பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருத்தருமபுரம்
வ.எண் பாடல்
1

மாதர் மடப்பிடியும் மட அன்னமும் அன்னது ஓர்
நடை உடை மலைமகள் துணை என மகிழ்வர்,
த இனப்படை நின்று இசை பாடவும் ஆடுவர்,
அவர் படர் சடை நெடுமுடியது ஒர் புனலர்,
வேதமொடு ஏழிசை பாடுவர் ஆழ்கடல் வெண்திரை
இரை நுரை கரை பொருது, விம்மி நின்று, அயலே
தாது அவிழ் புன்னை தயங்கு மலர்ச் சிறைவண்டு அறை
எழில் பொழில் குயில் பயில் தருமபுரம்பதியே.

2

பொங்கும் நடைப் புகல் இல் விடை ஆம் அவர் ஊர்தி,
வெண்பொடி அணி தடம் கொள் மார்பு ணநூல் புரள,
மங்குல் இடைத் தவழும் மதி சூடுவர், ஆடுவர்,
வளம் கிளர்புனல் அரவம் வைகிய சடையர்
சங்கு கடல்-திரையால் உதையுண்டு, சரிந்து இரிந்து,
ஒசிந்து அசைந்து, இசைந்து சேரும் வெண்மணல் குவைமேல்
தங்கு கதிர் மணி நித்திலம் மெல் இருள் ஒல்க நின்று,
இலங்கு ஒளி நலங்கு எழில்-தருமபுரம் பதியே.

3

விண் உறு மால்வரை போல் விடை ஏறுவர், ஆறு சூடுவர்,
விரி சுரி ஒளி கொள் தோடு நின்று இலங்கக்
கண் உற நின்று ஒளிரும் கதிர் வெண்மதிக்கண்ணியர்,
கழிந்தவர் இழிந்திடும் உடைதலை கலனாப்
பெண் உற நின்றவர், தம் உருவம் அயன் மால் தொழ
அரிவையைப் பிணைந்து இணைந்து அணைந்ததும் பிரியார்
தண் இதழ் முல்லையொடு, எண் இதழ் மௌவல், மருங்கு அலர்
கருங்கழி நெருங்கு நல்-தருமபுரம்பதியே.

4

வார் உறு மென்முலை நன்நுதல் ஏழையொடு ஆடுவர்,
வளம் கிளர் விளங்கு திங்கள் வைகிய சடையர்,
கார் உற நின்று அலரும் மலர்க்கொன்றை அம் கண்ணியர்,
கடு விடை கொடி, வெடிகொள் காடு உறை பதியர்,
பார் உற விண்ணுலகம் பரவபடுவோர், அவர்
படுதலைப் பலி கொளல் பரிபவம் நினையார்
தார் உறு நல் அரவம் மலர் துன்னிய தாது உதிர்
தழை பொழில் மழை நுழை தருமபுரம்பதியே.

5

நேரும் அவர்க்கு உணரப் புகில் இல்லை; நெடுஞ்சடைக்
கடும்புனல் படர்ந்து இடம் படுவது ஒர் நிலையர்;
பேரும் அவர்க்கு எனை ஆயிரம்! முன்னைப் பிறப்பு, இறப்பு,
இலாதவர்; உடற்று அடர்த்த பெற்றி யார் அறிவார்?
ஆரம் அவர்க்கு அழல் வாயது ஒர் நாகம்; அழகு உற
எழு கொழு மலர் கொள் பொன் இதழி நல் அலங்கல்;
தாரம் அவர்க்கு இமவான்மகள்; ஊர்வது போர் விடை
கடு படு செடி பொழில்-தருமபுரம் பதியே.

6

கூழை அம் கோதை குலாயவள் தம் பிணை புல்க,
மல்கு மென்முலை,பொறி கொள் பொன்-கொடி இடை, துவர்வாய்,
மாழை ஒண்கண் மடவாளை ஓர்பாகம் மகிழ்ந்தவர்;
வலம் மலி படை, விடை கொடி, கொடு மழுவாள்
யாழையும் எள்கிட ஏழிசை வண்டு முரன்று, இனம்
துவன்றி, மென்சிறகு அறை உற நற விரியும் நல்-
தாழையும் ஞாழலும் நீடிய கானலின் நள் அல் இசை
புள் இனம் துயில் பயில் தருமபுரம்பதியே.

7

தே மரு வார்குழல் அன்னநடைப் பெடைமான் விழித்
திருந்திழை பொருந்து மேனி செங்கதிர் விரிய,
தூ மரு செஞ்சடையில்-துதை வெண்மதி, துன்று கொன்றை,
தொல்புனல், சிரம், கரந்து, உரித்த தோல் உடையர்
கா மரு தண்கழி நீடிய கானல கண்டகம்
கடல் அடை கழி இழிய, முண்டகத்து அயலே,
தாமரை சேர் குவளைப் படுகில் கழுநீர் மலர்
வெறி கமழ் செறி வயல்- தருமபுரம்பதியே.

8

தூ வணநீறு அகலம் பொலிய, விரை புல்க மல்கு
மென்மலர் வரை புரை திரள்புயம் அணிவர்;
கோவணமும் உழையின் அதளும் உடை ஆடையர்;
கொலை மலி படை ஒர் சூலம் ஏந்திய குழகர்;
பா வணமா அலறத் தலைபத்து உடை அவ் அரக்கன
வலி ஒர் கவ்வை செய்து அருள்புரி தலைவர்;
தாவண ஏறு உடை எம் அடிகட்கு இடம்வன் தடங்
கடல் இடும் தடங்கரைத் தருமபுரம்பதியே.

9

வார் மலி மென்முலை மாது ஒருபாகம் அது ஆகுவர்;
வளம் கிளர் மதி, அரவம், வைகிய சடையர்;
கூர் மலி சூலமும், வெண்மழுவும், அவர் வெல் படை;
குனிசிலை தனி மலை அது ஏந்திய குழகர்;
ஆர் மலி ஆழி கொள் செல்வனும், அல்லி கொள் தாமரை
மிசை அவன், அடி முடி அளவு தாம் அறியார்;
தார் மலி கொன்றை அலங்கல் உகந்தவர்; தங்கு இடம்
தடங்கல் இடும் திரைத் தருமபுரம் பதியே.

10

புத்தர், கடத் துவர் மொய்த்து உறி புல்கிய கையர், பொய்
மொழிந்த அழிவு இல் பெற்றி உற்ற நல்-தவர், புலவோர்,
பத்தர்கள், அத் தவம் மெய்ப் பயன் ஆக உகந்தவர்;
நிகழ்ந்தவர்; சிவந்தவர்; சுடலைப் பொடி அணிவர்;
முத்து அன வெண்நகை ஒண் மலைமாது உமை பொன் அணி
புணர் முலை இணை துணை அணைவதும் பிரியார்
தத்து அருவித்திரள் உந்திய மால்கடல் ஓதம் வந்து
அடர்த்திடும் தடம் பொழில்-தருமபுரம்பதியே.

11

“பொன் நெடு நல் மணி மாளிகை சூழ் விழவம் மலீ
பொரூஉ புனல் திரூஉ அமர் புகலி” என்று உலகில்
தன்னொடு நேர் பிற இல் பதி ஞானசம்பந்தனது
செந்தமிழ்த் தடங்கல்-தருமபுரம்பதியைப்
பின் நெடுவார் சடையில் பிறையும் அரவும் உடையவன்
பிணைதுணை கழல்கள் பேணுதல் உரியார்,
இன் நெடுநன் உலகு எய்துவர்; எய்திய போகமும்
உறுவர்கள்; இடர், பிணி, துயர், அணைவு இலரே.