பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்
சேந்தனார் - திருவீழிமிழலை
வ.எண் பாடல்
1

ஏகநா யகனை, இமையவர்க் கரசை,
என்னுயிர்க் கமுதினை, எதிர்இல்
போகநா யகனைப், புயல்வணற் கருளிப்
பொன்னெடுஞ் சிவிகையா ஊர்ந்த
மேகநா யகனை, மிகுதிரு வீழி
மிழலைவிண் ணிழிசெழுங் கோயில்
யோகநா யகனை யன்றிமற் றொன்றும்
உண்டென உணர்கிலேன் யானே.

2

கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்,
கரையிலாக் கருணைமா கடலை,
மற்றவர் அறியா மாணிக்க மலையை,
மதிப்பவர் மனமணி விளக்கைச்,
செற்றவர் புரங்கள் செற்றஎம் சிவனைத்
திருவீழி மிழலைவீற் றிருந்த
கொற்றவன் றன்னைக் கண்டுகண் டுள்ளம்
குளிரஎன் கண்குளிர்ந் தனவே.

3

மண்டலத் தொளியை விலக்கியான் நுகர்ந்த
மருந்தை, என் மாறிலா மணியைப்,
பண்டலர் அயன்மாற் கரிதுமாய், அடியார்க்
கெளியதோர் பவளமால் வரையை,
விண்டலர் மலர்வாய் வேரிவார் பொழில்சூழ்
திருவீழி மிழலையூர் ஆளும்
கொண்டலங் கண்டத் தெம்குரு மணியைக்
குறுகவல் வினைகுறு காவே.

4

தன்னடி நிழற்கீழ் என்னையும் தகைத்த
சசிகுலா மவுலியைத், தானே
என்னிடைக் கமலம் மூன்றினுள் தோன்றி
எழுஞ்செழுஞ் சுடரினை, அருள்சேர்
மின்னெடுங் கடலுள் வெள்ளத்தை, வீழி
மிழலையுள் விளங்குவெண் பளிங்கின்
பொன்னடிக் கடிமை புக்கினிப் போக
விடுவனோ பூண்டுகொண் டேனே!

5

‘இத்தெய்வ நெறிநன்’ றென்றிருள் மாயப்
பிறப்பறா இந்திர சாலப்
பொய்த்தெய்வ நெறிநான் புகாவகை புரிந்த
புராணசிந் தாமணி வைத்த
மெய்த்தெய்வ நெறிநான் மறையவர் வீழி
மிழலைவிண் ணிழிசெழுங் கோயில்
அத்தெய்வ நெறியிற் சிவமலா தவமும்
அறிவரோ அறிவுடை யோரே!

6

அக்கனா அனைய செல்வமே சிந்தித்
தைவரோ டழுந்தியான் அவமே
புக்கிடா வண்ணம் காத்தெனை ஆண்ட
புனிதனை, வனிதைபா கனை, எண்
திக்கெலாங் குலவும் புகழத்திரு வீழி
மிழலையான் திருவடி நிழற்கீழ்ப்
புக்குநிற் பவர்தம் பொன்னடிக் கமலப்
பொடியணிந் தடிமைபூண் டேனே.

7

கங்கைநீர் அரிசிற் கரைஇரு மருங்கும்
கமழ்பொழில் தழுவிய கழனித்
திங்கள்நேர் தீண்ட நீண்டமா ளிகைசூழ்
மாடநீ டுயர்திரு வீழித்
தங்குசீர்ச் செல்வத் தெய்வத்தான் தோன்றி
நம்பியைத் தன்பெருஞ் சோதி
மங்கைஓர் பங்கத் தென்னரு மருந்தை
வருந்திநான் மறப்பனோ இனியே.

8

ஆயிரங் கமலம்ஞாயிறா யிரமுக்
கண்முக கரசர ணத்தோன்,
பாயிருங் கங்கை பனிநிலாக் கரந்த
படர்சடை மின்னுபொன் முடியோன்,
வேயிருந் தோளி உமைமண வாளன்
விரும்பிய மிழலைசூழ் பொழிலைப்
போயிருந் தேயும் போற்றுவார் கழல்கள்
போற்றுவார் புரந்தரா திகளே.

9

எண்ணில்பல் கோடி சேவடி முடிகள்,
எண்ணில்பல் கோடிதிண் டோள்கள்,
எண்ணில்பல் கோடி திருவுரு நாமம்
ஏர்கொள்முக் கணமுகம் இயல்பும்
எண்ணில்பல் கோடி எல்லைக்கப் பாலாய்
நின்றைஞ்ஞூற் றந்தணர் ஏத்தும்
எண்ணில்பல் கோடி குணத்தர்ஏர் வீழி
இவர்நம்மை ஆளுடை யாரே.

10

தக்கன். வெங் கதிரோன், சலந்தரன், பிரமன்,
சந்திரன், இந்திரன், எச்சன்,
மிக்கநெஞ் சரக்கன் புரம்கரி, கருடன்,
மறலிவேள் இவர்மிகை செகுத்தோன்
திக்கெலாம் நிறைந்த புகழ்த்திரு வீழி
மிழலையான் திருவடி நிழற்கீழ்ப்
புக்கிருந் தவர்தம் பொன்னடிக் கமலப்
பொடியணிந் தடிமைபூண் டேனே.

11

உளங்கொள மதுரக் கதிர்விரித் துயிர்மேல்
அருள்சொரி தரும்உமா பதியை,
வளங்கிளர் நதியும் மதியமும் சூடி
மழவிடை மேல்வரு வானை,
விளங்கொளி வீழி மிழலைவேந்தே’ என்
றாந்தனைச் சேந்தன்தா தையையான்
களங்கொள அழைத்தால் பிழைக்குமோ அடியேன்
கைக்கொண்ட கனககற் பகமே.

12

பாடலங் காரப் பரிசில்கா சருளிப்
பழுத்தசெந் தமிழ்மலர் சூடி
நீடலங் காரத் தெம்பெரு மக்கள்
நெஞ்சினுள் நிறைந்துநின் றானை
வேடலங் காரக் கோலத்தின் னமுதைத்
திருவீழி மிழலையூர் ஆளும்
கேடிலங் கீர்த்திக் கனககற் பகத்தைக்
கெழுமுதற் கெவ்விடத் தேனே.