பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
சீரின் ஆர் மணியும்(ம்) அகில் சந்தும் செறி வரை வாரி நீர் வரு பொன்னி வடமங்கலக்குடி நீரின் மா முனிவன் நெடுங்கைகொடு நீர்தனைப் பூரித்து ஆட்டி அர்ச்சிக்க இருந்த புராணனே.
பணம் கொள் ஆடுஅரவு அல்குல் நல்லார் பயின்று ஏத்தவே, மணம் கொள் மா மயில் ஆலும் பொழில் மங்கலக்குடி இணங்கு இலா மறையோர் இமையோர் தொழுது ஏத்திட, அணங்கினோடு இருந்தான் அடியே சரண் ஆகுமே.
கருங்கையானையின் ஈர் உரி போர்த்திடு கள்வனார், மருங்குஎலாம் மணம் ஆர் பொழில் சூழ் மங்கலக்குடி அரும்பு சேர் மலர்க்கொன்றையினான் அடி அன்பொடு விரும்பி ஏத்த வல்லார் வினைஆயின வீடுமே.
ஆனில் அம்கிளர் ஐந்தும் அவிர் முடி ஆடி, ஓர் மான் நில் அம் கையினான், மணம் ஆர் மங்கலக்குடி ஊன் இல்வெண்தலைக் கை உடையான் உயர் பாதமே ஞானம் ஆக நின்று ஏத்த வல்லார் வினை நாசமே.
தேனும் ஆய் அமுதுஆகி நின்றான், தெளி சிந்தையுள வானும் ஆய் மதி சூட வல்லான்; மங்கலக்குடிக் கோனை நாள்தொறும் ஏத்திக் குணம்கொடு கூறுவார் ஊனம் ஆனவை போய் அறும்; உய்யும் வகை, அதே.
வேள் படுத்திடு கண்ணினன், மேரு வில் ஆகவே வாள் அரக்கர் புரம் எரித்தான், மங்கலக்குடி ஆளும் ஆதிப்பிரான், அடிகள் அடைந்து ஏத்தவே, கோளும் நாள் அவை போய் அறும்; குற்றம் இல்லார்களே
பொலியும் மால்வரை புக்கு எடுத்தான் புகழ்ந்து ஏத்திட, வலியும் வாளொடு நாள் கொடுத்தான்; மங்கலக்குடிப் புலியின் ஆடையினான்; அடி ஏத்திடும் புண்ணியர் மலியும் வான் உலகம் புக வல்லவர்; காண்மினே!
ஞாலம் முன் படைத்தான் நளிர்மாமலர்மேல் அயன், மாலும், காண ஒணா எரியான்; மங்கலக்குடி ஏல வார்குழலாள் ஒருபாகம் இடம்கொடு கோலம் ஆகி நின்றான்; குணம் கூறும்! குணம் அதே.
மெய்யில் மாசினர், மேனி விரி துவர் ஆடையர், பொய்யை விட்டிடும் புண்ணியர் சேர் மங்கலக்குடிச் செய்யமேனிச் செழும் புனல்கங்கை செறி சடை ஐயன் சேவடி ஏத்த வல்லார்க்கு அழகு ஆகுமே.
மந்த மாம்பொழில் சூழ் மங்கலக்குடி மன்னிய எந்தையை, எழில் ஆர் பொழில் காழியர்காவலன் சிந்தைசெய்து அடி சேர்த்திடு ஞானசம்பந்தன் சொல் முந்தி ஏத்த வல்லார், இமையோர்முதல் ஆவரே.