தனியனேன், பெரும் பிறவிப் பௌவத்து, எவ்வம்
தடம் திரையால் எற்றுண்டு, பற்றுஒன்று இன்றி,
கனியின் நேர் துவர் வாயார் என்னும் காலால்
கலக்குண்டு காம வான் சுறவின் வாய்ப்பட்டு,
இனி, என்னே உய்யும் ஆறு? என்று என்று எண்ணி,
அஞ்சு எழுத்தின் புணை பிடித்துக்கிடக்கின்றேனை,
முனைவனே! முதல், அந்தம், இல்லா மல்லல்
கரை காட்டி, ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே.
சிவ.அ.தியாகராசன்