர் குழையினன்; கழுமல வள நகர் பேதையாள் அவளொடும் பெருந்தகை இருந்ததே!
தொண்டு அணைசெய் தொழில்-துயர் அறுத்து உய்யல் ஆம் வண்டு அணை கொன்றையான், மதுமலர்ச் சடைமுடி; கண் துணை நெற்றியான்; கழுமல வள நகர் பெண் துணை ஆக ஓர் பெருந்தகை இருந்ததே!
“அயர்வு உளோம்!” என்று நீ அசைவு ஒழி, நெஞ்சமே! நியர் வளை முன்கையாள் நேரிழை அவளொடும், கயல் வயல் குதிகொளும் கழுமல வள நகர் பெயர் பல துதிசெய, பெருந்தகை இருந்ததே!
“அடைவு இலோம்” என்று நீ அயர்வு ஒழி, நெஞ்சமே! விடை அமர் கொடியினான், விண்ணவர் தொழுது எழும், கடை உயர் மாடம் ஆர் கழுமல வள நகர் பெடை நடை அவளொடும் பெருந்தகை இருந்ததே!
மற்று ஒரு பற்று இலை, நெஞ்சமே! மறைப கற்ற நல் வேதியர் கழுமல வள நகர், சிற்றிடைப் பேர் அல்குல் திருந்திழை அவளொடும் பெற்று எனை ஆள் உடைப் பெருந்தகை இருந்ததே!
குறை வளைவது மொழி குறைவு ஒழி, நெஞ்சமே! நிறை வளை முன்கையாள் நேரிழை அவளொடும், கறை வளர் பொழில் அணி கழுமல வள நகர் பிறை வளர் சடைமுடிப் பெருந்தகை இருந்ததே!
அரக்கனார் அரு வரை எடுத்தவன்-அலறிட, நெருக்கினார், விரலினால்; நீடு யாழ் பாடவே, கருக்கு வாள் அருள் செய்தான்; கழுமல வள நகர் பெருக்கும் நீரவளொடும் பெருந்தகை இருந்ததே!
நெடியவன், பிரமனும், நினைப்பு அரிது ஆய், அவர் அடியொடு முடி அறியா அழல் உருவினன்; கடி கமழ் பொழில் அணி கழுமல வள நகர் பிடி நடை அவளொடும் பெருந்தகை இருந்ததே!
தார் உறு தட்டு உடைச் சமணர் சாக்கியர்கள் தம் ஆர் உறு சொல் களைந்து, அடி இணை அடைந்து உய்ம்மின்! கார் உறு பொழில் வளர் கழுமல வள நகர் பேர் அறத்தாளொடும் பெருந்தகை இருந்ததே!
கருந் தடந் தேன் மல்கு கழுமல வள நகர்ப் பெருந்தடங் கொங்கையொடு இருந்த எம்பிரான் தனை அருந்தமிழ் ஞானசம்பந்தன செந்தமிழ் விரும்புவார் அவர்கள், போய், விண்ணுலகு ஆள்வரே.
கரம் முனம் மலரால், புனல் மலர் தூவியே கலந்து ஏத்துமின்- பரமன் ஊர் பலபேரினால் பொலி, பத்தர் சித்தர்கள் தாம் பயில், வரம் முன்ன(வ்) அருள் செய்ய வல்ல எம் ஐயன் நாள்தொறும் மேய சீர்ப் பிரமன் ஊர், பிரமாபுரத்து உறை பிஞ்ஞகன்(ன்) அருள் பேணியே!
விண்ணில் ஆர் மதி சூடினான், விரும்பும் மறையவன் தன் தலை உண்ண நன் பலி பேணினான், உலகத்துள் ஊன் உயிரான், மலைப்- பெண்ணின் ஆர் திருமேனியான்-பிரமாபுரத்து உறை கோயிலுள் அண்ணல் ஆர் அருளாளனாய் அமர்கின்ற எம் உடை ஆதியே.
எல்லை இல் புகழாளனும்(ம்), இமையோர் கணத்து உடன் கூடியும், பல்லை ஆர் தலையில் பலி அது கொண்டு உகந்த படிறனும் தொல்லை வையகத்து ஏறு தொண்டர்கள் தூ மலர் சொரிந்து ஏத்தவே, மல்லை அம் பொழில் தேன் பில்கும் பிரமாபுரத்து உறை மைந்தனே.
அடையலார் புரம் சீறி அந்தணர் ஏத்த, மா மடமாதொடும், பெடை எலாம் கடல் கானல் புல்கும் பிரமாபுரத்து உறை கோயிலான்; தொடையல் ஆர் நறுங்கொன்றையான் தொழிலே பரவி நின்று ஏத்தினால், இடை இலார், சிவலோகம் எய்துதற்கு; ஈது காரணம் காண்மினே!
வாய் இடை(ம்) மறை ஓதி, மங்கையர் வந்து இடப் பலி கொண்டு, போய்ப்- போய் இடம்(ம்) எரிகான் இடைப் புரி நாடகம்(ம்) இனிது ஆடினான்; பேயொடும் குடிவாழ்வினான்-பிரமாபுரத்து உறை பிஞ்ஞகன்; “தாய், இடைப் பொருள், தந்தை, ஆகும்” என்று ஓதுவார்க்கு அருள்-தன்மையே!
ஊடினால் இனி யாவது? என் உயர் நெஞ்சமே!-உறு வல்வினைக்கு ஓடி நீ உழல்கின்றது என்? “அழல் அன்று தன் கையில் ஏந்தினான், பீடு நேர்ந்தது கொள்கையான்-பிரமாபுரத்து உறை வேதியன், ஏடு நேர் மதியோடு அரா அணி எந்தை” என்று நின்று ஏத்திடே!
செய்யன், வெள்ளியன், ஒள்ளியார்சிலர் என்றும் ஏத்தி நினைந்திட, ஐயன், ஆண்டகை, அந்தணன், அருமா மறைப்பொருள் ஆயினான்; பெய்யும் மா மழை ஆனவன்; பிரமாபுரம் இடம் பேணிய வெய்ய வெண்மழு ஏந்தியை(ந்) நினைந்து, ஏத்துமின், வினை வீடவே!
கன்று ஒரு(க்) கையில் ஏந்தி நல்விளவின் கனி பட நூறியும், சென்று ஒருக்கிய மாமறைப்பொருள் தேர்ந்த செம்மலரோனும் ஆய், அன்று அரக்கனைச் செற்றவன்(ன்) அடியும் முடி அவை காண்கிலார் பின் தருக்கிய தண்பொழில் பிரமாபுரத்து அரன் பெற்றியே!
உண்டு உடுக்கை விட்டார்களும்(ம்), உயர் கஞ்சி மண்டை கொள் தேரரும், பண்டு அடக்கு சொல் பேசும் அப் பரிவு ஒன்று இலார்கள் சொல் கொள்ளன்மின்! தண்டொடு, அக்கு, வன் சூலமும், தழல், மா மழுப்படை, தன் கையில் கொண்டு ஒடுக்கிய மைந்தன்-எம் பிரமாபுரத்து உறை கூத்தனே.
பித்தனை, பிரமாபுரத்து உறை பிஞ்ஞகன், கழல் பேணியே, மெய்த்தவத்து நின்றோர்களுக்கு உரைசெய்து, நன்பொருள் மேவிட வைத்த சிந்தையுள் ஞானசம்பந்தன் வாய் நவின்று எழு மாலைகள், பொய்த் தவம் பொறி நீங்க, இன் இசை போற்றி செய்யும், மெய்ம் மாந்தரே!
சந்தம் ஆர் முலையாள் தன கூறனார் வெந்த வெண்பொடி ஆடிய மெய்யனார் ந்தம் ஆர் பொழில் சூழ்தரு காழியு எந்தையார், அடி என் மனத்து உள்ளவே.
மான் இடம்(ம்) உடையார், வளர் செஞ்சடைத் தேன் இடம் கொளும் கொன்றை அம் தாரினார் கான் இடம் கொளும் தண்வயல் காழியார் ஊன் இடம் கொண்டு என் உச்சியில் நிற்பரே.
மை கொள் கண்டத்தர், வான்மதிச் சென்னியர் பை கொள் வாள் அரவு ஆட்டும் படிறனார் கை கொள் மான்மறியார், கடல் காழியு ஐயன், அந்தணர் போற்ற இருக்குமே.
புற்றின் நாகமும் பூளையும் வன்னியும் கற்றை வார்சடை வைத்தவர், காழியுள பொற்றொடியோடு இருந்தவர், பொன்கழல், உற்றபோது, உடன் ஏத்தி உணருமே!
நலியும் குற்றமும், நம் உடல் நோய்வினை, மெலியும் ஆறு அது வேண்டுதிரேல், வெய்ய கலி கடிந்த கையார், கடல் காழியு அலை கொள் செஞ்சடையார், அடி போற்றுமே!
பெண் ஒர் கூறினர்; பேய் உடன் ஆடுவர் பண்ணும் ஏத்து இசை பாடிய வேடத்தர்; கண்ணும் மூன்று உடையார் கடல் காழியு அண்ணல் ஆய அடிகள் சரிதையே!
பற்றும் மானும் மழுவும் அழகு உற, முற்றும் ஊர் திரிந்து, பலி முன்னுவர் கற்ற மா நல் மறையவர் காழியு பெற்றம் ஏறு அது உகந்தார் பெருமையே!
எடுத்த வல் அரக்கன் முடிதோள் இற அடர்த்து, உகந்து அருள் செய்தவர் காழியுள கொடித் தயங்கு நன் கோயிலுள், இன்புஉற, இடத்து மாதொடு தாமும் இருப்பரே.
காலன் தன் உயிர் வீட்டு, கழல் அடி, மாலும் நான் முகன்தானும், வனப்பு உற ஓலம் இட்டு, முன் தேடி, உணர்கிலாச் சீலம் கொண்டவன் ஊர் திகழ் காழியே.
உருவம் நீத்தவர் தாமும், உறு துவர் தரு வல் ஆடையினாரும், தகவு இலர்; கருமம் வேண்டுதிரேல், கடல் காழியு ஒருவன் சேவடியே அடைந்து, உய்ம்மினே!
கானல் வந்து உலவும் கடல் காழியு ஈனம் இ(ல்)லி இணை அடி ஏத்திடும் ஞானசம்பந்தன் சொல்லிய நல்-தமிழ், மானம் ஆக்கும், மகிழ்ந்து உரைசெய்யவே.
இறையவன், ஈசன், எந்தை, இமையோர் தொழுது ஏத்த நின்ற கறை அணி கண்டன், வெண்தோடு அணி காதினன், காலத்து அன்று மறை மொழி வாய்மையினான், மலையாளொடு மன்னு சென்னிப் பிறை அணி செஞ்சடையான், பிரமாபுரம் பேணுமினே!
சடையினன், சாமவேதன், சரி கோவணவன், மழுவாள படையினன், பாய் புலித்தோல் உடையான், மறை பல்கலை நூல் உடையவன், ஊனம் இ(ல்)லி, உடன் ஆய் உமை நங்கை என்னும் பெடையொடும் பேணும் இடம் பிரமாபுரம்; பேணுமினே!
மாணியை நாடு காலன் உயிர் மாய்தரச் செற்று, காள காணிய ஆடல் கொண்டான், கலந்து ஊர்வழிச் சென்று, பிச்சை ஊண் இயல்பு ஆகக் கொண்டு, அங்கு உடனே உமை நங்கையொடும் பேணிய கோயில் மன்னும் பிரமாபுரம்; பேணுமினே!
பார் இடம் விண்ணும் எங்கும் பயில் நஞ்சு பரந்து மிண்ட, பேர் இடர்த் தேவர்கணம், “பெருமான், இது கா!” எனலும், ஓர் இடத்தே கரந்து, அங்கு உமை நங்கையொடும்(ம்) உடனே பேர் இடம் ஆகக் கொண்ட பிரமாபுரம் பேணுமினே!
நச்சு அரவச் சடைமேல் நளிர் திங்களும் ஒன்ற வைத்து, அங்கு அச்சம் எழ விடைமேல் அழகு ஆர் மழு ஏந்தி, நல்ல இச்சை பகர்ந்து, “மிக இடுமின், பலி!” என்று, நாளும் பிச்சை கொள் அண்ணல் நண்ணும் பிரமாபுரம் பேணுமினே!
பெற்றவன்; முப்புரங்கள் பிழையா வண்ணம் வாளியினால் செற்றவன்; செஞ்சடையில்-திகழ் கங்கைதனைத் தரித்திட்டு, ஒற்றை விடையினன் ஆய், உமை நங்கையொடும் உடனே பெற்றிமையால் இருந்தான்; பிரமாபுரம் பேணுமினே!
வேதம் மலிந்த ஒலி, விழவின்(ன்) ஒலி, வீணை ஒலி, கீதம் மலிந்து உடனே கிளர, திகழ் பௌவம் அறை ஓதம் மலிந்து உயர் வான் முகடு ஏற, ஒண் மால்வரையான் பேதையொடும் இருந்தான் பிரமாபுரம் பேணுமினே!
இமையவர் அஞ்சி ஓட, எதிர்வார் அவர்தம்மை இன்றி அமைதரு வல் அரக்கன் அடர்த்து(ம்), மலை அன்று எடுப்ப, குமை அது செய்து, பாட, கொற்றவாளொடு நாள் கொடுத்திட்டு உமையொடு இருந்த பிரான் பிரமாபுரம் உன்னுமினே!
ஞாலம் அளித்தவனும்(ம்) அரியும்(ம்), அடியோடு முடி காலம்பல செலவும், கண்டிலாமையினால் கதறி ஓலம் இட, அருளி, உமை நங்கையொடும்(ம்) உடன் ஆய் ஏல இருந்த பிரான் பிரமாபுரம் ஏத்துமினே!
துவர் உறும் ஆடையினார், தொக்க பீலியர் நக்க(அ)ரையர் அவர் அவர் தன்மைகள் கண்டு அணுகேன்மி(ன்), அருள் பெறுவீர் கவர் உறு சிந்தை ஒன்றி, கழி காலம் எல்லாம் படைத்த இவர் அவர் என்று இறைஞ்சி, பிரமாபுரம் ஏத்துமினே!
உரை தரு நால்மறையோர் புகழ்ந்து ஏத்த, ஒண் மாதினொடும் வரை என வீற்றிருந்தான், மலிகின்ற பிரமபுரத்து அரசினை ஏத்த வல்ல அணி சம்பந்தன் பத்தும் வல்லார் விரைதரு விண்ணுலகம் எதிர் கொள்ள விரும்புவரே.
சுரர் உலகு, நரர்கள் பயில் தரணிதலம், முரண் அழிய, அரண மதில் முப்- புரம் எரிய, விரவு வகை சர விசை கொள் கரம் உடைய பரமன் இடம் ஆம் வரம் அருள வரல் முறையின் நிரல் நிறை கொள்வரு சுருதிசிர உரையினால், பிரமன் உயர் அரன் எழில் கொள் சரண இணை பரவ, வளர் பிரமபுரமே.
தாணு மிகு ஆண் இசைகொடு, ஆணு வியர் பேணுமது காணும் அளவில், கோணும் நுதல் நீள் நயனி கோண் இல் பிடி மாணி, மது நாணும் வகையே ஏணு கரி பூண் அழிய, ஆண் இயல் கொள் மாணி பதி-சேண் அமரர்கோன் வேணுவினை ஏணி, நகர் காணில், திவி காண, நடு வேணுபுரமே.
பகல் ஒளிசெய் நக மணியை, முகை மலரை, நிகழ் சரண அகவு முனிவர்க்கு அகலம் மலி சகல கலை மிக உரைசெய் முகம் உடைய பகவன் இடம் ஆம் பகை களையும் வகையில் அறுமுக இறையை மிக அருள, நிகர் இல் இமையோர் புக, உலகு புகழ, எழில் திகழ, நிகழ் அலர் பெருகு புகலிநகரே.
அம் கண் மதி, கங்கை நதி, வெங்கண் அரவங்கள், எழில் தங்கும் இதழித் துங்க மலர், தங்கு சடை அங்கி நிகர் எங்கள் இறை தங்கும் இடம் ஆம் வெங்கதிர் விளங்கு உலகம் எங்கும் எதிர் பொங்கு எரி புலன்கள் களைவோர் வெங் குரு விளங்கி உமைபங்கர் சரணங்கள் பணி வெங்குரு அதே.
ஆண் இயல்பு காண, வனவாண இயல் பேணி, எதிர் பாணமழை சேர் ணி அற, நாணி அற, வேணு சிலை பேணி அற, நாணி விசயன் பாணி அமர் பூண, அருள் மாணு பிரமாணி இடம் ஏணி முறையில் பாணி உலகு ஆள, மிக ஆணின் மலி தோணி நிகர் தோணிபுரமே.
“நிராமய! பராபர! புராதன! பராவு சிவ! ராக! அருள்!” என்று, இராவும் எதிராயது பராய் நினை புராணன், அமராதி பதி ஆம் அராமிசை இராத எழில் தரு ஆய அர பராயண வராக உரு வா- தராயனை விராய் எரி பராய், மிகு தராய் மொழி விராய பதியே.
அரணை உறு முரணர் பலர் மரணம் வர, இரணம் மதில் அரம் மலி படைக் கரம் விசிறு விரகன், அமர் கரணன், உயர் பரன், நெறி கொள் கரனது இடம் ஆம் பரவு அமுது விரவ, விடல் புரளம் உறும் அரவை அரி சிரம் அரிய, அச் சிரம் அரன சரணம் அவை பரவ, இரு கிரகம் அமர் சிரபுரம் அதே.
அறம் அழிவு பெற உலகு தெறு புயவன் விறல் அழிய, நிறுவி விரல், மா- மறையின் ஒலி முறை முரல்செய் பிறை எயிறன் உற, அருளும் இறைவன் இடம் ஆம் குறைவு இல் மிக நிறைதை உழி, மறை அமரர் நிறை அருள, முறையொடு வரும் புறவன் எதிர் நிறை நிலவு பொறையன் உடல் பெற, அருளு புறவம் அதுவே.
விண் பயில, மண் பகிரி, வண் பிரமன் எண் பெரிய பண் படை கொள் மால், கண் பரியும் ஒண்பு ஒழிய, நுண்பொருள்கள் தண் புகழ் கொள் கண்டன் இடம் ஆம் மண் பரியும் ஒண்பு ஒழிய, நுண்பு சகர் புண் பயில விண் படர, அச் சண்பை மொழி பண்ப முனி கண் பழி செய் பண்பு களை சண்பை நகரே.
பாழி உறை வேழம் நிகர் பாழ் அமணர், சூழும் உடலாளர், உணரா ஏழின் இசை யாழின் மொழி ஏழை அவள் வாழும் இறை தாழும் இடம் ஆம் கீழ், இசை கொள் மேல் உலகில், வாழ் அரசு சூழ் அரசு வாழ, அரனுக்கு ஆழிய சில்காழி செய, ஏழ் உலகில் ஊழி வளர் காழி நகரே.
நச்சு அரவு கச்சு என அசைச்சு, மதி உச்சியின் மிலைச்சு, ஒரு கையால் மெய்ச் சிரம் அணைச்சு, உலகில் நிச்சம் இடு பிச்சை அமர் பிச்சன் இடம் ஆம் மச்சம் மதம் நச்சி மதமச் சிறுமியைச் செய் தவ அச்ச விரதக் கொச்சை முரவு அச்சர் பணிய, சுரர்கள் நச்சி மிடை கொச்சைநகரே.
ஒழுகல் அரிது அழி கலியில், உழி உலகு பழி பெருகு வழியை நினையா, முழுது உடலில் எழும் மயிர்கள் தழுவும் முனிகுழுவினொடு, கெழுவு சிவனைத் தொழுது, உலகில் இழுகும் மலம் அழியும் வகை கழுவும் உரை கழுமல நகர் பழுது இல் இறை எழுதும் மொழி தமிழ் விரகன் வழி மொழிகள் மொழி தகையவே.
“எம் தமது சிந்தை பிரியாத பெருமான்!” என இறைஞ்சி, இமையோா வந்து துதிசெய்ய, வளர் தூபமொடு தீபம் மலி வாய்மை அதனால், அந்தி அமர் சந்தி பல அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அழகன், சந்தம் மலி குந்தளம் நல் மாதினொடு, மேவு பதி சண்பைநகரே.
அங்கம் விரி துத்தி அரவு, ஆமை, விரவு ஆரம் அமர் மார்பில் அழகன், பங்கய முகத்து அரிவையோடு பிரியாது, பயில்கின்ற பதிதான்- பொங்கு பரவைத் திரை கொணர்ந்து பவளத்திரள் பொலிந்த அயலே, சங்கு புரி இப்பி தரளத்திரள் பிறங்கு ஒளி கொள் சண்பைநகரே.
போழும் மதி, தாழும் நதி, பொங்கு அரவு, தங்கு புரி புன்சடையினன், யாழ் இன்மொழி, மாழைவிழி, ஏழை இளமாதினொடு இருந்த பதிதான்- வாழை, வளர் ஞாழல், மகிழ், மன்னு புனை, துன்னு பொழில் மாடு, மடல் ஆர் தாழை முகிழ் வேழம் மிகு தந்தம் என, உந்து தகு சண்பைநகரே.
கொட்ட முழவு, இட்ட அடி வட்டணைகள் கட்ட, நடம் ஆடி, குலவும் பட்டம் நுதல், கட்டு மலர் மட்டு மலி, பாவையொடு மேவு பதிதான்- வட்டமதி தட்டு பொழிலுள், தமது வாய்மை வழுவாத மொழியார் சட்ட கலை எட்டு மருவு எட்டும் வளர் தத்தை பயில் சண்பைநகரே.
பண் அங்கு எழுவு பாடலினொடு ஆடல் பிரியாத பரமேட்டி, பகவன், அணங்கு எழுவு பாகம் உடை ஆகம் உடை அன்பர் பெருமானது இடம் ஆம் இணங்கு எழுவி ஆடு கொடி மாடம் மதில், நீடு விரை ஆர் புறவு எலாம், தணம் கெழுவி ஏடு அலர் கொள் தாமரையில் அன்னம் வளர் சண்பைநகரே.
பாலன் உயிர்மேல் அணவு காலன் உயிர் பாற உதைசெய்த பரமன், ஆலும் மயில் போல் இயலி ஆயிழைதனோடும், அமர்வு எய்தும் இடம் ஆம் ஏலம் மலி சோலை இனவண்டு மலர் கெண்டி, நறவு உண்டு இசைசெய, சாலி வயல் கோலம் மலி சேல் உகள, நீலம் வளர் சண்பைநகரே.
விண் பொய் அதனால் மழை விழாதொழியினும், விளைவுதான் மிக உடை மண் பொய் அதனால் வளம் இலாதொழியினும், தமது வண்மை வழுவார் உண்ப கரவார், உலகின் ஊழி பலதோறும் நிலை ஆன பதிதான்- சண்பைநகர்; ஈசன் அடி தாழும் அடியார் தமது தன்மை அதுவே.
வரைக்குல மகட்கு ஒரு மறுக்கம் வருவித்த, மதி இல், வலி உடை அரக்கனது உரக் கரசிரத்து உற அடர்த்து, அருள்புரிந்த அழகன் இருக்கை அது அருக்கன் முதலான இமையோர் குழுமி ஏழ் விழவினில், தருக்குலம் நெருக்கும் மலி தண்பொழில்கள் கொண்டல் அன சண்பைநகரே.
நீல வரை போல நிகழ் கேழல் உரு, நீள் பறவை நேர் உருவம், ஆம் மாலும் மலரானும், அறியாமை வளர் தீ உருவம் ஆன வரதன், சேலும் இன வேலும் அன கண்ணியொடு நண்ணு பதி சூழ் புறவு எலாம் சாலி மலி, சோலை குயில் புள்ளினொடு கிள்ளை பயில், சண்பைநகரே.
போதியர்கள், பிண்டியர்கள், போது வழுவாத வகை உண்டு, பலபொய் ஓதி, அவர் கொண்டு செய்வது ஒன்றும் இலை; நன்று அது உணர்வீர்! உரைமினோ ஆதி, எமை ஆள் உடைய அரிவையொடு பிரிவு இலி, அமர்ந்த பதிதான், சாதிமணி தெண்திரை கொணர்ந்து வயல் புக எறிகொள் சண்பைநகரே!
வாரின் மலி கொங்கை உமை நங்கையொடு சங்கரன் மகிழ்ந்து அமரும் ஊர் சாரின் முரல் தெண்கடல் விசும்பு உற முழங்கு ஒலி கொள் சண்பைநகர்மேல், பாரின் மலிகின்ற புகழ் நின்ற தமிழ் ஞானசம்பந்தன், உரைசெய் சீரின் மலி செந்தமிழ்கள் செப்புமவர், சேர்வர், சிவலோக நெறியே.
சங்கு அமரும் முன்கை மட மாதை ஒருபால் உடன் விரும்பி, அங்கம் உடல்மேல் உற அணிந்து, பிணி தீர அருள் செய்யும் எங்கள் பெருமான் இடம் எனத் தகும் முனைக் கடலின் முத்தம், துங்க மணி, இப்பிகள், கரைக்கு வரு தோணிபுரம் ஆமே.
சல்லரி(யி), யாழ், முழவம், மொந்தை, குழல், தாளம் அது, இயம்ப, கல் அரிய மாமலையர் பாவை ஒருபாகம் நிலைசெய்து, அல் எரி கை ஏந்தி, நடம் ஆடு சடை அண்ணல் இடம் என்பர் சொல்ல(அ)ரிய தொண்டர் துதிசெய்ய, வளர் தோணிபுரம் ஆமே.
வண்டு அரவு கொன்றை வளர் புன்சடையின் மேல் மதியம் வைத்து பண்டு அரவு தன் அரையில் ஆர்த்த பரமேட்டி; பழி தீரக் கண்டு அரவ ஒண் கடலின் நஞ்சம் அமுது உண்ட கடவுள்; ஊர் தொண்டர் அவர் மிண்டி, வழிபாடு மல்கு தோணிபுரம் ஆமே.
கொல்லை விடை ஏறு உடைய கோவணவன், நா அணவும் மாலை ஒல்லை உடையான், அடையலார் அரணம் ஒள் அழல் விளைத்த வில்லை உடையான், மிக விரும்பு பதி மேவி வளர் தொண்டர் சொல்லை அடைவு ஆக இடர் தீர்த்து, அருள் செய் தோணிபுரம் ஆமே.
தேயும் மதியம் சடை இலங்கிட, விலங்கல் மலி கானில் காயும் அடு திண் கரியின் ஈர் உரிவை போர்த்தவன்; நினைப்பார் தாய் என நிறைந்தது ஒரு தன்மையினர்; நன்மையொடு வாழ்வு தூய மறையாளர் முறை ஓதி நிறை தோணிபுரம் ஆமே.
பற்றலர் தம் முப்புரம் எரித்து, அடி பணிந்தவர்கள் மேலைக் குற்றம் அது ஒழித்து, அருளு கொள்கையினன்; வெள்ளில் முதுகானில் பற்றவன்; இசைக்கிளவி பாரிடம் அது ஏத்த நடம் ஆடும் துற்ற சடை அத்தன்; உறைகின்ற பதி தோணிபுரம் ஆமே.
பண் அமரும் நால்மறையர், நூல் முறை பயின்ற திருமார்பில் பெண் அமரும் மேனியினர், தம் பெருமை பேசும் அடியார் மெய்த் திண் அமரும் வல்வினைகள் தீர அருள் செய்தல் உடையான், ஊர் துண்ணென விரும்பு சரியைத்தொழிலர் தோணிபுரம் ஆ.மே.
தென்திசை இலங்கை அரையன் திசைகள் வீரம் விளைவித்து வென்றி செய் புயங்களை அடர்த்து அருளும் வித்தகன் இடம் சீர் ஒன்று இசை இயல் கிளவி பாட, மயில் ஆட, வளர் சோலை துன்று செய வண்டு, மலி தும்பி முரல் தோணிபுரம் ஆமே.
நாற்றம் மிகு மா மலரின்மேல் அயனும், நாரணனும், நாடி ஆற்றல் அதனால் மிக அளப்பு அரிய வண்ணம், எரி ஆகி, ஊற்றம் மிகு கீழ் உலகும் மேல் உலகும் ஓங்கி எழு தன்மைத் தோற்றம் மிக, நாளும் அரியான் உறைவு தோணிபுரம் ஆமே.
மூடு துவர் ஆடையினர், வேடம் நிலை காட்டும் அமண் ஆதர் கேடுபல சொல்லிடுவர்; அம் மொழி கெடுத்து, அடைவினான், அக் காடு பதி ஆக நடம் ஆடி, மடமாதொடு இரு காதில்- தோடு குழை பெய்தவர் தமக்கு உறைவு தோணிபுரம் ஆமே.
துஞ்சு இருளில் நின்று நடம் ஆடி மிகு தோணிபுரம் மேய மஞ்சனை வணங்கு திரு ஞானசம்பந்தன சொல்மாலை, தஞ்சம் என நின்று இசை மொழிந்த அடியார்கள், தடுமாற்றம் வஞ்சம் இலர்; நெஞ்சு இருளும் நீங்கி, அருள் பெற்று வளர்வாரே.
பெண் இயல் உருவினர், பெருகிய புனல் விரவிய பிறைக் கண்ணியர், கடு நடை விடையினர், கழல் தொழும் அடியவர் நண்ணிய பிணி கெட அருள்புரிபவர், நணுகு உயர் பதி புண்ணிய மறையவர் நிறை புகழ் ஒலி மலி புறவமே.
கொக்கு உடை இறகொடு பிறையொடு குளிர்சடை முடியினர் அக்கு உடை வடமும் ஒர் அரவமும் அலர் அரைமிசையினில் திக்கு உடை மருவிய உருவினர், திகழ் மலைமகளொடும் புக்கு உடன் உறைவது புதுமலர் விரை கமழ் புறவமே.
கொங்கு இயல் சுரிகுழல், வரிவளை, இளமுலை, உமை ஒரு- பங்கு இயல் திரு உரு உடையவர்; பரசுவொடு இரலை மெய் தங்கிய கரதலம் உடையவர்; விடையவர்; உறைபதி பொங்கிய பொருகடல் கொள, அதன்மிசை உயர் புறவமே.
மாதவம் உடை மறையவன் உயிர் கொள வரு மறலியை, மேதகு திருவடி இறை உற, உயிர் அது விலகினார் சாதக உரு இயல் சுரன் இடை, உமை வெரு உற, வரு போதக உரி-அதள் மருவினர்; உறை பதி-புறவமே.
காமனை அழல் கொள விழிசெய்து, கருதலர் கடிமதில் தூமம் அது உற விறல் சுடர் கொளுவிய இறை தொகு பதி ஓமமொடு உயர்மறை, பிற இயவகைதனொடு, ஒளி, கெழு பூமகள், அலரொடு, புனல்கொடு, வழிபடு புறவமே.
சொல்-நயம் உடையவர், சுருதிகள் கருதிய தொழிலினர் பின்னையர், நடு உணர் பெருமையர், திருவடி பேணிட, முன்னைய முதல்வினை அற அருளினர் உறை முது பதி புன்னையின் முகை நெதி பொதி அவிழ் பொழில் அணி புறவமே.
வரி தரு புலி அதள் உடையினர், மழு எறி படையினர் பிரிதரு நகுதலைவடம் முடிமிசை அணி பெருமையர், எரிதரும் உருவினர், இமையவர் தொழுவது ஒர் இயல்பினர் புரிதரு குழல் உமையொடும் இனிது உறை பதி புறவமே. 7
வசி தரும் உருவொடு மலர்தலை உலகினை வலிசெயும் நிசிசரன் உடலொடு நெடு முடி ஒருபதும் நெரிவு உற ஒசிதர ஒருவிரல் நிறுவினர், ஒளி வளர் வெளிபொடி பொசிதரு திரு உரு உடையவர், உறை பதி புறவமே.
தேன் அகம் மருவிய செறிதரு முளரி செய்தவிசினில் ஊன் அகம் மருவிய புலன் நுகர்வு உணர்வு உடை ஒருவனும், வானகம் வரை அகம் மறிகடல் நிலன் எனும் எழுவகைப் போனகம் மருவினன், அறிவு அரியவர் பதி புறவமே.
கோசரம் நுகர்பவர், கொழுகிய துவர் அன துகிலினர் பாசுர வினை தரு பளகர்கள், பழி தரு மொழியினர் நீசரை விடும், இனி! நினைவு உறும் நிமலர்தம் உறைபதி, பூசுரர் மறை பயில் நிறை புகழ் ஒலி மலி, புறவமே!
போது இயல் பொழில் அணி புறவ நன் நகர் உறை புனிதனை, வேதியர் அதிபதி மிகு தலை தமிழ் கெழு விரகினன்- ஓதிய ஒருபதும் உரியது ஒர் இசை கொள உரைசெயும் நீதியர் அவர், இரு நிலன் இடை நிகழ்தரு பிறவியே.
திருந்து மா களிற்று இள மருப்பொடு திரள் மணிச் சந்தம் உந்தி, குருந்து மா குரவமும் குடசமும் பீலியும் சுமந்து கொண்டு, நிரந்து மா வயல் புகு நீடு கோட்டாறு சூழ் கொச்சை மேவிப் பொருந்தினார் திருந்து அடி போற்றி வாழ், நெஞ்சமே! புகல் அது ஆமே.
ஏலம் ஆர் இலவமோடு இனமலர்த் தொகுதி ஆய் எங்கும் நுந்தி, கோல மா மிளகொடு கொழுங் கனி கொன்றையும் கொண்டு, கோட்டாறு ஆலியா, வயல் புகும் அணிதரு கொச்சையே நச்சி மேவும் நீலம் ஆர் கண்டனை நினை, மட நெஞ்சமே! அஞ்சல், நீயே!
பொன்னும் மா மணி கொழித்து, எறி புனல், கரைகள் வாய் நுரைகள் உந்தி, கன்னிமார் முலை நலம் கவர வந்து ஏறு கோட்டாறு சூழ மன்னினார் மாதொடும் மருவு இடம் கொச்சையே மருவின், நாளும் முன்னை நோய் தொடரும் ஆறு இல்லை காண், நெஞ்சமே! அஞ்சல், நீயே!
கந்தம் ஆர் கேதகைச் சந்தனக்காடு சூழ் கதலி மாடே வந்து, மா வள்ளையின் பவர் அளிக் குவளையைச் சாடி ஓட, கொந்து வார் குழலினார் குதி கொள் கோட்டாறு சூழ் கொச்சை மேய எந்தையார் அடி நினைந்து, உய்யல் ஆம், நெஞ்சமே! அஞ்சல், நீயே!
மறை கொளும் திறலினார் ஆகுதிப் புகைகள் வான் அண்ட மிண்டி சிறை கொளும் புனல் அணி செழு மதி திகழ் மதில் கொச்சை தன்பால், உறைவு இடம் என மனம் அது கொளும், பிரமனார் சிரம் அறுத்த, இறைவனது அடி இணை இறைஞ்சி வாழ், நெஞ்சமே! அஞ்சல், நீயே!
சுற்றமும் மக்களும் தொக்க அத் தக்கனைச் சாடி, அன்றே, உற்ற மால்வரை உமை நங்கையைப் பங்கமா உள்கினான், ஓர் குற்றம் இல் அடியவர் குழுமிய வீதி சூழ் கொச்சை மேவி நல்-தவம் அருள் புரி நம்பனை நம்பிடாய், நாளும், நெஞ்சே!
கொண்டலார் வந்திட, கோல வார் பொழில்களில் கூடி, மந்தி கண்ட வார்கழை பிடித்து ஏறி, மா முகில்தனைக் கதுவு கொச்சை, அண்ட வானவர்களும் அமரரும் முனிவரும் பணிய, ஆலம் உண்ட மா கண்டனார் தம்மையே உள்கு, நீ! அஞ்சல், நெஞ்சே!
அடல் எயிற்று அரக்கனார் நெருக்கி, மாமலை எடுத்து, ஆர்த்த வாய்கள் உடல் கெட, திருவிரல் ஊன்றினார் உறைவு இடம் ஒளி கொள் வெள்ள மடல் இடைப் பவளமும் முத்தமும் தொத்து வண் புன்னை மாடே, பெடையொடும் குருகு இனம் பெருகு தண் கொச்சையே பேணு, நெஞ்சே!
அரவினில்-துயில் தரும் அரியும், நல் பிரமனும், அன்று, அயர்ந்து குரைகழல், திருமுடி, அளவு இட அரியவர் கோங்கு செம்பொன் விரி பொழில் இடை மிகு மலைமகள் மகிழ்தர வீற்றிருந்த கரிய நல் மிடறு உடைக் கடவுளார் கொச்சையே கருது, நெஞ்சே!
கடு மலி உடல் உடை அமணரும், கஞ்சி உண் சாக்கியரும், இடும் அற உரைதனை இகழ்பவர் கருதும் நம் ஈசர்; வானோர் நடு உறை நம்பனை; நால்மறையவர் பணிந்து ஏத்த, ஞாலம் உடையவன்; கொச்சையே உள்கி வாழ், நெஞ்சமே! அஞ்சல், நீயே!
காய்ந்து தம் காலினால் காலனைச் செற்றவர், கடி கொள் கொச்சை ஆய்ந்து கொண்டு இடம் என இருந்த நல் அடிகளை, ஆதரித்தே ஏய்ந்த தொல்புகழ் மிகும் எழில்மறை ஞானசம்பந்தன் சொன்ன வாய்ந்த இம் மாலைகள் வல்லவர் நல்லர், வான் உலகின் மேலே.
விண்ணவர் தொழுது எழு வெங்குரு மேவிய சுண்ண வெண்பொடி அணிவீரே; சுண்ண வெண்பொடி அணிவீர்! உம தொழு கழல் எண்ண வல்லார் இடர் இலரே.
வேதியர் தொழுது எழு வெங்குரு மேவிய ஆதிய அருமறையீரே; ஆதிய அருமறையீர்! உமை அலர்கொடு ஓதியர் உணர்வு உடையோரே.
விளங்கு தண்பொழில் அணி வெங்குரு மேவிய இளம்பிறை அணி சடையீரே; இளம்பிறை அணி சடையீர்! உமது இணை அடி உளம் கொள, உறு பிணி இலரே.
விண்டு அலர் பொழில் அணி வெங்குரு மேவிய வண்டு அமர் வளர் சடையீரே; வண்டு அமர் வளர் சடையீர்! உமை வாழ்த்தும் அத் தொண்டர்கள் துயர், பிணி, இலரே.
மிக்கவர் தொழுது எழு வெங்குரு மேவிய அக்கினொடு அரவு அசைத்தீரே; அக்கினொடு அரவு அசைத்தீர்! உமது அடி இணை தக்கவர் உறுவது தவமே.
வெந்த வெண்பொடி அணி வெங்குரு மேவிய அந்தம் இல் பெருமையினீரே; அந்தம் இல் பெருமையினீர்! உமை அலர்கொடு சிந்தை செய்வோர் வினை சிதைவே.
விழ மல்கு பொழில் அணி வெங்குரு மேவிய அழல் மல்கும் அங்கையினீரே; அழல் மல்கும் அங்கையினீர்! உமை அலர்கொடு தொழ, அல்லல் கெடுவது துணிவே
வித்தக மறையவர் வெங்குரு மேவிய மத்த நல் மலர் புனைவீரே; மத்த நல் மலர் புனைவீர்! உமது அடி தொழும் சித்தம் அது உடையவர் திருவே!
மேலவர் தொழுது எழு வெங்குரு மேவிய ஆல நல் மணிமிடற்றீரே; ஆல நல் மணிமிடற்றீர்! உமது அடி தொழும் சீலம் அது உடையவர் திருவே!
விரை மல்கு பொழில் அணி வெங்குரு மேவிய அரை மல்கு புலி அதளீரே; அரை மல்கு புலி அதளீர்! உமது அடி இணை உரை மல்கு புகழவர் உயர்வே!
* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.
கரும்பு அமர் வில்லியைக் காய்ந்து, காதல் காரிகை மாட்டு அருள அரும்பு அமர் கொங்கை ஓர்பால் மகிழ்ந்த அற்புதம் செப்ப(அ)ரிதால்; பெரும் பகலே வந்து, என் பெண்மை கொண்டு, பேர்ந்தவர் சேர்ந்த இடம் சுரும்பு அமர் சோலைகள் சூழ்ந்த செம்மைத் தோணிபுரம் தானே.
கொங்கு இயல் பூங்குழல் கொவ்வைச் செவ்வாய்க் கோமளமாது உமையாள பங்கு இயலும் திருமேனி எங்கும் பால் வெள்ளை நீறு அணிந்து, சங்கு இயல் வெள்வளை சோர வந்து, என் சாயல் கொண்டார் தமது ஊர் துங்கு இயல் மாளிகை சூழ்ந்த செம்மைத் தோணிபுரம் தானே.
மத்தக்களிற்று உரி போர்க்கக் கண்டு, மாது உமை பேது உறலும், சித்தம் தெளிய நின்று ஆடி, ஏறு ஊர் தீவண்ணர், சில்பலிக்கு என்று, ஒத்தபடி வந்து, என் உள்ளம் கொண்ட ஒருவருக்கு இடம்போலும் துத்தம் நல் இன் இசை வண்டு பாடும் தோணிபுரம் தானே.
* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை
“வள்ளல் இருந்த மலை அதனை வலம் செய்தல் வாய்மை” என உள்ளம் கொள்ளாது, கொதித்து எழுந்து, அன்று, எடுத்தோன் உரம் நெரிய, மெள்ள விரல் வைத்து, என் உள்ளம் கொண்டார் மேவும் இடம்போலும் துள் ஒலி வெள்ளத்தின் மேல் மிதந்த தோணிபுரம் தானே.
வெல் பறவைக் கொடி மாலும், மற்றை விரை மலர் மேல் அயனும், பல் பறவைப்படி ஆய் உயர்ந்தும், பன்றி அது ஆய்ப் பணிந்தும், செல்வு அற நீண்டு எம் சிந்தை கொண்ட செல்வர் இடம்போலும் தொல் பறவை சுமந்து ஓங்கு செம்மைத் தோணிபுரம் தானே.
குண்டிகை பீலி தட்டோடு நின்று கோசரம் கொள்ளியரும், மண்டை கை ஏந்தி மனம் கொள் கஞ்சி ஊணரும், வாய் மடிய, இண்டை புனைந்து, எருது ஏறி வந்து, என் எழில் கவர்ந்தார் இடம் ஆம் தொண்டு இசை பாடல் அறாத தொன்மைத் தோணிபுரம் தானே.
தூ மரு மாளிகை மாடம் நீடு தோணிபுரத்து இறையை, மாமறை நான்கினொடு அங்கம் ஆறும் வல்லவன்- வாய்மையினால் நா மரு கேள்வி நலம் திகழும் ஞானசம்பந்தன்-சொன்ன பா மரு பாடல்கள் பத்தும் வல்லார் பார் முழுது ஆள்பவரே.
வரம் அதே கொளா, உரம் அதே செயும் புரம் எரித்தவன்-பிரமநல்புரத்து அரன்-நன்நாமமே பரவுவார்கள் சீர் விரவும், நீள் புவியே.
சேண் உலாம் மதில் வேணு மண் உளோர் காண மன்றில் ஆர் வேணுநல்புரத் தாணுவின் கழல் பேணுகின்றவர் ஆணி ஒத்தவரே.
அகலம் ஆர் தரைப் புகலும் நால்மறைக்கு இகல் இலோர்கள் வாழ் புகலி மா நகர், பகல் செய்வோன் எதிர்ச் சகல சேகரன் அகில நாயகனே.
துங்க மாகரி பங்கமா அடும் செங் கையான் நிகழ் வெங்குருத் திகழ் அங்கணான் அடி தம் கையால்-தொழ, தங்குமோ, வினையே?
“காணி, ஒண் பொருள், கற்றவர்க்கு ஈகை உடைமையோர் அவர் காதல் செய்யும் நல்- தோணிவண் புரத்து ஆணி” என்பவர் தூ மதியினரே.
ஏந்து அரா எதிர் வாய்ந்த நுண் இடைப் பூந் தண் ஓதியாள் சேர்ந்த பங்கினன் பூந்தராய் தொழும் மாந்தர் மேனிமேல் சேர்ந்து இரா, வினையே.
“சுரபுரத்தினைத் துயர் செய் தாருகன் துஞ்ச, வெஞ்சினக் காளியைத் தரும் சிரபுரத்து உளான்” என்ன வல்லவர் சித்தி பெற்றவரே.
“உறவும் ஆகி, அற்றவர்களுக்கு மா நெதி கொடுத்து, நீள் புவி இலங்கு சீர்ப் புறவ மா நகர்க்கு இறைவனே!” என, தெறகிலா, வினையே.
பண்பு சேர் இலங்கைக்கு நாதன் நல் முடிகள் பத்தையும் கெட நெரித்தவன், சண்பை ஆதியைத் தொழுமவர்களைச் சாதியா, வினையே.
ஆழி அங்கையில் கொண்ட மால், அயன், அறிவு ஒணாதது ஓர் வடிவு கொண்டவன்- காழி மா நகர்க் கடவுள் நாமமே கற்றல் நல்-தவமே.
விச்சை ஒன்று இலாச் சமணர் சாக்கியப் பிச்சர் தங்களைக் கரிசு அறுத்தவன் கொச்சை மா நகர்க்கு அன்பு செய்பவர் குணங்கள் கூறுமினே!
கழுமலத்தினுள் கடவுள் பாதமே கருது ஞானசம்பந்தன் இன்தமிழ் முழுதும் வல்லவர்க்கு இன்பமே தரும், முக்கண் எம் இறையே.
உற்று உமை சேர்வது மெய்யினையே; உணர்வதும் நின் அருள் மெய்யினையே; கற்றவர் காய்வது காமனையே; கனல் விழி காய்வது காமனையே; அற்றம் மறைப்பதும் உன் பணியே; அமரர்கள் செய்வதும் உன் பணியே; பெற்று முகந்தது கந்தனையே; பிரமபுரத்தை உகந்தனையே.
சதி மிக வந்த சலந்தரனே தடி சிரம் நேர் கொள் சலம் தரனே! அதிர் ஒளி சேர் திகிரிப்படையால் அமர்ந்தனர் உம்பர், துதிப்பு அடையால், மதி தவழ் வெற்பு அது கைச் சிலையே; மரு விடம் ஏற்பது கைச்சிலையே விதியினில் இட்டு அவிரும் பரனே! வேணுபுரத்தை விரும்பு அரனே!
காது அமரத் திகழ் தோடினனே; கானவனாய்க் கடிது ஓடினனே; பாதம் அதால் கூற்று உதைத்தனனே; பார்த்தன் உடல் அம்பு தைத்தனனே; தாது அவிழ் கொன்றை தரித்தனனே; சார்ந்த வினை அது அரித்தனனே போதம் அமரும் உரைப் பொருளே, புகலி அமர்ந்த பரம்பொரு
மைத் திகழ் நஞ்சு உமிழ் மாசுணமே மகிழ்ந்து அரை சேர்வதும்; மா சு(ண்)ணமே மெய்த்து உடல் பூசுவர்; மேல் மதியே; வேதம் அது ஓதுவர், மேல் மதியே; பொய்த் தலை ஓடு உறும், அத்தம் அதே; புரிசடை வைத்தது, மத்தம் அதே; வித்தகர் ஆகிய எம் குருவே விரும்பி அமர்ந்தனர், வெங்குருவே.
உடன் பயில்கின்றனன், மாதவனே, உறு பொறி காய்ந்து இசை மா தவனே; திடம் பட மாமறை கண்டனனே, திரிகுணம் மேவிய கண்டனனே; படம் கொள் அரவு அரை செய்தனனே; பகடு உரிகொண்டு அரை செய்தனனே; தொடர்ந்த துயர்க்கு ஒரு நஞ்சு இவனே, தோணிபுரத்து உறை நம் சிவனே.
திகழ் கையதும் புகை தங்கு அழலே; தேவர் தொழுவதும் தம் கழலே; இகழ்பவர் தாம் ஒரு மான் இடமே; இருந் தனுவோடு எழில் மானிடமே; மிக வரும் நீர் கொளும் மஞ்சு அடையே, மின் நிகர்கின்றதும், அம் சடையே, தக இரதம் கொள் வசுந்தரரே, தக்க தராய் உறை சுந்தரரே.
ஓர்வு அரு கண்கள் இணைக்க(அ)யலே; உமையவள் கண்கள் இணைக் கயலே; ஏர் மருவும் கழல் நாகம் அதே; எழில் கொள் உதாசனன், ஆகம் அதே; நீர் வரு கொந்து அளகம் கையதே, நெடுஞ்சடை மேவிய கங்கையதே; சேர்வு அரு யோக தியம்பகனே! சிரபுரம் மேய தி அம்பு அகனே!
ஈண்டு துயில் அமர் அப்பினனே இருங் கண் இடந்து அடி அப்பினனே; தீண்டல் அரும் பரிசு அக் கரமே திகழ்ந்து ஒளி சேர்வது சக்கரமே; வேண்டி வருந்த நகைத் தலையே மிகைத்து அவரோடு நகைத்தலையே பூண்டனர்; சேரலும் மா பதியே, புறவம் அமர்ந்த உமாபதியே.
நின் மணி வாயது நீழலையே நேசம் அது ஆனவர் நீழலையே; உன்னி, மனத்து, எழு சங்கம் அதே ஒளி அதனோடு உறு சங்கம் அதே; கன்னியரைக் கவரும் க(ள்)ளனே! கடல்விடம் உண்ட கருங் களனே; மன்னி வரைப் பதி, சண்பு ஐயதே வாரி வயல் மலி சண்பை அதே.
இலங்கை அரக்கர் தமக்கு இறையே இடந்து கயிலை எடுக்க, இறையே, புலன்கள் கெட உடன் பாடினனே; பொறிகள் கெட உடன்பாடினனே; இலங்கிய மேனி இரா வணனே எய்து பெயரும் இராவணனே; கலந்து அருள் பெற்றதும் மா வசியே; காழி அரன் அடி மா வசியே.
கண் நிகழ் புண்டரிகத்தினனே, கலந்து இரி புண் தரி கத்தினனே, மண் நிகழும் பரிசு ஏனம் அதே, வானகம் ஏய் வகை சேனம் அதே, நண்ணி அடிமுடி எய்தலரே; நளிர் மலி சோலையில் எய்து அலரே பண் இயல் கொச்சை பசுபதியே, பசு மிக ஊர்வர், பசுபதியே.
பரு மதில் மதுரை மன் அவை எதிரே பதிகம் அது எழுது இலை அவை எதிரே வரு நதி இடை மிசை வரு கரனே! வசையொடும் அலர் கெட அருகு அரனே! கருதல் இல் இசை முரல்தரும் மருளே, கழுமலம் அமர் இறை தரும் அருகே மருவிய தமிழ்விரகன மொழியே வல்லவர்தம் இடர், திடம், ஒழியே.
யாமாமா நீ யாமாமா யாழீகாமா காணாகா காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா
யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா
தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா
நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ
யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா
மேலே போகா மேதேழீ காலாலேகா லானாயே யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே
நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ
நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே
காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா
வேரியுமேணவ காழியொயே யேனை நிணேமட ளோகரதே தேரகளோடம ணே நினையே யேயொழிகாவண மேயுரிவே
நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே
மடல் மலி கொன்றை, துன்று வாள் எருக்கும், வன்னியும், மத்தமும், சடைமேல் படல் ஒலி திரைகள் மோதிய கங்கைத் தலைவனார்தம் இடம் பகரில், விடல் ஒலி பரந்த வெண்திரை முத்தம் இப்பிகள் கொணர்ந்து, வெள் அருவிக் கடல் ஒலி ஓதம் மோத, வந்து அலைக்கும் கழுமலநகர் எனல் ஆமே.
மின்னிய அரவும், வெறிமலர்பலவும், விரும்பிய திங்களும், தங்கு சென்னி அது உடையான், தேவர்தம் பெருமான், சேயிழையொடும் உறைவு இடம் ஆம் பொன் இயல் மணியும், முரி கரிமருப்பும், சந்தமும், உந்து வன் திரைகள் கன்னியர் ஆட, கடல் ஒலி மலியும் கழுமலநகர் எனல் ஆமே.
சீர் உறு தொண்டர், கொண்டு அடி போற்ற, செழு மலர் புனலொடு தூபம்; தார் உறு கொன்றை தம் முடி வைத்த சைவனார் தங்கு இடம் எங்கும் ஊர் உறு பதிகள் உலகு உடன் பொங்கி ஒலிபுனல் கொள, உடன்மிதந்த, கார் உறு செம்மை நன்மையால் மிக்க கழுமலநகர் எனல் ஆமே.
மண்ணினார் ஏத்த, வான் உளார் பரச, அந்தரத்து அமரர்கள் போற்ற, பண்ணினார் எல்லாம்; பலபல வேடம் உடையவர்; பயில்வு இடம் எங்கும் எண்ணினால் மிக்கார், இயல்பினால் நிறைந்தார், ஏந்திழையவரொடு மைந்தர் கண்ணினால் இன்பம் கண்டு, ஒளி பரக்கும் கழுமலநகர் எனல் ஆமே.
சுருதியான் தலையும், நாமகள் மூக்கும், சுடரவன் கரமும், முன் இயங்கு பருதியான் பல்லும், இறுத்து அவர்க்கு அருளும் பரமனார் பயின்று இனிது இருக்கை விருதின் நால்மறையும், அங்கம் ஓர் ஆறும், வேள்வியும் வேட்டவர், ஞானம் கருதினார், உலகில் கருத்து உடையார், சேர் கழுமலநகர் எனல் ஆமே.
புற்றில் வாள் அரவும் ஆமையும் பூண்ட புனிதனார், பனிமலர்க்கொன்றை பற்றி வான்மதியம் சடை இடை வைத்த படிறனார், பயின்று இனிது இருக்கை செற்று வன் திரைகள் ஒன்றொடு ஒன்று ஓடிச் செயிர்த்து, வண் சங்கொடு வங்கம் கல்-துறை வரை கொள் கரைக்கு வந்து உரைக்கும் கழுமலநகர் எனல் ஆமே.
அலை புனல் கங்கை தங்கிய சடையார், அடல் நெடுமதில் ஒருமூன்றும் கொலை இடைச் செந்தீ வெந்து அறக் கண்ட குழகனார், கோயிலது என்பர் மலையின் மிக்கு உயர்ந்த மரக்கலம் சரக்கு மற்றுமற்று இடை இடை எங்கும் கலை களித்து ஏறிக் கானலில் வாழும் கழுமலநகர் எனல் ஆமே.
ஒருக்க முன் நினையாத் தக்கன்தன் வேள்வி உடைதர உழறிய படையர் அரக்கனை வரையால் ஆற்றல் அன்று அழித்த அழகனார், அமர்ந்து உறை கோயில் பரக்கும் வண்புகழார் பழி அவை பார்த்துப் பலபல அறங்களே பயிற்றி, கரக்கும் ஆறு அறியா வண்மையால் வாழும் கழுமலநகர் எனல் ஆமே.
அரு வரை பொறுத்த ஆற்றலினானும், அணி கிளர் தாமரையானும், இருவரும் ஏத்த, எரிஉரு ஆன இறைவனார் உறைவு இடம் வினவில், ஒருவர் இவ் உலகில் வாழ்கிலா வண்ணம் ஒலிபுனல் வெள்ளம் முன் பரப்ப, கருவரை சூழ்ந்த கடல் இடை மிதக்கும் கழுமலநகர் எனல் ஆமே.
உரிந்து உயர் உருவில் உடை தவிர்ந்தாரும், அத் துகில் போர்த்து உழல்வாரும், தெரிந்து புன் மொழிகள் செப்பின கேளாச் செம்மையார் நன்மையால் உறைவு ஆம் குருந்து, உயர் கோங்கு, கொடிவிடு முல்லை, மல்லிகை, சண்பகம், வேங்கை, கருந்தடங்கண்ணின் மங்கைமார் கொய்யும் கழுமலநகர் எனல் ஆமே.
கானல் அம் கழனி ஓதம் வந்து உலவும் கழுமல நகர் உறைவார்மேல் ஞானசம்பந்தன் நல்-தமிழ்மாலை நன்மையால் உரை செய்து நவில்வார் ஊன சம்பந்தத்து உறு பிணி நீங்கி, உள்ளமும் ஒருவழிக் கொண்டு வான் இடை வாழ்வர்; மண்மிசைப் பிறவார்; மற்று இதற்கு ஆணையும் நமதே.