பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருஆவடுதுறை
வ.எண் பாடல்
1

நம்பனை, நால்வேதம் கரை கண்டானை, ஞானப்பெருங்கடலை,
நன்மை தன்னை,
கம்பனை, கல்லால் இருந்தான் தன்னை, கற்பகம் ஆய்
அடியார்கட்கு அருள் செய்வானை,
செம்பொன்னை, பவளத்தை, திரளும் முத்தை, திங்களை,
ஞாயிற்றை, தீயை, நீரை,
அம்பொன்னை, ஆவடுதண் துறையுள் மேய அரன் அடியே
அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.

2

மின்னானை, மின் இடைச் சேர் உருமினானை, வெண்முகில
ஆய் எழுந்து மழை பொழிவான் தன்னை,
தன்னானை, தன் ஒப்பார் இல்லாதானை, தாய் ஆகிப் பல்
உயிர்க்கு ஓர் தந்தை ஆகி
என்னானை, எந்தை பெருமான் தன்னை, இரு நிலமும்
அண்டமும் ஆய்ச் செக்கர்வானே
அன்னானை, ஆவடு தண்துறையுள் மேய அரன் அடியே
அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!

3

பத்தர்கள் சித்தத்தே பாவித்தானை, பவளக்கொழுந்தினை,
மாணிக்கத்தின்
தொத்தினை, தூ நெறி ஆய் நின்றான் தன்னை, சொல்லுவார்
சொல் பொருளின் தோற்றம் ஆகி
வித்தினை, முளைக் கிளையை, வேரை, சீரை, வினை
வயத்தின் தன்சார்பை, வெய்ய தீர்க்கும்
அத்தனை, ஆவடுதண் துறையுள் மேய அரன் அடியே
அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.

4

பேணிய நல் பிறை தவழ் செஞ்சடையினானை, பித்தர் ஆம்
அடியார்க்கு முத்தி காட்டும்
ஏணியை, இடர்க் கடலுள் சுழிக்கப்பட்டு இங்கு
இளைக்கின்றேற்கு அக் கரைக்கே ஏற வாங்கும்
தோணியை, தொண்டனேன் தூய சோதிச் சுலா
வெண்குழையானை, சுடர் பொன்காசின்
ஆணியை, ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே
அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.

5

ஒரு மணியை, உலகுக்கு ஓர் உறுதிதன்னை, உதயத்தின்
உச்சியை, உரும் ஆனானை,
பருமணியை, பாலோடு அஞ்சு ஆடினானை, பவித்திரனை,
பசுபதியை, பவளக்குன்றை,
திருமணியை, தித்திப்பை, தேன் அது ஆகி, தீம்கரும்பின்
இன்சுவையை, திகழும் சோதி
அருமணியை, ஆவடுதண் துறையுள் மேய அரன்
அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.

6

ஏற்றானை, எண்தோள் உடையான் தன்னை, எல்லில் நடம்
ஆட வல்லான் தன்னை,
கூற்றானை, கூற்றம் உதைத்தான் தன்னை, குரை கடல்வாய்
நஞ்சு உண்ட கண்டன் தன்னை,
நீற்றானை, நீள் அரவு ஒன்று ஆர்த்தான் தன்னை, நீண்ட
சடைமுடிமேல் நீர் ஆர் கங்கை
ஆற்றானை, ஆவடுதண் துறையுள் மேய அரன் அடியே
அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.

7

கைம் மான மதகளிற்றை உரித்தான் தன்னை, கடல் வரை
வான் ஆகாசம் ஆனான் தன்னை,
செம் மானப் பவளத்தை, திகழும் முத்தை, திங்களை,
ஞாயிற்றை, தீ ஆனானை,
எம்மானை, என் மனமே கோயில் ஆக இருந்தானை,
என்பு உருகும் அடியார் தங்கள்
அம்மானை, ஆவடுதண் துறையுள் மேய அரன் அடியே
அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.

8

மெய்யானை, பொய்யரொடு விரவாதானை, வெள்ளடையை,
தண்நிழலை, வெந்தீ ஏந்தும்
கையானை, காமன் உடல் வேவக் காய்ந்த கண்ணானை,
கண்மூன்று உடையான் தன்னை,
பை ஆடு அரவம் மதி உடனே வைத்த சடையானை,
பாய் புலித்தோல் உடையான் தன்னை,
ஐயானை, ஆவடுதண் துறையுள் மேய அரன் அடியே
அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.

9

வேண்டாமை வேண்டுவதும் இல்லான் தன்னை, விசயனை
முன் அசைவித்த வேடன் தன்னை,
தூண்டாமைச் சுடர் விடு நல் சோதி தன்னை,
சூலப்படையானை, காலன் வாழ்நாள்
மாண்டு ஓட உதை செய்த மைந்தன் தன்னை, மண்ணவரும்
விண்ணவரும் வணங்கி ஏத்தும்
ஆண்டானை, ஆவடுதண் துறையுள் மேய அரன் அடியே
அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.

10

பந்து அணவு மெல்விரலாள் பாகன் தன்னை, பாடலோடு
ஆடல் பயின்றான் தன்னை,
கொந்து அணவு நறுங்கொன்றை மாலையானை, கோல
மா நீலமிடற்றான் தன்னை,
செந்தமிழோடு ஆரியனை, சீரியானை, திரு மார்பில்
புரி வெண்நூல் திகழப் பூண்ட
அந்தணனை, ஆவடுதண் துறையுள் மேய அரன்
அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.

11

தரித்தானை, தண்கடல் நஞ்சு, உண்டான் தன்னை; தக்கன்
தன் பெரு வேள்வி தகர்த்தான் தன்னை;
பிரித்தானை; பிறை தவழ் செஞ்சடையினானை; பெரு
வலியால் மலை எடுத்த அரக்கன் தன்னை
நெரித்தானை; நேரிழையாள் பாகத்தானை; நீசனேன் உடல்
உறு நோய் ஆன தீர
அரித்தானை; ஆவடு தண் துறையுள் மேய அரன் அடியே
அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.

திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருஆவடுதுறை
வ.எண் பாடல்
1

திருவே, என் செல்வமே, தேனே, வானோர் செழுஞ்சுடரே,
செழுஞ்சுடர் நல் சோதி மிக்க
உருவே, என் உறவே, என் ஊனே, ஊனின் உள்ளமே,
உள்ளத்தின் உள்ளே நின்ற
கருவே, என் கற்பகமே, கண்ணே, கண்ணின் கருமணியே,
மணி ஆடு பாவாய், காவாய்,
அருஆய வல்வினைநோய் அடையா வண்ணம்!
ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.

2

மாற்றேன், எழுத்து அஞ்சும் என்தன் நாவில்; மறவேன்,
திருவருள்கள்; வஞ்சம் நெஞ்சின்
ஏற்றேன்; பிற தெய்வம் எண்ணா நாயேன், எம்பெருமான்
திருவடியே எண்ணின் அல்லால்;
மேல்-தான் நீ செய்வனகள் செய்யக் கண்டு, வேதனைக்கே
இடம் கொடுத்து, நாளும் நாளும்
ஆற்றேன்; அடியேனை, “அஞ்சேல்!” என்னாய்
ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.

3

வரை ஆர் மடமங்கை பங்கா! கங்கை-மணவாளா! வார்சடையாய்!
நின்தன் நாமம்
உரையா, உயிர் போகப் பெறுவேன் ஆகில், உறு நோய் வந்து
எத்தனையும் உற்றால் என்னே?
கரையா, நினைந்து, உருகி, கண்ணீர் மல்கி, காதலித்து, நின்
கழலே ஏத்தும் அன்பர்க்கு
அரையா! அடியேனை, “அஞ்சேல்!” என்னாய் ஆவடுதண்துறை
உறையும் அமரர் ஏறே!.

4

சிலைத்தார் திரிபுரங்கள் தீயில் வேவச் சிலை வளைவித்து
உமையவளை அஞ்ச நோக்கிக்
கலித்து ஆங்கு இரும்பிடிமேல் கை வைத்து ஓடும் களிறு
உரித்த கங்காளா! எங்கள் கோவே!
நிலத்தார் அவர் தமக்கே பொறை ஆய், நாளும், நில்லா
உயிர் ஓம்பும் நீதனேன் நான்
அலுத்தேன்; அடியேனை, “அஞ்சேல்!” என்னாய்
ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.

5

நறுமாமலர் கொய்து, நீரில் மூழ்கி, நாள்தோறும் நின் கழலே
ஏத்தி, வாழ்த்தி,
துறவாத துன்பம் துறந்தேன் தன்னைச் சூழ் உலகில்
ஊழ்வினை வந்து உற்றால் என்னே?
உறவு ஆகி, வானவர்கள் முற்றும் வேண்ட, ஒலிதிரை
நீர்க்கடல் நஞ்சு உண்டு, உய்யக்கொண்ட
அறவா! அடியேனை, “அஞ்சேல்!” என்னாய்
ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.

6

கோன் நாரணன் அங்கம் தோள்மேல் கொண்டு, கொழு
மலரான் தன் சிரத்தைக் கையில் ஏந்தி,
கான் ஆர் களிற்று உரிவைப் போர்வை மூடி,
கங்காளவேடராய் எங்கும் செல்வீர்;
நான் ஆர், உமக்கு, ஓர் வினைக்கேட(ன்)னேன்?
நல்வினையும் தீவினையும் எல்லாம் முன்னே
ஆனாய்! அடியேனை, “அஞ்சேல்!” என்னாய்
ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.

7

உழை உரித்த மான் உரி-தோல் ஆடையானே! உமையவள்
தம் பெருமானே! இமையோர் ஏறே!
கழை இறுத்த, கருங்கடல் நஞ்சு உண்ட கண்டா!
கயிலாயமலையானே! “உன்பால் அன்பர்
பிழை பொறுத்தி!” என்பதுவும், பெரியோய்! நின்தன்
கடன் அன்றே? பேர் அருள் உன்பாலது அன்றே?
அழை உறுத்து மா மயில்கள் ஆலும் சோலை
ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.

8

உலந்தார் தலைகலன் ஒன்று ஏத்தி, வானோர் உலகம் பலி
திரிவாய்! உன்பால் அன்பு
கலந்தார் மனம் கவரும் காதலானே! கனல் ஆடும்
கையவனே! ஐயா! மெய்யே
மலம் தாங்கு உயிர்ப்பிறவி மாயக் காய மயக்குளே
விழுந்து, அழுந்தி, நாளும் நாளும்
அலந்தேன்; அடியேனை, “அஞ்சேல்!” என்னாய்
ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.

9

பல் ஆர்ந்த வெண்தலை கையில் ஏந்தி, பசு ஏறி, ஊர் ஊரன்
பலி கொள்வானே!
கல் ஆர்ந்த மலைமகளும் நீயும் எல்லாம் கரிகாட்டில் ஆட்டு
உகந்தீர்; கருதீர் ஆகில்,
எல்லாரும் என் தன்னை இகழ்வர் போலும்; ஏழை
அமண்குண்டர், சாக்கியர்கள், ஒன்றுக்கு
அல்லாதார் திறத்து ஒழிந்தேன்; “அஞ்சேல்!” என்னாய்
ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.

10

துறந்தார் தம் தூ நெறிக்கண் சென்றேன் அல்லேன்;
துணைமாலை சூட்ட நான் தூயேன் அல்லேன்;
பிறந்தேன் நின் திரு அருளே பேசின் அல்லால்
பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே;
செறிந்து ஆர் மதில் இலங்கைக் கோமான்தன்னைச்
செறு வரைக்கீழ் அடர்த்து, அருளிச் செய்கை எல்லாம்
அறிந்தேன்; அடியேனை, “அஞ்சேல்!” என்னாய்
ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.