கரு முகில் ஆகிய கண்ணே, போற்றி!
மன்னிய திருஅருள் மலையே, போற்றி!
என்னையும் ஒருவன் ஆக்கி, இரும் கழல்
சென்னியில் வைத்த சேவக, போற்றி!
தொழுத கை துன்பம் துடைப்பாய், போற்றி!
வழுவு இலா ஆனந்த வாரி, போற்றி!
அழிவதும், ஆவதும், கடந்தாய், போற்றி!
முழுவதும் இறந்த முதல்வா, போற்றி!
மான் நேர் நோக்கி மணாளா, போற்றி!
வானகத்து அமரர் தாயே, போற்றி!
பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி!
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி!
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி!
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி!
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!
அளிபவர் உள்ளத்து அமுதே, போற்றி!
கனவிலும் தேவர்க்கு அரியாய், போற்றி!
நனவிலும் நாயேற்கு அருளினை, போற்றி!
இடைமருது உறையும் எந்தாய், போற்றி!
சடையிடைக் கங்கை தரித்தாய், போற்றி!
ஆரூர் அமர்ந்த அரசே, போற்றி!
சீர் ஆர் திருவையாறா, போற்றி!
அண்ணாமலை எம் அண்ணா, போற்றி!
கண் ஆர் அமுதக் கடலே, போற்றி!