ஏறு ஏறி ஏழ் உலகும் ஏத்த நின்றார்;
இமையவர்கள் எப்பொழுதும் இறைஞ்ச நின்றார்;
நீறு ஏறு மேனியார்; நீலம் உண்டார்; நெருப்பு
உண்டார்; அங்கை அனலும் உண்டார்;
ஆறு ஏறு சென்னியார்; ஆன் அஞ்சு ஆடி; அனல்
உமிழும் ஐவாய் அரவும் ஆர்த்தார்;
பாறு ஏறு வெண்தலையார், பைங்கண் ஏற்றார்;
பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே.