பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருமறைக்காடு
வ.எண் பாடல்
1

சதுர மறைதான் துதிசெய்து வணங்கும்
மதுரம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா!
இது நன்கு இறை வைத்து அருள்செய்க, எனக்கு உன்
கதவம் திருக்காப்புக் கொள்ளும் கருத்தாலே!

2

சங்கம், தரளம் அவை, தான் கரைக்கு எற்றும்
வங்கக் கடல் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா!
மங்கைஉமை பாகமும் ஆக, இது என்கொல்,
கங்கை சடை மேல் அடைவித்த கருத்தே?

3

குரவம், குருக்கத்திகள், புன்னைகள், ஞாழல்
மருவும் பொழில் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா!
சிரமும் மலரும் திகழ் செஞ்சடைதன்மேல்
அரவம் மதியோடு அடைவித்தல் அழகே?

4

படர் செம்பவளத்தொடு, பல்மலர், முத்தம்,
மடல் அம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா!
உடலம்(ம்) உமை பங்கம் அது ஆகியும், என்கொல்,
கடல் நஞ்சு அமுதாஅது உண்ட கருத்தே?

5

வானோர், மறை மா தவத்தோர், வழிபட்ட
தேன் ஆர் பொழில் சூழ் மறைக்காட்டு உறை செல்வா!
ஏனோர் தொழுது ஏத்த இருந்த நீ, என்கொல்,
கான் ஆர் கடு வேடுவன் ஆன கருத்தே?

6

பலகாலங்கள், வேதங்கள் பாதங்கள் போற்றி,
மலரால் வழிபாடு செய் மா மறைக்காடா!
உலகுஏழ் உடையாய்! கடைதோறும் முன், என்கொல்,
தலை சேர் பலி கொண்டு அதில் உண்டதுதானே?

7

வேலாவலயத்து அயலே மிளிர்வு எய்தும்
சேல் ஆர் திரு மா மறைக்காட்டு உறை செல்வா!
மாலோடு அயன் இந்திரன் அஞ்ச முன், என்கொல்,
கால் ஆர் சிலைக் காமனைக் காய்ந்த கருத்தே?

8

கலம் கொள் கடல் ஓதம் உலாவும் கரைமேல்
வலம்கொள்பவர் வாழ்த்து இசைக்கும் மறைக்காடா!
இலங்கை உடையான் அடர்ப்பட்டு இடர் எய்த,
அலங்கல் விரல் ஊன்றி, அருள்செய்தஆறே?

9

கோன் என்று பல்கோடிஉருத்திரர் போற்றும்
தேன் அம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை செல்வா!
ஏனம் கழுகு ஆனவர், உன்னை முன், என்கொல்,
வானம் தலம் மண்டியும் கண்டிலாஆறே?

10

வேதம் பல ஓமம் வியந்து அடி போற்ற,
ஓதம் உலவும், மறைக்காட்டில் உறைவாய்!
ஏதில் சமண்சாக்கியர் வாக்குஇவை, என்கொல்,
ஆதரொடு தாம் அலர் தூற்றிய ஆறே?

11

காழி நகரான் கலை ஞானசம்பந்தன்
வாழி மறைக்காடனை வாய்ந்து அறிவித்த
ஏழ் இன் இசைமாலை ஈர் ஐந்துஇவை வல்லார்,
வாழி உலகோர் தொழ, வான் அடைவாரே.

திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருமறைக்காடு
வ.எண் பாடல்
1

பொங்கு வெண்மணல் கானல் பொருகடல் திரை தவழ்
முத்தம்
கங்குல் ஆர் இருள் போழும் கலி மறைக்காடு அமர்ந்தார்
தாம்
திங்கள் சூடினரேனும், திரிபுரம் எரித்தனரேனும்,
எங்கும் எங்கள் பிரானார் புகழ் அலது, இகழ் பழி இலரே

2

கூன் இளம்பிறை சூடி, கொடு வரித் தோல் உடை ஆடை,
ஆனில் அம்கிளர் ஐந்தும் ஆடுவர்; பூண்பதுவும் அரவம்
கானல் அம் கழி ஓதம் கரையொடு கதிர் மணி ததும்ப,
தேன் நலம் கமழ் சோலைத் திரு மறைக்காடு அமர்ந்தாரே.

3

நுண்ணிது ஆய் வெளிது ஆகி நூல் கிடந்து இலங்கு
பொன் மார்பில்,
பண்ணியாழ் என முரலும் பணிமொழி உமை ஒரு பாகன்;
தண்ணிது ஆய வெள் அருவி சல சல நுரை மணி ததும்ப,
கண்ணி தானும் ஒர் பிறையார் கலி மறைக்காடு
அமர்ந்தாரே.

4

ஏழை வெண் குருகு, அயலே இளம்பெடை தனது எனக்
கருதித்
தாழை வெண்மடல் புல்கும் தண் மறைக்காடு
அமர்ந்தார்தாம்,
மாழை அம் கயல் ஒண்கண் மலைமகள் கணவனது
அடியின்
நீழலே சரண் ஆக நினைபவர், வினை நலிவு இலரே.

5

அரவம் வீக்கிய அரையும், அதிர்கழல் தழுவிய அடியும்,
பரவ, நாம் செய்த பவம் பறை தர அருளுவர் பதிதான்
மரவம் நீடு உயர் சோலை மழலை வண்டு யாழ் செயும்
மறைக்காட்டு
இரவும் எல்லி அம் பகலும் ஏத்துதல் குணம் எனல் ஆமே.

6

பல் இல் ஓடு கை ஏந்திப் பாடியும் ஆடியும் பலி தேர்
அல்லல் வாழ்க்கையரேனும், அழகியது அறிவர்; எம்
அடிகள்
புல்லம் ஏறுவர்; பூதம் புடை செல உழிதர்வர்க்கு இடம்
ஆம்
மல்கு வெண் திரை ஓதம் மா மறைக்காடு அதுதானே.

7

நாகம் தான் கயிறு ஆக, நளிர் வரை அதற்கு மத்து ஆக,
பாகம் தேவரொடு அசுரர் படு கடல் அளறு எழக் கடைய,
வேக நஞ்சு எழ, ஆங்கே வெருவொடும் இரிந்து எங்கும்
ஓட,
ஆகம் தன்னில் வைத்து அமிர்தம் ஆக்குவித்தான்
மறைக்காடே

8

தக்கன் வேள்வியைத் தகர்த்தோன்; தனது ஒரு
பெருமையை ஓரான்;
மிக்கு மேல் சென்று மலையை எடுத்தலும், மலைமகள்
நடுங்க,
நக்கு, தன் திரு விரலால் ஊன்றலும், நடு நடுத்து அரக்கன்
பக்க வாயும் விட்டு அலறப் பரிந்தவன்; பதி மறைக்காடே.

9

விண்ட மா மலரோனும், விளங்கு ஒளி அரவு
அணையானும்,
பண்டும் காண்பு அரிது ஆய பரிசினன் அவன் உறை
பதிதான்
கண்டல் அம் கழி ஓதம் கரையொடு கதிர் மணி ததும்ப,
வண்டல் அம் கமழ்சோலை மா மறைக்காடு அதுதானே.

10

பெரிய ஆகிய குடையும் பீலியும் அவை வெயில் கரவா,
கரிய மண்டை கை ஏந்தி, கல்லென உழிதரும் கழுக்கள்
அரிய ஆக உண்டு ஓதுமவர் திறம் ஒழிந்து, நம் அடிகள்
பெரிய சீர் மறைக்காடே பேணுமின்! மனம் உடையீரே!

11

மை உலாம் பொழில் சூழ்ந்த மா மறைக்காடு
அமர்ந்தாரைக்
கையினால் தொழுது எழுவான், காழியுள் ஞானசம்பந்தன்,
செய்த செந்தமிழ் பத்தும் சிந்தையுள் சேர்க்க வல்லார்,
போய்,
பொய் இல் வானவரோடும் புக வலர்; கொள வலர், புகழே.