பொங்கும் நடைப் புகல் இல் விடை ஆம் அவர் ஊர்தி,
வெண்பொடி அணி தடம் கொள் மார்பு ணநூல் புரள,
மங்குல் இடைத் தவழும் மதி சூடுவர், ஆடுவர்,
வளம் கிளர்புனல் அரவம் வைகிய சடையர்
சங்கு கடல்-திரையால் உதையுண்டு, சரிந்து இரிந்து,
ஒசிந்து அசைந்து, இசைந்து சேரும் வெண்மணல் குவைமேல்
தங்கு கதிர் மணி நித்திலம் மெல் இருள் ஒல்க நின்று,
இலங்கு ஒளி நலங்கு எழில்-தருமபுரம் பதியே.