பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
நிணம் படு சுடலையில், நீறு பூசி நின்று, இணங்குவர், பேய்களோடு; இடுவர், மாநடம்; உணங்கல் வெண் தலைதனில் உண்பர்; ஆயினும், குணம் பெரிது உடையர் நம் கொள்ளிக்காடரே.
ஆற்ற நல் அடி இணை அலர் கொண்டு ஏத்துவான், சாற்றிய அந்தணன் தகுதி கண்ட நாள் மாற்றலன் ஆகி முன் அடர்த்து வந்து அணை கூற்றினை உதைத்தனர் கொள்ளிக்காடரே.
அத்தகு வானவர்க்கு ஆக, மால்விடம் வைத்தவர், மணி புரை கண்டத்தி(ன்)னுளே; மத்தமும் வன்னியும் மலிந்த சென்னிமேல் கொத்து அலர் கொன்றையர் கொள்ளிக்காடரே.
பா வணம் மேவு சொல்மாலையின், பல நா வணம் கொள்கையின் நவின்ற செய்கையர்; ஆவணம் கொண்டு எமை ஆள்வர் ஆயினும், கோவணம் கொள்கையர் கொள்ளிக்காடரே.
வார் அணி வனமுலை மங்கையாளொடும் சீர் அணி திரு உருத் திகழ்ந்த சென்னியர்; நார் அணி சிலைதனால் நணுகலார் எயில் கூர் எரி கொளுவினர் கொள்ளிக்காடரே.
பஞ்சு தோய் மெல் அடிப் பாவையாளொடும் மஞ்சு தோய் கயிலையுள் மகிழ்வர், நாள்தொறும்; வெஞ்சின மருப்பொடு விரைய வந்து அடை குஞ்சரம் உரித்தனர் கொள்ளிக்காடரே.
இறை உறு வரி வளை இசைகள் பாடிட, அறை உறு கழல் அடி ஆர்க்க, ஆடுவர்; சிறை உறு விரிபுனல் சென்னியின் மிசைக் குறை உறு மதியினர் கொள்ளிக்காடரே.
எடுத்தனன் கயிலையை, இயல் வலியினால், அடர்த்தனர் திருவிரலால்; அலறிடப் படுத்தனர்; ஏன்று அவன் பாடல் பாடலும், கொடுத்தனர், கொற்றவாள்; கொள்ளிக்காடரே.
தேடினார், அயன் முடி, மாலும் சேவடி; நாடினார் அவர் என்றும் நணுககிற்றிலர்; பாடினார், பரிவொடு; பத்தர் சித்தமும் கூடினார்க்கு அருள்செய்வர் கொள்ளிக்காடரே.
நாடி நின்று, அறிவு இல் நாண் இலிகள், சாக்கியர் ஓடி முன் ஓதிய உரைகள் மெய் அல; பாடுவர், நால்மறை; பயின்ற மாதொடும் கூடுவர், திரு உரு; கொள்ளிக்காடரே.
நல்-தவர் காழியுள் ஞானசம்பந்தன், குற்றம் இல் பெரும் புகழ்க் கொள்ளிக்காடரைச் சொல்-தமிழ் இன் இசைமாலை, சோர்வு இன்றிக் கற்றவர், கழல் அடி காண வல்லரே.