பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
சடை உடையானும், நெய் ஆடலானும், சரி கோவண- உடை உடையானும், மை ஆர்ந்த ஒண்கண் உமை கேள்வனும், கடை உடை நன்நெடு மாடம் ஓங்கும் கடவூர்தனுள் விடை உடை அண்ணலும் வீரட்டானத்து அரன் அல்லனே?
எரிதரு வார்சடையானும்; வெள்ளை எருது ஏறியும்; புரிதரு மா மலர்க்கொன்றை மாலை புனைந்து, ஏத்தவே, கரிதரு காலனைச் சாடினானும் கடவூர்தனுள் விரிதரு தொல்புகழ் வீரட்டானத்து அரன் அல்லனே?
நாதனும், நள் இருள் ஆடினானும், நளிர்போதின்கண் பாதனும், பாய் புலித்தோலினானும், பசு ஏறியும், காதலர் தண் கடவூரினானும், கலந்து ஏத்தவே வேதம் அது ஓதியும் வீரட்டானத்து அரன் அல்லனே?
சுடர் மணிச் சுண்ணவெண் நீற்றினானும், சுழல்வு ஆயது ஓர் படம் மணி நாகம் அரைக்கு அசைத்த பரமேட்டியும், கடம் அணி மா உரித் தோலினானும், கடவூர்தனுள் விடம் அணி கண்டனும் வீரட்டானத்து அரன் அல்லனே?
பண் பொலி நால்மறை பாடி ஆடி, பல ஊர்கள் போய், உண் பலி கொண்டு உழல்வானும்; வானின்(ன்) ஒளி மல்கிய, கண் பொலி நெற்றி, வெண்திங்களானும்; கடவூர்தனுள் வெண்பொடிபூப்சியும் வீரட்டானத்து அரன் அல்லனே?
செவ் அழல் ஆய், நிலன் ஆகி, நின்ற சிவமூர்த்தியும்; முவ் அழல், நால்மறை, ஐந்தும், ஆய முனிகேள்வனும்; கவ்வு அழல் வாய்க் கதநாகம் ஆர்த்தான்-கடவூர்தனுள் வெவ் அழல் ஏந்து கை வீரட்டானத்து அரன் அல்லனே?
அடி இரண்டு, ஓர் உடம்பு, ஐஞ்ஞான்கு-இருபதுதோள், தச- முடி உடை வேந்தனை மூர்க்கு அழித்த முதல் மூர்த்தியும்; கடி கமழும் பொழில் சூழும் அம் தண் கடவூர்தனுள் வெடி தலை ஏந்தியும் வீரட்டானத்து அரன் அல்லனே?
வரை குடையா மழை தாங்கினானும், வளர் போதின்கண் புரை கடிந்து ஓங்கிய நான்முகத்தான், புரிந்து ஏத்தவே, கரை கடல் சூழ் வையம் காக்கின்றானும் கடவூர்தனுள் விரை கமழ் பூம்பொழில் வீரட்டானத்து அரன் அல்லனே?
தேரரும், மாசு கொள் மேனியாரும், தெளியாதது ஓர் ஆர் அருஞ்சொல் பொருள் ஆகி நின்ற எமது ஆதியான்; கார் இளங் கொன்றை வெண்திங்களானும் கடவூர்தனுள் வீரமும் சேர் கழல் வீரட்டானத்து அரன் அல்லனே?
வெந்த வெண்நீறு அணி வீரட்டானத்து உறை வேந்தனை, அந்தணர் தம் கடவூர் உளானை, அணி காழியான் சந்தம் எல்லாம் அடிச் சாத்த வல்ல மறை ஞானசம்- பந்தன செந்தமிழ் பாடி ஆட, கெடும், பாவமே.