பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
மத்தயானை ஏறி, மன்னர் சூழ வருவீர்காள்! செத்த போதில் ஆரும் இல்லை; சிந்தையுள் வைம்மின்கள்! வைத்த உள்ளம் மாற்ற வேண்டா; வம்மின், மனத்தீரே! அத்தர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே .
தோற்றம் உண்டேல், மரணம் உண்டு; துயரம், மனை வாழ்க்கை; மாற்றம் உண்டேல், வஞ்சம் உண்டு; நெஞ்ச-மனத்தீரே! நீற்றர், ஏற்றர், நீலகண்டர், நிறை புனல் நீள் சடை மேல் ஏற்றர், கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே .
செடி கொள் ஆக்கை சென்று சென்று தேய்ந்து ஒல்லை வீழாமுன், வடி கொள் கண்ணார் வஞ்சனையுள் பட்டு மயங்காதே, கொடி கொள் ஏற்றர், வெள்ளை நீற்றர், கோவண ஆடை உடை அடிகள், கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே .
வாழ்வர் கண்டீர், நம்முள் ஐவர்; வஞ்ச மனத்தீரே! யாவராலும் இகழப்பட்டு, இங்கு அல்லலில் வீழாதே, மூவராயும் இருவராயும் முதல்வன் அவனே ஆம் தேவர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே .
அரித்து நம்மேல் ஐவர் வந்து, இங்கு ஆறு அலைப்பான் பொருட்டால், சிரித்த பல் வாய் வெண்தலை போய் ஊர்ப்புறம் சேராமுன், வரிக் கொள் துத்தி வாள் அரக்கர் வஞ்சம் மதில் மூன்றும் எரித்த வில்லி எதிர்கொள்பாடி என்பது அடைவோமே .
பொய்யர் கண்டீர், வாழ்க்கையாளர்; பொத்து அடைப்பான் பொருட்டால் மையல் கொண்டீர்; எம்மோடு ஆடி நீரும், மனத்தீரே! நைய வேண்டா; இம்மை ஏத்த, அம்மை நமக்கு அருளும் ஐயர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே .
கூசம் நீக்கி, குற்றம் நீக்கி, செற்றம் மனம் நீக்கி, வாசம் மல்கு குழலினார்கள் வஞ்சம் மனை வாழ்க்கை ஆசை நீக்கி, அன்பு சேர்த்தி, என்பு அணிந்து ஏறு ஏறும் ஈசர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே .
இன்பம் உண்டேல், துன்பம் உண்டு; ஏழை, மனை வாழ்க்கை; முன்பு சொன்ன மோழைமையால், முட்டை மனத்தீரே! அன்பர் அல்லால், அணி கொள் கொன்றை அடிகள் அடி சேரார்; என்பர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே .
தந்தையாரும் தவ்வையாரும் எள்-தனைச் சார்வு ஆகார்; வந்து நம்மோடு உள் அளாவி வானநெறி காட்டும் சிந்தையீரே! நெஞ்சினீரே! திகழ் மதியம் சூடும் எந்தை கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே .
குருதி சோர ஆனையின் தோல் கொண்ட குழல் சடையன்; மருது கீறி ஊடு போன மால், அயனும், அறியா, சுருதியார்க்கும் சொல்ல ஒண்ணா, சோதி; எம் ஆதியான்; கருது கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே .
முத்து நீற்றுப் பவள மேனிச் செஞ்சடையான் உறையும் பத்தர் பந்தத்து எதிர்கொள்பாடிப் பரமனையே பணியச் சித்தம் வைத்த தொண்டர் தொண்டன்-சடையன் அவன் சிறுவன், பத்தன், ஊரன்-பாடல் வல்லார் பாதம் பணிவாரே .