பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருக்கோட்டாறு
வ.எண் பாடல்
1

வேதியன், விண்ணவர் ஏத்த நின்றான், விளங்கும் மறை
ஓதிய ஒண்பொருள் ஆகி நின்றான், ஒளி ஆர் கிளி
கோதிய தண்பொழில் சூழ்ந்து அழகு ஆர் திருக்கோட்டாற்றுள்
ஆதியையே நினைந்து ஏத்த வல்லார்க்கு அல்லல்
இல்லையே.

2

ஏல மலர்க் குழல் மங்கை நல்லாள், இமவான்மகள்
பால் அமரும் திருமேனி எங்கள் பரமேட்டியும்
கோல மலர்ப்பொழில் சூழ்ந்து, எழில் ஆர் திருக்கோட்டாற்றுள்
ஆல நிழல் கீழ் இருந்து, அறம் சொன்ன அழகனே.

3

இலை மல்கு சூலம் ஒன்று ஏந்தினானும், இமையோர் தொழ
மலை மல்கு மங்கை ஓர்பங்கன் ஆய(ம்) மணிகண்டனும்
குலை மல்கு தண்பொழில் சூழ்ந்து, அழகு ஆர்
திருக்கோட்டாற்றுள்
அலை மல்கு வார்சடை ஏற்று உகந்த அழகன் அன்றே!

4

ஊன் அமரும்(ம்) உடலுள் இருந்த(வ்) உமைபங்கனும்
வான் அமரும் மதி சென்னி வைத்த மறை ஓதியும்,
தேன் அமரும் மலர்ச்சோலை சூழ்ந்த திருக்கோட்டாற்றுள்
தான் அமரும் விடையானும், எங்கள் தலைவன் அன்றே!

5

வம்பு அலரும் மலர்க்கோதை பாகம் மகிழ் மைந்தனும்,
செம்பவளத்திருமேனி வெண்நீறு அணி செல்வனும்
கொம்பு அமரும் மலர் வண்டு கெண்டும் திருக்கோட்டாற்றுள்
நம்பன் எனப் பணிவார்க்கு அருள்செய் எங்கள் நாதனே.

6

பந்து அமரும் விரல் மங்கை நல்லாள் ஒருபாகமா,
வெந்து அமரும் பொடிப் பூச வல்ல விகிர்தன், மிகும்
கொந்து அமரும் மலர்ச்சோலை சூழ்ந்த திருக்கோட்டாற்றுள்
அந்தணனை, நினைந்து ஏத்த வல்லார்க்கு இல்லை,
அல்லலே.

7

துண்டு அமரும் பிறை சூடி நீடு சுடர்வண்ணனும்,
வண்டு அமரும் குழல் மங்கை நல்லாள் ஒருபங்கனும்
தெண்திரை நீர் வயல் சூழ்ந்து அழகு ஆர் திருக்கோட்டாற்றுள்
அண்டமும் எண் திசை ஆகி நின்ற அழகன் அன்றே!

8

இரவு அமரும் நிறம் பெற்று உடைய இலங்கைக்கு இறை,
கரவு அமரக் கயிலை எடுத்தான், வலி செற்றவன்-
குரவு அமரும் மலர்ச்சோலை சூழ்ந்த திருக்கோட்டாற்றுள்
அரவு அமரும் சடையான்; அடியார்க்கு அருள்செய்யுமே.

9

ஓங்கிய நாரணன் நான்முகனும் உணரா வகை,
நீங்கிய தீ உரு ஆகி நின்ற நிமலன்-நிழல்
கோங்கு அமரும் பொழில் சூழ்ந்து, எழில் ஆர்
திருக்கோட்டாற்றுள்
ஆங்கு அமரும் பெருமான்; அமரர்க்கு அமரன் அன்றே!

10

கடுக் கொடுத்த துவர் ஆடையர், காட்சி இல்லாதது ஓர்
தடுக்கு இடுக்கிச் சமணே திரிவார்கட்கு, தன் அருள்
கொடுக்ககிலாக் குழகன் அமரும் திருக்கோட்டாற்றுள்
இடுக்கண் இன்றித் தொழுவார் அமரர்க்கு இறை
ஆவரே.

11

கொடி உயர் மால்விடை ஊர்தியினான் திருக்கோட்டாற்றுள்
அடி கழல் ஆர்க்க நின்று ஆட வல்ல அருளாளனை,
கடி கமழும் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் சொல்-
படி, இவை பாடி நின்று ஆட வல்லார்க்கு இல்லை,
பாவமே.