மூவா நான்மறை முதல்வா, போற்றி!
சே ஆர் வெல் கொடிச் சிவனே, போற்றி
மின் ஆர் உருவ விகிர்தா, போற்றி!
கல் நார் உரித்த கனியே, போற்றி!
காவாய், கனகக் குன்றே, போற்றி!
ஆ! ஆ! என் தனக்கு அருளாய், போற்றி!
படைப்பாய், காப்பாய், துடைப்பாய், போற்றி!
இடரைக் களையும் எந்தாய், போற்றி!
ஈச, போற்றி! இறைவ, போற்றி!
தேசப் பளிங்கின் திரளே, போற்றி!
அரைசே, போற்றி! அமுதே, போற்றி!
விரை சேர் சரண விகிர்தா, போற்றி!
வேதி, போற்றி! விமலா, போற்றி!
ஆதி, போற்றி! அறிவே, போற்றி!
கதியே, போற்றி! கனியே, போற்றி!
நதி சேர் செம் சடை நம்பா, போற்றி!
உடையாய், போற்றி! உணர்வே, போற்றி!
சிவ.அ.தியாகராசன்